Published:Updated:

ரியோ ஒலிம்பிக்கில் ஈரானின் கொடியை ஏந்திய நம்பிக்கை ஒளி

ரியோ ஒலிம்பிக்கில் ஈரானின் கொடியை ஏந்திய  நம்பிக்கை ஒளி
ரியோ ஒலிம்பிக்கில் ஈரானின் கொடியை ஏந்திய நம்பிக்கை ஒளி

ரியோ ஒலிம்பிக்கில் ஈரானின் கொடியை ஏந்திய நம்பிக்கை ஒளி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

    உலகின் மிகப்பெரிய திருவிழா தொடங்கிவிட்டது. ஜிகா வைரஸ், பொருளாதார வீழ்ச்சி, கிரிமினல் குற்றங்கள் போன்ற அனைத்து பிரச்னைகளையும் கடந்து வெற்றிகரமாக மரக்கான மைதானத்தில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிவிட்டது பிரேசில். கண்கவர் கலைநிகழ்ச்சிகளோடு நடந்த வண்ணமயமான துவக்க விழா அனைவரையும் ஈர்த்தது. ஆனால் மொத்த அரங்கமும் அதிசயித்த தருணம் நாடுகளின் அணிவகுப்பின்போது நடந்தது. உடல் குறைபாடுகள் சாதிப்பதற்கு எந்த வகையிலும் தடையில்லை என்று ஒவ்வொருவருக்கும் புரிய வைத்தது அவ்வணிவகுப்பு.

    ஒரு காலத்தில் பெண்களை ஒலிம்பிக் போட்டிகளுக்கே அனுமதிக்காத ஈரான் நாட்டின் தேசியக் கொடியை ஒரு பெண் ஏந்தி வந்தது இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.  அதையும் தாண்டி தேசியக் கொடியை ஏந்தி வந்த அப்பெண் மாற்றுத்திறனாளி என்பது தான் மேலும் சிறப்பு. வில்வித்தையில் பாராலிம்பிக் சாம்பியனான சாரா நெமாடி தன் தாய்நாட்டின் தேசியக் கொடியை ஏந்தி வரும் மிகப்பெரிய கவுரவத்தைப் பெற்றார்.

    டேக்வாண்டோவில் சாதித்து ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று நினைத்த நெமாடியின் வாழ்க்கையில் பேரிடி விழுந்தது. ஓர் கார் விபத்தால் இளம் வயதிலேயே இவரது கால்கள் செயலிழந்தன. கால்களே மூலதனமான டேக்வாண்டோ விளையாட்டில் பிளாக் பெல்ட் வாங்கிய அந்த வீராங்கனையால் இனி அவ்விளையாட்டைப் பற்றி நினைத்தே பார்க்க முடியாத நிலை. மனதில் உறுதி கொண்ட ஒரு பெண் பூகம்பமே வந்தாலும் இடுக்குகளுக்கு இடையே பூவாய் பூப்பாள். அப்படித்தான் மீண்டெழுந்தார் நெமாடி. அவர் இழந்தது கால்களின் செயல்பாட்டை மட்டும் தான். ஆனால் நம்பிக்கையை அல்ல. டேக்வாண்டோவை விட்டுவிட்டு வில்வித்தையை தேர்வு செய்தார் நெமாடி. அடுத்த ஆறே மாதங்களில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்றாம் இடம் பிடித்து அசத்தினார்.

    ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும் என்ற அவரது வேட்கை அவரை தீயாய் எரிய வைத்தது. உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு இணையாக பட்டையைக் கிளப்பிய நெமாடி, 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று அசத்தினார். தனிநபர் ரீ-கர்வ் பிரிவில் தங்கமும், குழு பிரிவில் வெண்கலமும் வென்று அசத்திய நெமாடி அதோடு நின்றுவிடவில்லை. எதற்காக பாராலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும். பிரச்சனை காலில் தானே. தனது குறியிலும் மனதிலும் பிரச்சனைகள் ஏதும் இல்லையே. பிறகு என்ன? தனது குறையை தூக்கி எறிந்தார். இதோ ரியோ ஒலிம்பிக்கில் உலகின் தலைசிறந்த வில்வித்தை வீராங்கனைகளுக்குப் போட்டியாக களமிறங்குகிறார் இந்த இரும்புப் பெண்.

    வலிகளைத் தாண்டி யாராலும் சாதிக்க முடியும் என்பதற்கு நெமாடி மிகப்பெரிய உதாரணம். கடந்த ஒலிம்பிக்கில் ஓட்டப்பந்தய வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் 800 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்று அனைவரையும் அசத்தியது போல் இம்முறை பிரேசிலைக் கலக்கக் காத்திருக்கிறார் நெமாடி. வெற்றி என்பது பதக்கம் வெல்வது மட்டுமல்ல. வாழ்க்கையோடு போராடி வலிகளை வென்று இந்த மகத்தான நிலையை அடைந்திருப்பதே ஒரு மிகப்பெரிய வெற்றி தான். அந்த வகையில் இந்த ஒலிம்பிக்கின் முதல் வெற்றியாளர் நெமாடி தான்!

மு.பிரதீப் கிருஷ்ணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு