Published:Updated:

ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள் : தங்கப்பதக்கம் இல்லாத ஒலிம்பிக்! |அத்தியாயம் 4

Olympics ( Vikatan )

அவரை மகிழ்விப்பதற்காகப் பண்டைய கிரேக்கர்கள், கிரீஸின் ஒலிம்பியா நகரத்தில் விழா எடுத்தார்கள். அதன் ஒரு பகுதியாக தடகளப் போட்டிகளை நடத்தினார்கள்.

ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள் : தங்கப்பதக்கம் இல்லாத ஒலிம்பிக்! |அத்தியாயம் 4

அவரை மகிழ்விப்பதற்காகப் பண்டைய கிரேக்கர்கள், கிரீஸின் ஒலிம்பியா நகரத்தில் விழா எடுத்தார்கள். அதன் ஒரு பகுதியாக தடகளப் போட்டிகளை நடத்தினார்கள்.

Published:Updated:
Olympics ( Vikatan )

அவர் பெயர் ஜீயஸ். ஒலிம்பியா மலையில் வாழ்பவர்; வானத்தின் கடவுள்; அதில் தோன்றும் இடியின் கடவுளும் அவரே; கடவுள்களுக்கெல்லாம் அரசரும் அவரே; காமத்தில் கரைகண்டவர்; பெண்களை ஆராதிப்பவர்.  மன்னிக்கவும். கடவுளல்லவா. அப்படிச் சொல்லக்கூடாது. ஏகப்பட்ட பெண்களுக்கு வாழ்க்கை அளித்தவர். அதனால், ஏகப்பட்ட கடவுள்களை வாரிசாகக் கொண்டவர். இப்பேர்ப்பட்ட பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஜீயஸ் என்கின்றன கிரேக்க புராணங்கள்.

ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள் : தங்கப்பதக்கம் இல்லாத ஒலிம்பிக்! |அத்தியாயம் 4

அவரை மகிழ்விப்பதற்காகப் பண்டைய கிரேக்கர்கள், கிரீஸின் ஒலிம்பியா நகரத்தில் விழா எடுத்தார்கள். அதன் ஒரு பகுதியாக தடகளப் போட்டிகளை நடத்தினார்கள். பண்டைய கிரேக்கத்தின் வெவ்வேறு நகரங்களை, ராஜ்ஜியங்களைச் சேர்ந்தவர்கள் மோதிக் கொண்டார்கள். கிமு 776 முதல் கிபி 393 வரை பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் (பொதுவாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை) நடைபெற்றன. கிபி 393ல் கிறித்துவ மதத்தை அரச மதமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக பாரம்பரிய ஒலிம்பிக் போட்டிகள் நிறுத்தப்பட்டன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிலர், ஒலிம்பிக் என்ற பெயரில் சிறிய அளவில் போட்டிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தி வந்தனர். இதையெல்லாம் பிரெஞ்சுக் கல்வியாளரும் வரலாற்று ஆய்வாளருமான பியெரி டி கோபெர்டின் கவனித்து வந்தார். அவருக்கு சர்வதேச அளவில் பல தேச வீரர்களை வரவழைத்து விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும்; பண்டைய ஒலிம்பிக்குக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சமூகத்தில் பெரும் செல்வாக்குடன் இருந்த கோபெர்டின், பலருடன் இணைந்து அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார். 1894ல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை உருவாக்கினார். முதல் நவீன ஒலிம்பிக் போட்டியை, அதன் பிறப்பிடமான கிரீஸில் 1896 ஏப்ரலில் நடத்த முடிவு செய்தார்கள். இப்படியாக ஒலிம்பிக்குக்கு புத்துயிர் கொடுத்த கோபெர்டின், நவீன ஒலிம்பிக்கின் தந்தையாக வரலாற்றில் இடம்பிடித்தார்.

ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள் : தங்கப்பதக்கம் இல்லாத ஒலிம்பிக்! |அத்தியாயம் 4

கிமு ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பான்ஏதெனிக் என்ற விளையாட்டரங்கம், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, முதல் ஒலிம்பிக்குக்காக மீண்டும் புதுப்பிக்கப்பட்டது, 60 ஆயிரம் பேர் அமரும் வகையில். கிரீஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பல்கேரியா, சிலி, டென்மார்க், இத்தாலி, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஹங்கேரி, ஆஸ்திரியா ஆகிய 14 நாடுகள் முதல் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டன. ஆசியாவிலிருந்து எந்த நாடும் இடம்பெறவில்லை. ஏப்ரல் 6 அன்று ஆரம்பித்த ஒலிம்பிக்கில் கிரீஸின் அரசர் முதலாம் ஜார்ஜ் கலந்து கொண்டார். கிரேக்கக் கவிஞர் காஸ்டிஸ் பலாமாஸ் இயற்றி, கிரேக்க இசைக்கலைஞர் ஸ்பைரைடான் சமராஸ் இசையமைத்த ‘ஒலிம்பிக் கீதம்’ பாடப்பட்டது.

போட்டியில் கலந்து கொண்டவர்களெல்லாம் முறையாகப் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்கள் இல்லை. ஏதாவது விளையாட்டு கிளப்களில் உறுப்பினராக இருந்தவர்கள், விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள், ‘சும்மா போய்த்தான் பார்ப்போமே’ என்ற ஆர்வக்கோளாறில் வந்தவர்கள் என்று விதவிதமான கேரக்டர்கள் கலந்துகொண்ட ஒலிம்பிக்ஸ் அது.

இந்த ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்களுக்கே பரிசு வழங்கப்பட்டது. அதிலும் பட்ஜெட் கட்டுப்படியாகாது என்பதால் தங்கம் கிடையாது. முதல் பரிசு வெள்ளிப் பதக்கம், ஆலிவ் மாலை. இரண்டாம் பரிசு தாமிரப் பதக்கம், லாரல் மாலை. மூன்றாவது இடம்பிடித்தவர் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டாலும் எதுவும் கிடையாது.

1896 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகளும் இருந்தன. ஆனால், அதற்கென தனியாக நீச்சல் குளம் கட்டப் பணம் இல்லை. ‘எல்லாரும் படகுல ஏறுங்க. ஏறியாச்சா? கடலுக்குள்ள போப்பா!’ என்று நீச்சல் வீரர்களை குறிப்பிட்ட தொலைவுக்கு கடலுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கிருந்து குதித்து கரையை நோக்கி நீந்தச் செய்தனர். ஆக்ரோஷ அலைகள், கடும் குளிர், கடல் நீச்சலில் அனுபவமின்மை போன்ற காரணங்களினால் பலரும் திணறினர். உயிர் பயம் சூழ மீண்டும் படகைத் தேடினார்கள்.

அந்தக் கடலுக்குப் பழகிய கிரீஸ் வீரர்களையே சுலபமாக முந்திக் கொண்டு சென்றார் அல்பிரெட் ஹாஜோஸ் என்ற ஹங்கேரிய வீரர். அசத்தலாக நீந்தி வேகவேகமாகக் கரையேறினார். 100மீ, 1200மீ ஃப்ரீஸ்டைல் பிரிவுகளில் முதலிடம் பிடித்தார் ஹாஜோஸ். 500 மீட்டர் போட்டியிலும் நீந்த அவருக்கு ஆசைதான். ஆனால், 100மீ போட்டி முடிந்த உடனேயே 500 மீ ஆரம்பித்ததால் ஹாஜோஸால் கலந்து கொள்ள முடியவில்லை. மறுநாள், ‘ஹங்கேரியின் டால்பின்’ என்று பத்திரிகைகள் ஹாஜோஸைப் புகழ்ந்தன.

ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள் : தங்கப்பதக்கம் இல்லாத ஒலிம்பிக்! |அத்தியாயம் 4

ஹாஜோஸின் நினைவில் தன் பதின்மூன்றாவது வயதில் நிகழ்ந்த மறக்கவியலாத துன்பியல் சம்பவம் நிழலாடியது. அவர் கண்முன்பாகவே அவரது தந்தை ஆற்றில் மூழ்கி இறந்து போனார். ‘என் அப்பாவுக்கு நீச்சல் தெரிந்திருந்தால் பிழைத்திருப்பார் அல்லவா’ - கண்கள் கசிந்தன. தந்தையின் இழப்புதான் ஹாஜோஸை வெறியுடன் நீச்சல் கற்க வைத்தது என்பது சோகமான பின்னணி .

அமெரிக்க வீரரான ராபர்ட் காரெட், குண்டு எறிதலில் பயிற்சி பெற்றவர். ‘கிரீஸ் ஒலிம்பிக்ஸ்ல வட்டு எறியுற போட்டி இருக்குது. குண்டுக்கு பதிலா வட்டு. அவ்வளவுதான். நீ வேணா போய்ப்பாரு’ என்று ஒருவர் ஆலோசனை சொன்னார். ராபர்ட் தனக்குத் தெரிந்த கொல்லரிடம் வட்டு ஒன்றை செய்யச் சொன்னார். அவர் கற்பனையில் செய்து கொடுத்த வட்டு 14 கிலோ இருந்தது. ‘இவ்வளவு கனமெல்லாம் எறிய முடியாது. உருட்டித்தான் விடணும். வட்டே எறிய வேண்டாம்!’ என்று பின்வாங்கினார் ராபர்ட்.

ஏதென்ஸில் பயன்படுத்தப்படும் வட்டு சுமார் இரண்டே கால் கிலோதான் இருக்கும் என்ற உண்மை தெரிந்தபின், சந்தோஷமாகப் பெட்டி படுக்கையுடன் ஏதேன்ஸ் கிளம்பினார் ராபர்ட். வட்டு எறிதல் கிரீஸின் பாரம்பரிய விளையாட்டு. கிரீஸ் வீரரும் வட்டு எறிதலில் கில்லியுமான பனோஜியோடிஸ் என்பவர், ஸ்டைலாக வட்டு எறிய மைதானம் அதிர்ந்தது. ‘ஓ, இப்படித்தான் எறிய வேண்டுமா’ என்று அவரைப் பார்த்து கற்றுக் கொண்டு ராபர்ட் களமிறங்கினார். அவர் எறிந்த வட்டு பார்வையாளர்கள் மத்தியில் சென்று விழ, மைதானத்தில் சிரிப்பொலி. பின் மூச்சைப்பிடித்து, முக்கி முனகி முழு மூச்சுடன் வட்டை எறிந்தார். 29.15 மீ சென்று விழுந்தது. மைதானமே மூர்ச்சையானது. ஆம், ராபர்ட்டுக்கே முதலிடம். தவிர, குண்டு எறிதலிலும் முதலிடம் பிடித்தார். மறக்காமல் தன்னை ஒருமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டார் ராபர்ட். அந்தளவுக்கு அவருக்கே அதிர்ச்சியாக இருந்தது, அவரது சாதனை.

ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள் : தங்கப்பதக்கம் இல்லாத ஒலிம்பிக்! |அத்தியாயம் 4

1900ல் பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கும் ராபர்ட், வட்டையும் குண்டையும் தூக்கிக் கொண்டு போனார். வட்டு எறிதலில் ஏதென்ஸில் கைகொடுத்த அதிர்ஷ்டம், பாரிஸில் கைவிட்டது. முறையான பயிற்சி இன்றி எறிந்ததால் காற்றில் வட்டு சகல திசைகளிலும் பறந்தது. சிலமுறை மரங்களில் மோதி விழுந்தது. ராபர்ட் தகுதி இழந்தார்.

அதேசமயம், குண்டு எறிதலில் சுலபமாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். ஆனால், அதில் அவர் கலந்து கொள்ளவில்லை. காரணம், இறுதிப்போட்டி ஞாயிறு அன்று நடைபெற்றது. ‘அடப்போங்கய்யா! சன்டே எனக்கு ஹாலிடே!’ என்று ஹாயாக இருந்துவிட்டார் ராபர்ட் காரெட்.
 

முதலாம் ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ‘பெண்களா? அவங்க மைதானத்துல இறங்கி விளையாடறது சரிப்படாது. ஒழுக்கம் கெட்டுப் போயிரும். அதுக்கான தகுதியும் திறமையும் அவங்களுக்குக் கிடையாது. போட்டியெல்லாம் சுவாரசியமா இருக்காது. அதனால பெண்கள், தங்களோட மகன்களை திறமையா, வலிமையா வளர்த்து போட்டிக்கு அனுப்புற வேலையைப் பார்த்தா மட்டும் போதும்’ என்று பெண்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைத்தார் ஒலிம்பிக்கின் தந்தை கோபெர்டின். தவிர, பண்டைய ஒலிம்பிக்கிலும் பெண்களுக்கு இடமிருந்ததில்லை.

அது பல பெண்களுக்குக் கோபத்தைக் கொடுத்தது. அதில் ஒரு பெண் மட்டும், இந்தத் தடையை எல்லாம் மீறி ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்க்கமாகக் களமிறங்கினாள். தான் மட்டும் அதில் கலந்து கொண்டு சாதித்துவிட்டால், தனக்குப் பெயர் கிடைக்கும், புகழ் கிடைக்கும், ஆணாதிக்க மனப்பான்மையை ஒழியும். பெண்களும் விளையாடுவதற்கான தடை உடையும். அனைத்தையும்விட தன் வறுமைக்கு ஒரு தீர்வும் உண்டாகும். யோசித்த அந்தப் பெண், மாரத்தான் ஓட்டத்தைத் தொடங்குவதற்காக ஆண் வீரர்கள் குவிந்திருந்த அந்த ஊருக்கு வந்து சேர்ந்தாள், தனி ஒருத்தியாக.

அத்தனைக் கண்களும் அவளை ஏளனமாகப் பார்த்தன!

(டைரி புரளும்...) - முகில்