Published:Updated:

ரியோ ஒலிம்பிக்கின் 5 'லேடி' சூப்பர் ஸ்டார்கள்!

ரியோ ஒலிம்பிக்கின் 5 'லேடி' சூப்பர் ஸ்டார்கள்!
ரியோ ஒலிம்பிக்கின் 5 'லேடி' சூப்பர் ஸ்டார்கள்!

ரியோ ஒலிம்பிக்கின் 5 'லேடி' சூப்பர் ஸ்டார்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரியோ ஒலிம்பிக் தொடர் நாளை தொடங்குகிறது. வீரர், வீராங்கனைகள் ரியோவில் குவிந்துவிட்டனர். இந்த ஒலிம்பிக்கை பொறுத்தவரை 5 வீராங்கனைகள் உற்று கவனிக்கப்பட வேண்டியவர்கள். 'லேடி 'சூப்பர் ஸ்டார்களான அவர்களைப் பற்றி பார்ப்போம்.

ஜப்பான் அணியின் முதல் பெண் கேப்டன்

ஜப்பான் குழுவின் தலைவர் சோரி யோஷிடா இதில் முதன்மையானவர். அபாரத் திறமை கொண்ட மல்யுத்த வீராங்கனை. கடந்த 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில்தான் முதன்முறையாக மகளிருக்கான மல்யுத்தப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இருந்து லண்டன் ஒலிம்பிக் வரை 55 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் தொடர்ந்து தங்கம் வெனறு வருகிறார் யோஷிடா.  தற்போது 33 வயதான இவர் 13 முறை உலகச் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியவர்.

லண்டன் ஒலிம்பிக்கில் ஜப்பான் குழுவுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு தேசியக் கொடியை ஏந்தி செல்லும் பெருமை யோஷிடாவுக்கு வழங்கப்பட்டது.  ஜப்பான் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் வீராங்கனையும் இவர்தான். இவரது தந்தை எக்காஸ்ட் யோஷிடாவும் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன்தான். தற்போது ஜப்பான் அணிக்கு மல்யுத்த பயிற்சியாளராக இருக்கிறார். ''மூன்று தங்கப்பதக்கங்களுடன் திருப்தி அடைந்து விடப் போவதில்லை நான்காவது தங்கமே இலக்கு'' என்று கர்ஜிக்கிறார் யோஷிடா.

செமன்யாவும் பாலின சர்ச்சையும்...

தடகள வீராங்கனை காஸ்டர் செமன்யா, தென்ஆப்ரிக்காவின் அதிவேக 'ஸ்பிரின்டர்'. ரியோ ஒலிம்பிக்கில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வெல்லும் வாய்ப்பு மட்டுமல்ல, உலக சாதனையும் கூட படைப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் செமன்யா தங்கம் வென்றார். செமன்யாவுக்கும், அப்போதைய உலகச் சாம்பியனும் இந்த ஓட்டத்தில் வெள்ளி வென்றவருமான கென்ய வீராங்கனை ஜெனத்துக்கும்  வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமானதாக இருந்தது.  இதனைத் தொடர்ந்து செமன்யா பாலின பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார். அவரது உடலில் ஆண்களுக்கான ஹார்மோன்கள் அதிகமாக இருப்பதாகவும் ஆண்தன்மை நிறைந்தவர் என்றும் புகார் எழுந்தது.

இந்த சர்ச்சையால் 11 மாதங்கள் அவரால்,  போட்டியில் பங்கேற்க முடியாத நிலை. ஆனால் தென்ஆப்ரிக்காவே செமன்யாவுக்கு பின்னால் இருந்தது. பல போராட்டத்திற்கு பின் மீண்டும் தடகளம் திரும்பிய அவர், 2011ம் ஆண்டு உலகத்தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றார். லண்டன் ஒலிம்பிக் தொடக்க விழாவில் தென்ஆப்ரிக்கத் தேசியக் கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் செமன்யாவுக்கு வழங்கப்பட்டது. 

லண்டன் ஒலிம்பிக்கில் செமன்யா வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார். ரியோவில் தங்கத்தை குறி வைத்துள்ளார் செமன்யா. தற்போது, ''வீராங்கனைகளிடம் ஆண்களுக்கான ஹார்மோன்கள் அதிகமாக இருப்பது, அவர்களது தடகளத் திறமைக்கு உந்து சக்தியாக இருக்கிறது என்பதற்கு போதுமான அறிவியல்பூர்வமான  ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை '' என லாசானேவில் உள்ள சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

குழந்தை பிறப்பு ஒரு தடையல்ல...

தடகளமே கடினமானது. அதுவும் ஹெப்டத்லான் பற்றி சொல்லவே வேண்டாம். 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், ஹைஜம்ப், லாங் ஜம்ப், ஷாட் புட், 200 மீட்டர் ஓட்டம், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஓட்டம் என 7 விளையாட்டுகள்  அடங்கிய கடுமையான ஒரு பிரிவு ஹெப்டத்லான். இத்தகைய கடின விளையாட்டில் பங்கேற்கும் ஜெசிகா என்னிஸ் ஹில் பிரிட்டனை சேர்ந்தவர்.

லண்டன் ஒலிம்பிக்கில் ஹெப்டத்லானில் 6,955 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றவர். ரியோவிலும் தங்கம் கைப்பற்றினால், குழந்தை பிறந்த பிறகு பதக்கத்தை தக்க வைத்துக் கொண்ட 3வது தடகள வீராங்கனை என்ற பெருமையை ஜெசிகா பெறுவார். கடந்த 2014ம் ஆண்டு ஜெசிகாவுக்கு மகன் பிறந்தான். அவனுக்கு ரெஜ்ஜி என பெயர் சூட்டிய கையோடு மீண்டும் பயிற்சிக்குத் திரும்பிய ஜெசிகா, அடுத்த ஆண்டே பெய்ஜிங்கில் நடந்த உலகத் தடகளப் போட்டியில் ஹெப்டத்லானில் தங்கம் வென்று அசத்தினார்.  ரியோவிலும் ஜெசிகாவுக்குதான் தங்கப் பதக்கத்திற்கான வாய்ப்பு இருக்கிறது.

'லேடி' பீலே

மார்த்தா... பிரேசிலிய கால்பந்து வீராங்கனை. சூரியன் ஷேடோவில் இருக்கும் சந்திரன் போல, பிரேசில் கால்பந்து வீரர்கள் புகழில் மறைந்து வாழும் பரிதாப ஜீவன். பீலேவை தெரியும்; ரொனால்டோவைத் தெரியும்; ரொனால்டினோவைத் தெரியும்; ஆனால் மார்த்தா என்றால் யார் என கேட்கும் கால்பந்து ‘உலகம். இவரும் மெஸ்சியை போல் 5 முறை 'பல்லான் டி ஓர் '(தங்கப்பந்து விருது)விருதை வென்றவர்தான். அதுவும் 2006 முதல் 2010ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 5 முறை கால்பந்து உலகின் கௌரவ விருதை கைப்பற்றிய வீராங்கனை.

ஆடவர் கால்பந்து அணிபோல போல பிரேசில் மகளிர் கால்பந்து அணி வெற்றிகளை குவித்ததில்லை. உலகக் கோப்பையை இதுவரை வென்றதில்லை. ஒரே ஒரு முறை இறுதி ஆட்டம் வரை முன்னேறியது. ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றதில்லை. இந்த முறை தாய் மண்ணில் போட்டி நடைபெறுவதால் பிரேசில் அணி கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கிறது. அப்படி வென்றால் அதற்கு மார்த்தா காரணமாக இருப்பார்.

ஜமைக்காவின் 'பாக்கெட் ராக்கெட்'

ஷெல்லி ஆன் ஃபிரேசர்... ஜமைக்காவின் தடகள ராணி. 'பாக்கெட் ராக்கெட்' என்பது ஷெல்லியின் செல்லப் பெயர். 100 மீட்டர் ஓட்டத்தில் அடித்துக் கொள்ள ஆள் கிடையாது. பெய்ஜிங் மற்றும் லண்டன் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றவர். இப்போது ரியோ ஒலிம்பிக்கிலும் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கத்தை குறி வைத்துள்ளார்.

இன்னொரு விஷயம், 100 மீட்டர் ஓட்டத்தில் எந்த வீராங்கனையும் 'ஹாட்ரிக் ' தங்கம் வென்றது கிடையாது. ரியோவில் ஷெல்லி தங்கம் வென்றால், புதிய வரலாறு படைப்பார். லண்டன் ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டத்தில் ஷெல்லி, வெள்ளி வென்றிருந்தார். ட்ரையல்சின்போது காயமடைந்த காரணத்தினால், இந்த ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கவில்லை. ஒலிம்பிக்  தொடக்க விழாவின்போது, ஜமைக்காவின் தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார் ஷெல்லி.

- எம்.குமரேசன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு