Published:Updated:

ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள்: ‘அமைதியின் கடவுள்’ ஹிட்லர்! - அத்தியாயம் 2

ஒலிம்பிக்ஸ் ( விகடன் )

இதுவரை உலகில் நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளில் ஹிட்லர் நடத்திய பெர்லின் ஒலிம்பிக்போல் பிரமாண்டமான ஒன்றை யாம் வேறெங்கும் கண்டதில்லை பராபரமே! இப்படி சகல தேசத்தினரும் வியந்தே வீழ்ந்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்தார் கோயபெல்ஸ்.

ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள்: ‘அமைதியின் கடவுள்’ ஹிட்லர்! - அத்தியாயம் 2

இதுவரை உலகில் நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளில் ஹிட்லர் நடத்திய பெர்லின் ஒலிம்பிக்போல் பிரமாண்டமான ஒன்றை யாம் வேறெங்கும் கண்டதில்லை பராபரமே! இப்படி சகல தேசத்தினரும் வியந்தே வீழ்ந்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்தார் கோயபெல்ஸ்.

Published:Updated:
ஒலிம்பிக்ஸ் ( விகடன் )

‘அமைதியின் கடவுள்’ ஹிட்லர்!

இதுவரை உலகில் நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளில் ஹிட்லர் நடத்திய பெர்லின் ஒலிம்பிக்போல் பிரமாண்டமான ஒன்றை யாம் வேறெங்கும் கண்டதில்லை பராபரமே! இப்படி சகல தேசத்தினரும் வியந்தே வீழ்ந்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்தார் கோயபெல்ஸ்.
ஒலிம்பிக் ஏற்பாடுகளுக்காகவே ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டது. சர்வ வசதிகளுடனும் கூடிய, ஒரு லட்சம் பேர் அமரும் விதத்தில் ஒலிம்பிக் ஸ்டேடியம் அதிவேகமாகத் தயாரானது. 130 ஏக்கர் பரப்பளவில், ஜெர்மனியின் வரைபட வடிவில், சர்வதேச வீரர்களும் தங்கும் வகையிலான ஒலிம்பிக் கிராமம் இயற்கையான சூழலில் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டது.

ஒலிம்பிக்ஸ்
ஒலிம்பிக்ஸ்
விகடன்

ஒவ்வொரு நாட்டின் வீரர்களுக்கும் தனித்தனி குடியிருப்புகள்; எல்லா வசதிகளும் நிறைந்த 160 கான்கிரீட் வீடுகள்; அந்தந்த நாட்டின் மொழி பேசத் தெரிந்த உதவியாளர்கள்; அந்தக் குடியிருப்புகளில் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள்.  வீரர்களுக்கு அவர்களது சொந்த நாட்டின் உணவுக் கலாசாரத்துக்கேற்ற வகையில் உணவுகள் வழங்கப்பட்டன. தவிர, அவர்களது படுக்கை அறைகூட, அந்தந்த நாடுகளுக்கேற்ப அமைக்கப்பட்டன.

உடற்பயிற்சிக்கான வசதிகள், நீச்சல் குளங்கள், 400 மீ தடகளப் பாதை, வங்கி, அஞ்சலகம் போன்ற வசதிகளும் உண்டு. அனைத்து வீரர்களும் இந்தக் கவனிப்பில் திக்குமுக்காடிப் போனார்கள்.
ஒலிம்பிக்கைக் காண பெர்லினுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், ஜெர்மானியர்களின் பணிவான வரவேற்பை, அன்பான உபசரிப்பை, வியத்தகு விருந்தோம்பலைக் கண்டு நெக்குருகிப் போனார்கள். ‘ச்சே! ஹிட்லரைப் போய் தப்பா நெனைச்சுட்டோமே!’ என்று நொந்து கொண்டார்கள். பெர்லின் சாலைகளும் தெருக்களும் அவ்வளவு சுத்தமாக மின்னின. நகரமெங்கும் விதவிதமான சிலைகள், அலங்காரங்கள் அசத்தின. ஒலிம்பிக் சார்ந்த நிகழ்ச்சிகள், பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் கண்களை நிறைத்தன.

 ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள்: ‘அமைதியின் கடவுள்’ ஹிட்லர்! - அத்தியாயம்  2

அதுவரை அவர்கள் கேள்விப்பட்ட ‘இனவெறி சமாசாரங்கள்’ எதுவுமே எங்கும் தென்படவில்லை. ‘ஐ லவ் ஜெர்மனி!’ என்று சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வாயார ‘குட் சர்டிபிகேட்’ கொடுத்தார்கள். வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், இதர ஊடகத்தினரும் நல்ல முறையில் கவனிக்கப்பட்டனர். மிதமிஞ்சிய மரியாதையுடன் நடத்தப்பட்டனர். ஆக, சர்வதேச அளவிலும் செய்திகள் ‘சிறப்பாகவே’ வெளிவந்தன.

‘தன் மேலுள்ள அத்தனைக் களங்கங்களையும் துடைத்தெறிய இந்த வாய்ப்பை ஜெர்மனி அருமையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. இன்றைய தேதியில் உலகிலேயே அமைதியாக, அழகாக வாழ்பவர்கள் பெர்லின் நகர மக்களே!’ - தி நியு யார்க்கர் இதழ் கொண்டாடியது. ‘தற்போது ஜெர்மானியர்கள் மிகச்சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்று உலகிலிருக்கும் மிகச்சிறந்த அரசியல் தலைவர்களில் ஹிட்லரும் ஒருவர்’ - நியு யார்க் டைம்ஸ் உச்சி மோந்தது. ஹிட்லருக்கு பரம திருப்தி. ஆகவே, கோயபெல்ஸுக்கு 100மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வாங்கிய திருப்தி.

 ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள்: ‘அமைதியின் கடவுள்’ ஹிட்லர்! - அத்தியாயம்  2

1936, ஆகஸ்ட் 2; பதினோராவது ஒலிம்பிக் தொடக்க விழா; லட்சம் பேர் மைதானத்தில் நிரம்பி வழிந்தார்கள்; மூவாயிரம் பேர் சேர்ந்திசைப் பாடல் ஒன்றைப் பாட, மறைந்த ஜெர்மனியின் அதிபர் ‘ஹிண்டென்பெர்க்’ பெயரிடப்பட்ட மாபெரும் விமானம் ஒன்று, மைதானத்தை ஜெர்மனியின் கொடியுடன் கடந்து சென்றது. ஜெர்மானியர்கள் தேச பக்தி பொங்க மெய் சிலிர்த்தார்கள். ஹிட்லர், கையில் பூங்கொத்தை ஏந்தியபடி, ஒரு சிறுமியுடன் ‘அமைதியின் கடவுள்’ போல மைதானத்துக்குள் பிரசன்னமானார். அந்தப் பொழுதில் 360 டிகிரியிலும் நாஜி சல்யூட். ஹிட்லரைப் புகழ்ந்து ஓயாத

 ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள்: ‘அமைதியின் கடவுள்’ ஹிட்லர்! - அத்தியாயம்  2

கோஷங்கள். சர்வதேசப் பார்வையாளர்கள் பிரமித்துப் போனார்கள். ஜெர்மானியர்கள் ஹிட்லர் மேல் இவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்களா! ஹிட்லர் இத்தனை வலிமையானவரா!

 20000 வெண்புறாக்கள் சிறகடித்துப் பறக்க, ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. பலத்த ஆரவாரத்துக்கிடையே ஹிட்லர், மைதானமே அதிரும் குரலில் உரையாற்றினார். ‘இப்போதும் சரி, எப்போதும் சரி, நான் அமைதியையே விரும்புகிறேன். நாம் அத்தகைய அமைதியான உலகில் என்றும் வாழ்வோம்!’ என்று அவர் பேசிய பேச்சுக்கு அமைதிக்கான நோபல் பரிசைத் தூக்கி விட்டெறிந்திருக்கலாம். மைதானத்தில் பறக்கவிடப்பட்ட பல்லாயிரம் புறாக்கள் அங்கேயே சுற்றி வந்தன.

தொடக்க விழாவின் ஒரு நிகழ்வாக பீரங்கிகள் முழங்க, புறாக்களுக்கு அடிவயிறு கலங்கிவிட்டது. ஹாயாக வாய் பிளந்து கண்டுகளித்த பார்வையாளர்கள் மேல் ஆய்! தலைகளும் தொப்பிகளும் நாசமாயின. சலசலப்பு; அருவருப்பு; கலகலப்பு.  அதில் ஏதேனும் ஒரு யூதப் புறா ஹிட்லரைத் தேடிப்பிடித்து அவர் மீது எச்சமிட்டதா என்பது குறித்த வரலாற்று புருடாக்கள் ஏதுமில்லை.

பெர்லின் ஒலிம்பிக்ஸ் முதல் நாள் நிகழ்வுகள் : வீடியோ


Leni Riefenstahl - நாஜிக்களுக்கான பிரசாரப் படங்கள் எடுத்துக் கொடுத்த ஜெர்மனியின் பெண் இயக்குநர். நடிகை, நடனப்பெண், புகைப்படக்காரர் என்று லெனிக்குப் பல முகங்கள் உண்டு. புதிய கருவிகளைக் கொண்டு, நவீன உத்திகளில், ஆச்சரியமான கோணங்களில் படமெடுக்கும் திறமை கொண்ட லெனியின் திறமை ஹிட்லருக்குப் பிடிக்கும். நாஜியின் அதிகாரபூர்வ ஃபிலிம் மேக்கரான லெனி, ஒலிம்பிக் நிகழ்வுகள் பலவற்றையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் படம் பிடித்தார். பெர்லின் நகருக்குள் இருபத்தைந்து இடங்களில் திரைகட்டி, ஒலிம்பிக் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

முப்பத்து மூன்று கேமராமேன்கள், சுமார் பத்துலட்சம் அடி நீளமுள்ள காட்சிகளைப் பதிவு செய்தார்கள். பெர்லின் ஒலிம்பிக்ஸின் பிரமாண்டம் அதில் அச்சு அசலாகப் பதிவு செய்யப்பட்ட லெனியின் ஆவணப்படம், இரண்டு பாகங்களாக 1938 ஏப்ரலில் வெளியிடப்பட்டு, சர்வதேச அளவில் பெருத்த வரவேற்பைப் பெற்றது. காட்சிகள் சரியாகத் தெரியவில்லை, தெளிவில்லை என்று குறைகள் எழுந்தாலும், ஒலிம்பிக் வரலாற்றில் தொலைக்காட்சி உபயோகப்படுத்தப்பட்டது அதுவே முதல்முறை.

தொடக்க விழாவில் 51 நாடுகளைச் சேர்ந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் அகர வரிசைப்படி அணிவகுத்து வந்தனர். இந்திய வீரர்கள் இங்கிலாந்தின் கொடியை ஏந்தி வந்தனர். பிரான்ஸ் வரும்போது, ஜெர்மானியர்களிடையே சலசலப்பு. பிரான்ஸ் வீரர்கள், எதிரித் தலைவரான ஹிட்லருக்கு சல்யூட் வைப்பார்களா என்று. அவர்கள் சல்யூட் வைத்தார்கள். ஜெர்மானியர்கள் ஆர்ப்பரித்தார்கள். ‘ஹிட்லருக்கு வைத்த சல்யூட் அல்ல, அது ஒலிம்பிக் சல்யூட்’ என்று பின்னர் பிரான்ஸ் சமாதானம் சொன்னது. இங்கிலாந்து வீரர்களும், அமெரிக்க வீரர்களும் ஹிட்லருக்கு கையால் சல்யூட் வைக்காமல், ராணுவ ஸ்டைலில் வலதுபக்கம் தலையைத் திருப்பி மரியாதை செய்து கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

 ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள்: ‘அமைதியின் கடவுள்’ ஹிட்லர்! - அத்தியாயம்  2

உலகுக்குத் தன்னை உத்தமனாகக் காட்டிக் கொண்ட ஹிட்லர், ஒரு விஷயத்தில் விட்டுக் கொடுக்க வில்லை. ‘பெர்லின் ஒலிம்பிக்ஸில் ஜெர்மனியே அதிகப் பதக்கங்கள் வெல்ல வேண்டும். ஆரியர்களே வீரியமானவர்கள் என்று நிரூபித்தே தீர வேண்டும்’ என்ற ரகசியமாகக் கட்டளை இட்டிருந்தார்.

ஜெர்மானிய வீரர்களுக்கு ‘தேச வெறியை’ ஊட்டும் விதத்தில் பிரசங்கங்கள் நிகழ்த்தப்பட்டன. நம் தேசத்துக்குப் பெருமை சேர்க்க நாம் இதில் வென்றே ஆக வேண்டுமெனக் களத்தில் ஆவேசமாகச் செயல்படக் கூர்தீட்டப்பட்டனர்.

 ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள்: ‘அமைதியின் கடவுள்’ ஹிட்லர்! - அத்தியாயம்  2

1936 பெர்லின் ஒலிம்பிக்கின் இறுதியில் ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் ஜெர்மனி முதலிடம் பிடித்தாலும், ஒரு கருப்பரிடமும், ஓர் இந்தியரிடமும் ஹிட்லரின் ஆரிய வெறி படுதோல்வி அடைந்தது.
அந்த இருவர்...

(டைரி புரளும்)