Published:Updated:

மோகன்குமார்...அம்பத்தூர் டூ ரியோ!- கடும் உழைப்பில் பலித்த கனவு

மோகன்குமார்...அம்பத்தூர் டூ ரியோ!- கடும் உழைப்பில் பலித்த கனவு
மோகன்குமார்...அம்பத்தூர் டூ ரியோ!- கடும் உழைப்பில் பலித்த கனவு

மோகன்குமார்...அம்பத்தூர் டூ ரியோ!- கடும் உழைப்பில் பலித்த கனவு

பெய்ஜிங் ஒலிம்பிக். 100 மீட்டர் ஓட்டத்துக்கு உசேன் போல்ட் தயாராக இருக்கிறார். 9.58  ிவிநாடிகளில் ஃபினிஷ்  செய்கிறார். 10 விநாடிகளுக்குள் 100 மீட்டரை உசேன் கடப்பதை, அம்பத்தூரில் மழை பெய்தால் ஒழுகும் தன் குடிசை வீட்டில் அமர்ந்தபடி 11 வயது மோகன்குமார் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்த நிமிடத்திருந்தே உசேன் போல்ட்தான் அவனது ஆதர்ஷ ஹீரோ.

உசேனை போல ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டுமென்ற விதை  அவனுக்குள் விழுகிறது. கனவாகவே அதை வளர்த்துக் கொள்கிறான்.. இப்போது அந்தக் கனவு பலித்திருக்கிறது. ரியோ ஒலிம்பிக்கில் ரீலேவுக்கான இந்தியக் குழுவில் இடம் பெற்றுள்ளார் 19 வயது மோகன்குமார். அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் இவர்தான்.

அம்பத்தூரில் உள்ள ஸ்ரீ ராமசுவாமி முதலியார் பள்ளியில்தான் படித்தார் மோகன்குமார். சுட்டுப் போட்டாலும் படிப்பு வரவில்லை. 9ம் வகுப்பை தாண்டுவதற்கே தகிடுதத்தம். ஆனால் அபாரமான தடகளத் திறமை அவருக்குள் ஒளிந்திருந்தது. அடையாளம் கண்டு கொண்ட பள்ளி நிர்வாகம் ஆதரவளித்து ஊக்கப்படுத்தியது. மோகன்குமாரின் தந்தை, சென்னை மாநகராட்சியின் சிறிய அளவிலான ஒப்பந்த வேலைகளை எடுத்து செய்பவர். வீட்டில் வறுமை. மோகன்குமாரின் சாதனையைப் பாராட்டி முன்பு ஒருமுறை முதல்வர் ஜெயலலிதா வழங்கிய ஒரு லட்ச ரூபாயைக் கூட சகோதரியின் திருமணத்துக்கு பயன்படுத்தி விட்டனர். மோகன்குமாரின் பயிற்சிக்காகவும் தாயாரின் நகைகள் அவ்வப்போது வங்கி லாக்கரில் இருந்து வீடு திரும்புவதும் போவதும் வழக்கம். இத்தகைய கடினச் சூழலில் இருந்த மோகன்குமார்தான் இப்போது ரியோ வரை சென்றுள்ளார்.  

கேரளாவில் கடந்த 2015ம் ஆண்டு தேசிய தடகளப் போட்டியில் மோகன்குமார் தமிழகத்திற்காக தங்கம் வென்றார். அப்போதுதான் மோகன்குமாரை உள்ளுர் மக்களுக்கே அடையாளம் தெரிந்துள்ளது. கேரளாவில் இருந்து வீடு திரும்பிய மோகன்குமாருக்கு அந்த பகுதி மக்கள் பெரிய விழாவே எடுத்தனர். ஆறரை மணி நேரம் நடந்த விழாவில் சால்வை மட்டும் 3 சாக்குப் பைகளில் சேர்ந்ததாம். அக்கம் பக்க பகுதியில் வசிக்கும் பெரிய மனிதர்கள் பலர், மோகன்குமாரை வீட்டுக்கு அழைத்து விரும்பிக் கேட்ட உணவை சமைத்துப் போட்டு உற்சாகப்படுத்தினர். விருந்துக்கு அழைத்தவர்கள் பட்டியலில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் முதல் சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள்கள் வரை இருந்ததுதான் ஆச்சர்யம்.

அம்பத்தூரில் மங்களாபுரம் என்ற குடிசைப் பகுதியில் மோகன்குமாரின் வீடு இருக்கிறது. மங்களாபுரம் என்றாலே ஒருகாலத்தில் இளக்காரமான பார்வை பார்ப்பார்கள் மற்ற பகுதிக்காரர்கள். கேரளத்தில் மோகன்குமார், தங்கம் வென்று திரும்பிய பிறகு, மங்களாபுரத்தின் இமேஜ் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. அந்த பகுதி இளைஞர்களுக்கு இப்போது தொழிற்சாலைகளில் வேலை கிடைக்கிறது. ஏராளமானத் தடகள கோச்சுகள் இளம் வீரர்களை பிடிக்க மங்களாபுரத்தில் சுற்றத் தொடங்கியுள்ளனர். ஒலிம்பிக்கிற்கு மோகன்குமார் தகுதி பெற்ற பிறகு, மங்களாபுரத்தின் இமேஜ்  இன்னும் அதிகரித்திருக்கிறது. சிறுவர்கள் பலரைத் தடகளம் பக்கம் திரும்பவும் வைத்திருப்பதில்தான் மோகன்குமாரின் வெற்றி அடங்கியிருக்கிறது. 

மோகன்குமாரின் சகோதரர் பூவண்ணனும் ஒரு தடகள வீரர்தான். ''எங்கள் குடும்பத்தில் இருந்து யாராவது ஒருவருக்குதான்  பயிற்சி கொடுக்க  முடியுமென்ற நிலை.  என்னை விட என் தம்பி ஓட்டத்தில் கெட்டிக்காரனாக இருந்தான். இதனால் நான் விட்டுக் கொடுத்து விட்டேன். நாங்கள் பட்ட, கஷ்டத்திற்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. வருங்காலத்தில் எனது தம்பி  இன்னும்  சாதிப்பான் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவனால், இப்போது எங்கள் பகுதிக்கே பெருமை '' என பூரிப்படைகிறார்  பூவண்ணன் .

மோகன்குமாரின் வளர்ச்சிக்கு, கோச்சுகளும் உறுதுணையாக இருந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக ராஜசேகர் என்பவர்தான் மோகன்குமாருக்கு கோச்சாக இருக்கிறார். சென்னை வெள்ளத்தின்போது ராஞ்சியில் தேசிய அளவிலான ஜூனியர் தடகளப் போட்டி நடந்து கொண்டிருந்தது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவிட, மோகன்குமார் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல். அப்போது தனது சொந்த பணத்தில் இருந்து 15 ஆயிரத்துக்கு மேல் செலவழித்து மோகன்குமாரை போட்டியில் பங்கேற்க செய்தவர் இந்த ராஜசேகர். மங்களாபுரம் பகுதி மக்களும் ஏராளமானோர் மோகன்குமாரின் வளர்ச்சியில் அக்கறைக் கொண்டு நிதியுதவி செய்துள்ளனர்.

மோகன்குமாரின்  ரியோ  ஓட்டத்தை காண காத்து கிடப்பது மங்களாபுரம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழகமும்தான்.

அடுத்த கட்டுரைக்கு