Published:Updated:

சேப்பாக்க மைதானம்: 3 கேலரிகளை இடிக்க சி.எம்.டி.ஏ உத்தரவு!

Vikatan Correspondent
சேப்பாக்க மைதானம்:  3 கேலரிகளை இடிக்க சி.எம்.டி.ஏ உத்தரவு!
சேப்பாக்க மைதானம்: 3 கேலரிகளை இடிக்க சி.எம்.டி.ஏ உத்தரவு!

டந்த 2011 ம் ஆண்டு, இந்தியாவில் நடந்த  50 ஓவர் உலகக் கோப்பை  கிரிக்கெட் போட்டிக்காக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே, கே என கூடுதலாக மூன்று  கேலரிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அமைத்தது. இந்த மூன்று கேலரிகளிலும் சேர்த்து மொத்தம் 12 ஆயிரம் பேர் அமரலாம்.


 

இந்த கேலரிகளை அமைப்பதற்கு தமிழ்நாட்டு கிரிக்கெட் சங்கம்,  அரசிடம் உரிய  முறையான அனுமதி ஏதும் பெற வில்லை என்றும், விதிமுறைகளை மீறி அவை  கட்டப்பட்டுள்ளன என்றும் கூறி சென்னை மாநகராட்சி, 3 கேலரிகளுக்கும் சீல் வைத்தது. இதனை எதிர்த்து கிரிக்கெட் சங்கம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  இந்த 3 கேலரிகளுக்கு சீல் வைத்ததை மாநகராட்சி உடனே அகற்ற வேண்டும் என்று 2012, டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து,  சுப்ரீம் கோர்ட்டில் சென்னை  மாநகராட்சி மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  3 கேலரிகளையும் இடிக்குமாறு   கடந்த  2013 ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.

அதன் பிறகும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், இந்த 3 கேலரிகளுக்கும் அனுமதி பெறும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால், இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்த 3 கேலரிகளை இடிக்க சென்னை பெருவளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ), இன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு  மீண்டும் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.