Published:Updated:

``ரெண்டு வருஷமா வெள்ளிப்பதக்கம்... அரசு உதவினா ஹாட்ரிக்தான்!" - வீரர் மணிமாறனின் நம்பிக்கை

``ரெண்டு வருஷமா வெள்ளிப்பதக்கம்... அரசு உதவினா ஹாட்ரிக்தான்!" - வீரர் மணிமாறனின் நம்பிக்கை
``ரெண்டு வருஷமா வெள்ளிப்பதக்கம்... அரசு உதவினா ஹாட்ரிக்தான்!" - வீரர் மணிமாறனின் நம்பிக்கை

"அரசு அனைத்து விளையாட்டு வீரர்களையும் ஒரே மாதிரியாக பாவிக்க வேண்டும். கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு மாதிரியாகவும் மற்றவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் பாகுபடுத்திப் பார்க்கும் சூழல் நிலவுகிறது."

``கடந்த வருடம் நடந்த சர்வதேச பளுதூக்கும் போட்டியிலும் வெள்ளிப்பதக்கம் வென்றேன். ஒரு வருடம் ஆகிறது. அரசு ஒரு உதவியும் செய்யவில்லை''  எனப் புலம்புகிறார் பளுதூக்கும் வீரர் மணிமாறன்.  

``அரசு அனைத்து வீரர்களையும் சமமாக நினைத்து உதவி செய்தால், நிச்சயம் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்வேன்'' என்று சொல்லும் இவர், ஹாங்காங்கில் நடைபெற்ற 16-வது சர்வதேச பளுதூக்கும் போட்டியில் 74 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

திருச்சி மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த மணிமாறன், புதுக்கோட்டை மாவட்ட வனத்துறையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். சர்வதேச பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மணிமாறன், சொந்த ஊர் திரும்பினார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவருக்கு, திருச்சி தடகள வீரர்கள் மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரண்டு, மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பதக்கங்களுடன் வந்த மணிமாறன், தனது நண்பர்கள் மற்றும் வெற்றிக்கு உதவியவர்களை நன்றியோடு கைகுலுக்கியதுடன், சிலரின் கால்களைத் தொட்டு வணங்கினார்.

அப்போது பத்திரிகையாளரிடம் பேசிய மணிமாறன்...

``ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துக்கு முதலில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஹாங்காங் நாட்டில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்கும் போட்டியில் 15 நாடுகள் கலந்துகொண்டன. அதில் இந்தியா சார்பில் 36 பேர் கலந்துகொண்டார்கள். 74 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளேன். இதுமட்டுமல்லாமல், தங்கப்பதக்கம் உள்ளிட்ட இரண்டு பதக்கங்கள் பெற்றுள்ளேன். மேலும் இந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதற்காக `இந்தியாவின் இரும்பு மனிதர்' என்ற பட்டம் வழங்கியுள்ளனர்.

இந்த வெற்றியை நான் பெருமையாகக் கருதுகிறேன். இந்த நேரத்தில் என் பயிற்சியாளர் லோகநாதன் மற்றும் என் குடும்பத்தார் மற்றும் பயிற்சி மைய நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் மிகவும் சிரமப்பட்ட எனக்கு, துபாய் நாட்டில் உள்ள மேத்தா தமிழ்ச் சங்கம் மற்றும் என் குடும்பத்தினர் பண உதவி செய்து போட்டியில் கலந்துகொள்ள அனுப்பிவைத்தார்கள்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இதே சர்வதேச பளுதூக்கும் போட்டியிலும் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றேன். அந்தத் தகவலை, எனது துறை சார்பில் தமிழக அரசுக்குக் கடிதம் எழுதினார்கள். ஆனால், இதுவரை எனக்குத் தமிழக அரசின் ஊக்கத்தொகையோ, பாராட்டோ கிடைக்கவில்லை என்பது வருத்தம்தான்.

அரசு அனைத்து விளையாட்டு வீரர்களையும் ஒரே மாதிரியாக பாவிக்க வேண்டும். கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு மாதிரியாகவும் மற்றவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் பாகுபடுத்திப் பார்க்கும் சூழல் நிலவுகிறது. பளுதூக்கும் போட்டி ஆபத்தானது. கொஞ்சம் தவறினாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இப்படிப்பட்ட சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டிகளில் பல சிரமங்களுடன் கலந்துகொண்டு, வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளேன்.

இந்த வருடத்தோடு இனி போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டாம் என்றிருந்த என்னை ஊக்கப்படுத்தி அனுப்பிவைத்ததும், இன்று நான் வெற்றிபெற்ற காரணமாக இருந்ததும் என் குடும்பத்தாரும் நண்பர்களும்தான். அவர்கள் இல்லையென்றால், இந்தப் போட்டியில் நான் கலந்துகொண்டிருக்க மாட்டேன்.

தமிழக அரசு தொடர்ந்து எனக்கும் உதவிகள் செய்தால், வரும் செப்டம்பர் மாதம் கனடாவில் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்டு நிச்சயம் தங்கம் வென்று தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்ப்பேன்” என்றார்.

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி, தொடர்ந்து தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமும் உதவியும் செய்ய வேண்டும் என வலியுறுத்திவருகிறார். அதே வரிசையில் சர்வதேசப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் ஒருவர், அரசு வீரர்களைப் பாகுபடுத்திப் பார்ப்பதாகக் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில், 16-வது சர்வதேச பளுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற வீரர் ஒருவரை வாழ்த்தி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆனால், `இந்தப் போட்டிகளில் பங்குபெற்ற வீரர்களுக்கு, பரிசுத்தொகை அறிவிக்கப்படுமா?' என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு