Published:Updated:

`கோமதி நிறைய கொடுத்து வைத்தவள்'…. - கலங்கிய தடகள வீராங்கனை சாந்தி!

`கோமதி நிறைய கொடுத்து வைத்தவள்'…. - கலங்கிய தடகள வீராங்கனை சாந்தி!
`கோமதி நிறைய கொடுத்து வைத்தவள்'…. - கலங்கிய தடகள வீராங்கனை சாந்தி!

`கோமதி நிறைய கொடுத்து வைத்தவள்'…. - கலங்கிய தடகள வீராங்கனை சாந்தி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

23-வது ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்து பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். `வறுமையை உடைத்த தமிழச்சி', `முன்னேறத் துடிப்பவர்களின் நம்பிக்கை' எனச் சமூக வலைதளங்களில் அவரைப் பலரும் புகழ்ந்துவருகிறார்கள். மேலும், அவருக்குத் தமிழகத்தில் பலரும் அன்பளிப்பு வழங்கிவருகிறார்கள். கடந்த இரு தினங்களாக சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட கோமதி மாரிமுத்து, தனது தாய் ராஜாத்தி சகிதமாக இன்று காலை தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்தார். அப்போது ஸ்டாலின், ஏற்கெனவே அறிவித்தபடி,  கோமதி மாரிமுத்துவிடம் ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அதையடுத்து சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.

பதக்கம் பெற்றபிறகு முதல்முறையாகச் சொந்த ஊர் வரும் அவரை வரவேற்க, திருச்சி விமான நிலையத்தில் திருச்சி மட்டுமல்லாமல் புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் திரண்டுவந்து வரவேற்பு கொடுத்தனர். முன்னதாக திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, கோமதி மாரிமுத்துவை விமான நிலையத்தில் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். திருச்சி விமான நிலையத்தில் விஐபி நுழைவாயில் வழியாக வெளியே வந்த கோமதி மாரிமுத்துக்கு அவரது குடும்பத்தினர், கிராமத்தினர், உறவினர்கள், அவர் படித்த ஹோலிகிராஸ் பெண்கள் கல்லூரி மற்றும் திருச்சி மாவட்ட தடகள வீரர்-வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் வரவேற்புக் கொடுத்ததுடன், பூங்கொத்து மற்றும் அன்பளிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள். கூடவே சந்தித்து சந்தோஷமாக செல்ஃபி எடுத்துக்கொண்டனர். கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கவே பாதுகாப்பு படையினர் செய்வதறியாமல் தவித்தனர்.
 
இந்த நிலையில், கோமதி மாரிமுத்து வெற்றிக்குப் பிறகு கொடுத்த பேட்டிகளில், ``எனது ரோல் மாடல் சாந்தி அக்கா தான்” எனப் பெருமையோடு, புதுக்கோட்டை சாந்தி குறித்து பகிர்ந்துகொண்டார். அப்படிப்பட்ட சாந்தி கூட்டத்தின் ஓரத்தில், கோமதியைச் சந்திக்கவும், அவரை வரவேற்கவும் நின்றுகொண்டிருந்தார். அலைமோதிய கூட்டத்தில் அவர் கோமதியை சந்திக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்க, நாம் அவரின் தவிப்பை உணர்ந்தபடி பாதுகாப்பாக அழைத்துச் சென்று கோமதி மாரிமுத்து முன் நிறுத்தினோம். அவரைப் பார்த்ததும் கோமதி மாரிமுத்து, அக்கா என வாஞ்சையோடு கட்டி அணைத்து சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டார். கூட்ட நெரிசலில் அதற்கு மேல் பேச முடியாமல் கோமதி அங்கிருந்து கிளம்ப கண்கலங்கியபடி நம்மிடம் பேசிய சாந்தி, “வெற்றி பெற்ற கோமதிக்குக் கிடைக்கும் இந்த வரவேற்பு மிக முக்கியமானது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் மிகவும் கொடுத்து வைத்தவள். இதுபோன்ற வரவேற்புகள்தான் ஏராளமான இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும். கோமதி இன்னும் நிறைய சாதிப்பாள்” என்றார் நம்பிக்கையுடன்.

திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கோமதி மாரிமுத்து, ``என்னுடைய வெற்றியை இவ்வளவு பேர் கொண்டாடுவது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான எனது பயிற்சியாளர் ராஜாமணி மற்றும் என் அம்மா, அண்ணன் மற்றும் என் குடும்பத்தினர் என் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்த வெற்றிக்காக எனது குடும்பம் மட்டுமல்லாமல் எனது கிராமத்தினர் எனது நண்பர்கள் எனப் பலரின் பங்களிப்பும் உள்ளது. நான் 4 மணிக்கு எழுந்து பயிற்சி செய்வதற்கு என் கிராமத்தினர் முழு ஒத்துழைப்பு தந்தார்கள். அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

நான் ஆசிய தடகள போட்டியில் கலந்துகொண்டபோது அணிந்திருந்த ஷூ மிகவும் பழைமையானதுதான். அது எனக்கு மிகவும் ராசியான ஷூ. இவ்வளவு நாள் நான் மிகவும் கஷ்டப்பட்டிருந்தேன். இப்போது நான் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு உதவி செய்ய ஸ்பான்சர்கள் கிடைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தமிழக அரசு உதவினால் தமிழகத்துக்கு மேலும் பெருமை சேர்த்து தருவதற்கு என்னால் ஆன முயற்சிகளைச் செய்வேன். அடுத்து ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் கலந்துகொண்டு நிச்சயம் தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்ப்பேன். தமிழக அரசு இன்னும் நிறைய ஊக்கங்கள் அளித்தால் என்னைப் போன்ற ஏராளமான விளையாட்டு வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்” என்றார்.

தொடர்ந்து அவரது உறவினர் மற்றும் கிராம பொதுமக்கள் அவரின் சொந்த ஊரான திருச்சி மணிகண்டம் அடுத்த மூடிக்கொண்டு கிராமத்துக்கு அழைத்துச் சென்று மிகப் பிரமாண்டமான விழா கொடுத்தனர். கோமதி மாரிமுத்துவின் வெற்றியைத் திருச்சி மாவட்ட மக்களே, தங்கள் வீட்டுப் பிள்ளையின் வெற்றியாகவே கொண்டாடி வருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு