Published:Updated:

``எனக்கு யாருமே இப்படியெல்லாம் செஞ்சதில்லீங்க!'' - கத்தாரில் ஆரத்தி எடுத்தவர்களிடம் கலங்கிய கோமதி

``எனக்கு யாருமே இப்படியெல்லாம் செஞ்சதில்லீங்க!'' - கத்தாரில் ஆரத்தி எடுத்தவர்களிடம் கலங்கிய கோமதி
``எனக்கு யாருமே இப்படியெல்லாம் செஞ்சதில்லீங்க!'' - கத்தாரில் ஆரத்தி எடுத்தவர்களிடம் கலங்கிய கோமதி

``எனக்கு யாருமே இப்படியெல்லாம் செஞ்சதில்லீங்க!'' - கத்தாரில் ஆரத்தி எடுத்தவர்களிடம் கலங்கிய கோமதி

சிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை கோமதி மாரிமுத்து, இப்போது உலகத் தமிழர்களின் செல்லப்பிள்ளையாகிவிட்டார். பொதுவாகவே, நம் மண்ணைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் வெளிநாடுகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் வாகை சூடும்போது, அங்கே வசிக்கும் தமிழர்கள் உச்சிகுளிர்ந்துவிடுவர். சாதிப்பவர்களைக் கௌரவிப்பார்கள். பரிசுப் பொருள்கள் வழங்குவார்கள். கத்தாரில் கோமதி தங்கம் வென்றதும், அவருக்கு கத்தார்வாழ் தமிழர்கள் விழா எடுத்து மகிழ்ந்தனர்.

கத்தாரில் அல்தும்மா பகுதியில் வசிக்கும் செய்யாறு செல்வம் மற்றும் சுரேஷ், ரமேஷ் இவர்களுக்கு கோமதியைத் தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து விருந்தளித்துக் கௌரவிக்க, செல்வம் முடிவுசெய்தனர். இதற்காக இந்திய அதிகாரிகளைச் சந்தித்து, ``கோமதியை எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அனுப்பி வைக்க முடியுமா?'' என்று அனுமதி கேட்டனர்.  முதலில் மறுத்த இந்திய அதிகாரிகள், அவர்களின் அன்பைப் புரிந்துகொண்டனர். பிறகு, ஒரு மணி நேரம் மட்டும் அனுமதி அளித்து, ``லன்ச் முடிந்த உடனே அனுப்பி வைத்துவிட வேண்டும்'' என்று கூறி அனுப்பி வைத்தனர். கேரள வீராங்கனை சித்ராவையும் வீட்டுக்கு அழைத்து வர முயன்றனர். ஆனால், முடியவில்லை. 

அனுமதி கிடைத்ததும், செல்வம் தன் மனைவி தமிழ்ச்செல்விக்குப் போனில் தெரிவித்து, விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். ``என்ன பிடிக்கும்னு கேட்டுச் சொல்லுங்க?'' என்று தமிழ்ச்செல்வி சொல்ல, ``மீன்குழம்பு பிடிக்கும்'' என்று கோமதி கூறியிருக்கிறார். கோமதிக்கு விருந்து கொடுப்பதற்காக அக்கம்பக்கத்தில் வசித்த சுரேஷ், ரமேஷ், முருகானந்தம் குடும்பத்தினரும் சேர்ந்துகொண்டனர். வீடு விழாக்கோலம் பூண்டது. கோமதி வீட்டுக்கு வந்ததும், கூடியிருந்த பெண்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு வரவேற்றனர். கோமதி நெகிழ்ந்துபோனார். தலைவாழை இலையில் மண்பானையில் சமைக்கப்பட்ட மீன்குழம்பு உணவு கோமதிக்கு சுடச்சுடப் பரிமாறப்பட்டது. இந்தியாவிலிருந்து கத்தார் சென்ற பிறகு, வீட்டு உணவு கிடைக்காமல் இருந்த கோமதி, ``மூன்று நாள்களுக்குப் பிறகு, இப்பதான் நம்ம சாப்பாடு சாப்பிடுறேன்'' என்று கூறி உணவை ருசித்துச் சாப்பிட்டார்.

கோமதிக்கு விருந்தளித்து உபசரித்த தமிழ்ச்செல்வியிடம் பேசியேபோது, ``பொதுவா, தமிழ்நாட்டுலயிருந்து யார் வந்தாலும் வீட்டுக்கு அழைத்து வந்து உபசரிப்போம். நம்ம மண்ணைச் சேர்ந்த பொண்ணு இங்கே வந்து சாதிச்சிருக்கு. விடுவோமா நாங்க. என் கணவர் அவங்களை அழைச்சுட்டு வர்றேன்னு போனாரு. `அனுமதி கிடைச்சுட்டு, உடனே விருந்துக்கு ஏற்பாடு பண்ணு'னு சொன்னதுதான், பக்கத்து வீட்டுல இருந்தவங்கயெல்லாம் சேர்ந்துட்டாங்க. மளமளனு மார்க்கெட்டுக்குப் போய் மீன் வாங்கிட்டு வந்தோம். ஒவ்வொருவரும் ஒரு வேலையைப் பிரிச்சு செஞ்சோம். சரியா ஒரு மணி நேரத்துல சமையல முடிச்சுட்டோம். எங்களுக்குத் தெரியும், இந்த மாதிரி வெளிநாட்டுக்கு வர்ற நம்ம பிள்ளைங்க வீட்டுச் சாப்பாட்டுக்காக ஏங்குவாங்கனு. அதனாலத்தான் அவங்களுக்குப் பிடிச்ச மீன்குழம்பு வச்சுக் கொடுத்தோம். உண்மையிலேயே, அவங்க வீட்டுல இருந்த சமயம் பண்டிகைக்காலம் மாதிரி இருந்தது. கோமதிக்கு ஆரத்தி எடுத்தப்போ, `எனக்கு யாருமே இப்படியெல்லாம் செஞ்சதே இல்லீங்க'னு கலங்கினார். எத்தனையோ ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் கடல் கடந்து நாங்க இருக்கோம். சொந்த மண்ணுலயிருந்து யாராவது வந்தா எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கும். எங்க குழந்தைகளும் அவ்ளோ சந்தோஷமா இருந்தாங்க'' என்கிறார் மனநிறைவுடன். 

செல்வமோ, ``1,500 மீட்டர் ஓட்டத்துல தங்கப்பதக்கம் வாங்கிய சித்ராவையும் வீட்டுக்குக் கூட்டிவந்து விருந்தளிக்க முயன்றோம். ஆனா, இங்கே நிறைய கேரளாக்காரங்க இருக்காங்களே. அவங்களைத் தாண்டி எங்களால சித்ராவை நெருங்க முடியலை. இருந்தாலும், நம்ம பொண்ணுக்கு ஒரு வேளை சாப்பாடு கொடுத்த திருப்தி எங்களுக்குக் கிடைச்சது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு