Published:Updated:

``ஒலிம்பிக் பதக்கம் கிடைக்காததுக்கும் கழிவறைக்கும் தொடர்பு இருக்கு!’’ - `வீல் சேர் பேஸ்கட்பால்' மாதவி

2.68 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ள இந்தியாவால், பாராலிம்பிக் தொடரின் குழு விளையாட்டுகளுக்கு ஓர் அணியைக் கூட அனுப்பமுடியவில்லை. இங்கு அரசியலைச் சரி செய்வதற்குமுன், கழிவறைகளைச் சரிசெய்யவேண்டியிருக்கிறது

``ஒலிம்பிக் பதக்கம் கிடைக்காததுக்கும் கழிவறைக்கும் தொடர்பு இருக்கு!’’ - `வீல் சேர் பேஸ்கட்பால்' மாதவி
``ஒலிம்பிக் பதக்கம் கிடைக்காததுக்கும் கழிவறைக்கும் தொடர்பு இருக்கு!’’ - `வீல் சேர் பேஸ்கட்பால்' மாதவி

இந்தியா ஏன் ஒலிம்பிக் போன்ற தொடர்களில் ஜொலிப்பதில்லை..?

விளையாட்டில் அரசியல்!

சுமார் 130 கோடி மக்கள் வாழும் நாட்டில் ஏன் 200 பேர்கூட ஒலிம்பிக் தொடருக்குத் தகுதி பெறுவதில்லை?

விளையாட்டில் அரசியல்!

ஒவ்வொரு துறையிலும், நம் இயலாமையை வெளிப்படுத்த பயன்படுத்தும் வார்த்தை `அரசியல்!'. உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் கிரிக்கெட்டில் தொடங்கி, அனைத்து விளையாட்டுகளிலும் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அரசியல் ஆதிக்கம் செய்வதற்கு முன்பாகவே சில விளையாட்டுகளின் முன்னேற்றம் முடங்கிப்போய்விடுகிறது. பாராலிம்பிக் விளையாட்டுகள் போல்..!

அமெரிக்கத் தூதரகம் மூலமாக, வீல் சேர் பேஸ்கட்பால் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு, அமெரிக்க வீல் சேர் பேஸ்கட்பால் அணியின் பயிற்சி முறைகள், தொழில்நுட்பங்கள், நிர்வாகம் என அனைத்து விதமான பயிற்சிகளும் 2 வாரங்களுக்கு அளிக்கப்படுகின்றன. தமிழகம், கேரளா, கர்நாடகா எனத் தென்னிந்தியாவிலிருந்து 6 வீல் சேர் பேஸ்கட்பால் சங்க உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள் இதில் பங்கேற்கின்றனர். 

``ஒலிம்பிக் பதக்கம் கிடைக்காததுக்கும் கழிவறைக்கும் தொடர்பு இருக்கு!’’ - `வீல் சேர் பேஸ்கட்பால்' மாதவி

சமீபத்தில் இவர்களுக்குச் சென்னையில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தில், இந்தத் திட்டத்துக்கான விளக்கவுரை வழங்கப்பட்டது. அப்போது, அமெரிக்கா செல்லவிருக்கும் இந்திய வீல் சேர் பேஸ்கட்பால் கூட்டமைப்பின் நிறுவனர் மாதவி லதாவைச் சந்தித்தேன். வீல் சேர் பேஸ்கட்பால் கூட்டமைப்பைப் பற்றியும், இந்த அமெரிக்கப் பயணம் பற்றியும் நிறைய பேசினார். அப்போது, மாற்றுத்திறன் கொண்டவர்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியும் பேசினார். சில விஷயங்கள், எல்லோரும் மாற்றுத்திறனாளிகளுக்காகப் பேசுவதுபோல்தான் இருப்பதாகத் தோன்றியது. ஆனால், அதன் இன்னொரு கோணத்தை அவரோடு பேசும்போதுதான் உணர்ந்துகொள்ள முடிந்தது. மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கான விளையாட்டுகள். இந்தியா போன்றவொரு நாட்டில் மேம்படுவது எவ்வளவு கடினம் என்பதே அது.

``பேருந்துகளில் ரேம்ப் இல்லை, ஹோட்டல்களில் சிறப்பு அறைகள் இல்லை, கழிவறைக்குள் வீல்சேர்கள் நுழைய முடிவதில்லை..." இதையெல்லாம் வெறும் சாதாரண பிரச்னைகளாக மட்டும் அவர் முன்வைக்கவில்லை. விளையாட்டில் அது எப்படியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் உணர்த்தினார் அவர். 

மாற்றுத்திறன் கொண்ட ஒருவர், தடகளம் போன்றதொரு விளையாட்டைத் தேர்வு செய்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம். அவருக்கான உபகரணங்களுக்கு ஒருவர் உதவுகிறார். ஒரு நல்ல பயிற்சியாளர் கிடைத்துவிடுவார். ஆனால், போட்டிகளுக்குச் செல்லும்போது அவர் ஒருவரை அழைத்துச்சென்று வருவது என்பது இங்கு எளிதான விஷயம் அல்ல. அப்படியிருக்கையில், பேஸ்கட்பால் போன்ற குழு விளையாட்டில், 12 பேருக்கும் ஒரேமாதிரியான உபகரணங்கள் கிடைக்கவேண்டும். அவர்கள் அனைவரையும் தங்கவைக்க வசதிவேண்டும். இடம் கிடைத்தாலும், அங்கு இவர்களுக்கான வசதிகள் கிடைக்கவேண்டும். அனைவரையும் ஒன்றாக அழைத்துச்சென்று வரவேண்டும். இப்படி ஒவ்வொரு விஷயமுமே சவால்தான்! 

``ஒலிம்பிக் பதக்கம் கிடைக்காததுக்கும் கழிவறைக்கும் தொடர்பு இருக்கு!’’ - `வீல் சேர் பேஸ்கட்பால்' மாதவி

பொதுவாக, இந்தியாவைச் சேர்ந்த ஓர் அணி வெளிநாட்டுக்குச் சென்று வென்று வருவதைவிட, இந்தியாவில் ஒரு தொடர் நடக்கும்போதுதான் அந்த விளையாட்டு பிரபலமடையும். எப்படி ப்ரோ கபடிக்குப் பின் கபடி பிரபலமானதோ அதுபோல். இவ்வளவு ஏன், இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமானதுகூட 1983-ல் உலகக் கோப்பை வென்றதனால் மட்டுமல்ல. 1987 உலகக் கோப்பை இந்தியாவில் நடந்ததும் அதற்கு மிகப்பெரிய காரணம். இப்படி, ஒரு சர்வதேச தொடர் இந்தியாவில் நடந்தால்தான், வெகுஜன மக்களின் கவனத்தை அந்த விளையாட்டு பெறும். ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தொடர் ஒன்றை, இந்தியாவில் நடத்த முடியுமா, நிச்சயம் முடியாது. 

குறைந்தபட்சம் 4 அணிகள் கலந்துகொண்டால்கூட அவர்களுக்கான வசதிகள் சரியாக இருக்கவேண்டுமே! இங்கு ஓர் அணிக்கே சரியான வசதி ஏற்படுத்திக்கொடுக்க முடியாதபோது, வெளிநாட்டு அணிகளுக்கு எப்படி வசதிகள் செய்து தருவது. ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செய்வதுபோல் விளையாட்டு நகரம் அமைக்க முடியுமா?! 

``இங்கு ஸ்டார் ஹோட்டல்களின் கழிப்பறைகளில்கூட எங்களுக்குச் சரியான வசதி கிடையாது. வீல்சேர் உள்ளே செல்வதே மிகவும் சிரமமாக இருக்கும். கேட்டால், `உங்களைப் போன்றவர்கள் வருவார்கள் என்று யோசிக்காமல் விட்டுவிட்டோம்' என்பார்கள். இங்கு இதுதான் பிரச்னை. எங்களது சிரமங்களை யோசிப்பவர்கள் கஷ்டம். அப்படி யோசித்திருந்தால் பேருந்துகளில் ரேம்ப் வைத்திருப்பார்கள், கழிவறைக்குப் படிகள் வைத்திருக்க மாட்டார்கள், கதவுக்குக் கொஞ்சம் அகலமாக இடம் ஒதுக்கியிருப்பார்கள். ஆனால், யாரும் யோசிப்பதில்லை. இவர்களுக்கு மத்தியில் வெளிநாட்டிலிருந்து யாரை எப்படி அழைத்துவருவது, அவர்களை எங்குத் தங்கவைப்பது, ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டலில்கூட இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அறைகள் ஒன்றிரண்டுதான் இருக்கின்றன. என்ன மாதிரியான வசதிகளை நம் நாட்டில் நாம் அவர்களுக்குச் செய்துதர முடியும். ஒவ்வொரு கட்டத்திலும் சங்கடங்களைச் சந்தித்தே ஆகவேண்டியிருக்கிறது" என்று மாதவி லதா சொன்னது, நம் சமூகத்தின் கட்டமைப்பைக் கேள்விக்குட்படுத்த வேண்டியிருக்கிறது என்பதை புரியவைத்தது.

``ஒலிம்பிக் பதக்கம் கிடைக்காததுக்கும் கழிவறைக்கும் தொடர்பு இருக்கு!’’ - `வீல் சேர் பேஸ்கட்பால்' மாதவி

``அமெரிக்க போன்ற நாடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் சிறப்பாகச் செய்துகொடுக்கப்பட்டிருக்கின்றன. நம் ஊரில், `நாங்கள் படியில் தூக்கிச் செல்கிறோம்' என்று நினைக்கிறார்களே தவிர, நாங்களே ஏறும்போதும் கிடைக்கும் சுதந்திரத்தை, சந்தோஷத்தை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. விளையாட்டு அந்தச் சுதந்திரத்தைக் கொடுக்கும். ஆனால், அதிலும் இங்குப் பிரச்னை இருக்கிறது. என்னுடைய இந்த அமெரிக்கப் பயணத்தில், அங்குள்ள வசதிகளை நம் ஊரில் எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்பதுபற்றி ஆய்வுசெய்யவேண்டும். அமெரிக்க தூதரகம் கொடுத்துள்ள இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்" என்றார்.

பொதுவாக விளையாட்டுத் தொடர்கள் திட்டமிடப்பட்டுவிட்டு, அரசியல் அல்லது பொருளாதார காரணங்களால் தடைப்படும். ஆனால், நம் நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான தொடர்கள், அடிப்படை வசதிகளின் குறைபாட்டால் சிந்தனையிலேயே நொறுங்கிவிடுகின்றன. அதனால்தான் 2.68 கோடி மாற்றுத்திறனாளிகள் (2016 சென்சஸ் கணக்கெடுப்பின்படி) உள்ள இந்தியாவால், பாராலிம்பிக் தொடரின் குழு விளையாட்டுகளுக்கு ஓர் அணியைக் கூட அனுப்பமுடியவில்லை. இங்கு அரசியலைச் சரிசெய்வதற்குமுன், கழிவறைகளைச் சரிசெய்யவேண்டியிருக்கிறது.