அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

அரசியலால் சீரழியும் விளையாட்டுத் துறை!

அரசியலால் சீரழியும் விளையாட்டுத் துறை!
பிரீமியம் ஸ்டோரி
News
அரசியலால் சீரழியும் விளையாட்டுத் துறை!

அலங்கார பொம்மைகளாகச் சங்கத் தலைவர்கள்...

அரசியலால் சீரழியும் விளையாட்டுத் துறை!

லிம்பிக்... ஓயாத இந்தியக் கனவு. ஓய்ந்துவிடக்கூடாத கனவும்கூட. குடும்பச் சூழலால் குலைந்துவிடாமலும் வறுமையால் சுருங்கிவிடாமலும் விளையாட்டுத் துறையில் முன்னேறிச் செல்கிறது இளைய தலைமுறை. காய்ந்த வயிற்றுடன் களத்தில் பாய்ந்து செல்லும் ஏழை வீரர்கள் இங்கே ஏராளம். கடற்கரை குப்பங்கள் தொடங்கிக் காய்ந்த கரிசல் பூமிவரை அவர்கள் இங்கே அங்கீகாரத்துக்காக ஏங்குகிறார்கள். ஆனால், வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பது தொடங்கி வீரர்களின் இடுப்பை உடைப்பதுவரை அசிங்கமான அரசியலில் சிக்கி, சின்னாபின்னமாகிக்கிடக்கிறது இந்திய விளையாட்டுத் துறை. இந்தப் பாழாய்ப்போன அரசியலை பாலிவுட்டில் ‘டங்கல்’ தொடங்கி கோலிவுட்டில் ‘கனா’வரை பேசினாலும் மிஞ்சுவது வினா மட்டுமே. தமிழக விளையாட்டுத் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. என்ன நடக்கிறது இங்கே?

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை, விளையாட்டுச் சங்கங்கள் விருப்பம்போல வளைத்து, அரசியல் செய்வதாகக் குற்றச்சாட்டுகள் தமிழகம் முழுவதுமே குவிந்துகிடக்கின்றன. தமிழ்நாடு ஒலிம்பிக் கமிட்டியில் சுமார் 50 பதிவு பெற்ற விளையாட்டுச் சங்கங்கள் உள்ளன. இவற்றின் நிர்வாகப் பதவிகளில் இருப்பவர்கள், தங்களை வளப்படுத்திக்கொள்ளவும், வெறும் பகட்டுக்காக மட்டுமே அந்தப் பதவியில் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று குமுறுகிறார்கள் விளையாட்டுத் துறை சார்ந்த செயற்பாட்டாளர்கள். குறிப்பாக, விளையாட்டுத் துறைக்குத் தொடர்பே இல்லாத அரசியல்வாதிகளாலும் பிற துறை பிரமுகர்களாலும் நிரம்பி வழிகிறது தமிழக விளையாட்டுத் துறை. தங்களது தேவைகள் என்ன, தங்களது பிரச்னைகள் என்ன, தங்களது குறைகள் என்ன என்பதைச் சொல்ல இயலாமலும்... அப்படியே சொன்னாலும் புறக்கணிக்கப்படுவதுமாக இங்கே விளையாட்டு வீரர்கள் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம்.

இதுகுறித்துப் பேசுபவர்கள், “இந்திய விளையாட்டு விதிகள் 2011-ன் படி, 70 வயதைக் கடந்தவர்கள் விளையாட்டுச் சங்கங்களில் எந்த நிர்வாகப் பொறுப்பிலும் இருக்கக் கூடாது. குறிப்பாக, 12 ஆண்டுகளுக்குமேல் தலைவர் பொறுப்பிலும், நான்கு ஆண்டுகளுக்குமேல் உறுப்பினர் பொறுப்பிலும் தொடர முடியாது. ஆனால், 79 வயதாகிவிட்ட ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான வால்டர் தேவாரம் தமிழ்நாடு தடகளச் சங்கத்தின் தலைவராக பல ஆண்டுகளாகத் தொடர்கிறார். அ.தி.மு.க மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பாவின் மகனும் அ.தி.மு.க தொழில்நுட்ப அணிச் செயலாளருமான ராஜ்சத்யன், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கிறார். விளையாட்டுத் துறையினருக்கு அரசு வேலைவாய்ப்பில் மூன்று சதவிகித இடஒதுக்கீடு அளித்ததற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுவிழா எடுத்ததை தவிர, ராஜ்சத்யன் இந்தத் துறைக்காகச் செய்தது எதுவும் இல்லை. தமிழக இளைஞர்கள் அதிகம் அறிந்திராத ‘ரக்பி’ ஃபுட்பால் சங்கத்தின் தலைவரும் அவர்தான்” என்கிறார்கள்.

அரசியலால் சீரழியும் விளையாட்டுத் துறை!

வால்டர் தேவாரத்திடம் இதுபற்றிக் கேட்டால், “ஒரு விளக்கமும் கிடையாது. என்னைத் தலைவராக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும்வரையில், நான் அப்பதவியில் தொடர்வேன்” என்றார். ராஜ் சத்யனோ,

அரசியலால் சீரழியும் விளையாட்டுத் துறை!

“விளையாட்டுக் கழகங்களில், விளையாட்டு ஆர்வம் இருப்பவர்கள்தான் இருக்க முடியும். இந்தப் பொறுப்பை வைத்து எந்த அரசியலும் செய்ய முடியாது. மாறாகச் செலவுகள்தான் அதிகம். என்னுடைய பொறுப்பில் அரசியல் பின்புலம் இல்லை. நான் பொறுப்பில் இருக்கும் தமிழக கூடைப்பந்து அணி, இந்திய அளவில் முக்கியமான அணியாக உள்ளது. இந்தியாவிலேயே ரக்பி விளையாட்டு போட்டியைச் சென்னையில் நடத்த, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஒரு கோடி ரூபாய் வழங்கினார். உலக அளவில் நம் வீரர்கள் செல்வது நமக்குப் பெருமைதானே...” என்றார்.

தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கத்தின் தலைவராக இருக்கிறார் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் சகோதரர் என்.ராமச்சந்திரன். கீழ்ப்பாக்கம் நேரு பூங்கா அருகில் பலகோடி மதிப்புள்ள அரசு நிலத்தை 99 வருடக் குத்தகைக்கு எடுத்து, அதில் ஸ்குவாஷ் சங்கம் சார்பில் அரங்கம் கட்டியுள்ளார் ராமச்சந்திரன். இந்த அரங்கத்தில் சாமான்ய வீரர்கள் சேர முடியாது. உறுப்பினர் கட்டணமே ரூ.10,000 வசூலிக்கப்படுகிறது. இதர கட்டணங்கள் தனி. அதேசமயம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இரண்டு ஸ்குவாஷ் அரங்கங்கள் அமைக்கப்பட்டு, திறக்கப்படாமலே இருக்கின்றன.

“நேரு உள் விளையாட்டு அரங்கில் ஸ்குவாஷ் அரங்கங்கள் திறக்கப்படாமல் இருப்பதன் மர்மம் என்ன? இவற்றைத் திறந்தால் தன்னுடைய அரங்குக்கு ஆள் வரத்து குறைந்துவிடும் என்று நினைக்கிறாரா ராமச்சந்திரன்?” என்று கேள்வி எழுப்புகிறார்கள் ஸ்குவாஷ் துறை சார்ந்த பயிற்சியாளர்கள். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளது ராமச்சந்திரன் தரப்பு. “ஆசிய ஸ்குவாஷ் போட்டிகளில் பதக்கங்களைக் குவிக்கும் அளவுக்கு ஆண்டுதோறும் சிறந்த விளையாட்டு வீரர்களை எங்கள் சங்கம் தயார் செய்து வருகிறது. கடந்த 2018-ல் இந்தோனேசிய ஆசியப் போட்டியில்கூட, தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் பதக்கங்களை வென்றுள்ளனர். அவர்களுக்கு தலா 30 லட்ச ரூபாய் பரிசுத் தொகையைத் தமிழக அரசு வழங்கியுள்ளது. சிலர் காழ்ப்பு உணர்ச்சியால் பரப்பும் செய்திகளை நம்பத் தேவையில்லை” என்றனர்.

அரசியலால் சீரழியும் விளையாட்டுத் துறை!

தமிழகத்தின் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பெரும்பாலானோர் தமிழ்நாடு பாய்மர விளையாட்டுச் சங்கத்துடன் நெருக்கமாக இருக்கிறார்கள். மெரினா கடற்கரையை ஒட்டி, நேப்பியர் பாலத்தின் அருகே அரசு இடத்தில், குத்தகைக் காலம் முடிந்தபிறகும் ‘ராயல் மெட்ராஸ் யாக்ட்’ என்கிற படகு கிளப் செயல்பட்டுவந்தது. உயர்நீதிமன்ற உத்தரவைப் பெற்று, அந்த இடத்தைப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீட்டனர். சுமார் 400 கோடி மதிப்புள்ள அந்த இடத்தைக் குறிவைத்து இந்தச் சங்கம் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் நேப்பியர் பாலத்தின் அருகே உள்ள இடத்தைச் சங்கத்துக்கு ஒதுக்கித் தரும்படி அழுத்தம் கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன. சம்பந்தப்பட்ட இடம் கடற்கரை மேலாண்மை மண்டலத்தின் கீழ் வருவதால், அங்கு கட்டடம் கட்டுவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அந்தத் தடையையும் உடைத்து, தமிழக அரசின் சிறப்பு அனுமதியோடு கட்டடம் கட்டிக்கொள்ளவும் அரசிடம் காய்நகர்த்தி வருகிறார்கள்.

அரசியலால் சீரழியும் விளையாட்டுத் துறை!

இந்தக் குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு பாய்மர விளையாட்டுச் சங்கம் தரப்பில் பேசினோம். “சமீபகாலமாக தமிழ்நாடு பாய்மரப் படகு விளையாட்டுச் சங்கத்தில் துரித நடவடிக்கைகளால்தான் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிய, தேசிய அளவிலான பாய்மரப் படகுப் போட்டிகளில் உத்வேகத்துடன் பங்கேற்கிறார்கள். இதுபொறுக்க முடியாத ஒருசில நிர்வாகிகள், போட்டியின் காரணமாக அவதூறு பிரசாரத்தை முன்வைக்கின்றனர். இதுமுற்றிலும் தவறானது. கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் 50 மீட்டருக்குக் கட்டடம் எழுப்ப முடியாது என்று விதி இருக்கும்போது, அவர் ஏன் அந்த இடத்துக்காகப் போராட வேண்டும்” என்கிறார்கள்.

இதுகுறித்து எல்லாம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உயர் அதிகாரி ஒருவர் பேசுகையில், “அமைச்சர் செல்லூர் ராஜுவின் உறவினர் சோலை ராஜா, தமிழ்நாடு கபடி சங்கத்தின் தலைவராக இருக்கிறார். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாங்கித்தருவது, பள்ளி, கல்லூரிகளில் சீட் பிடித்துத் தருவதைத் தாண்டி கபடி விளையாட்டின் முன்னேற்றத்துக்காக எதையும் இவர் செய்தது இல்லை. கராத்தே போட்டி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலிருக்கும் பிரமுகரின் ஆதிக்கம் மிக அதிகம். 2019-2020-ம் ஆண்டு பட்ஜெட்டில், 12,524 கிராமப் பஞ்சாயத்துகளில் கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு மட்டும் 25.05 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களிடம் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அந்த வீரர்களை விளையாட்டுப் போட்டிகளுக்காகத் தேர்வு செய்யும் அதிகாரம் அரசு அதிகாரிகளான எங்களிடம் இல்லை.

அரசியலால் சீரழியும் விளையாட்டுத் துறை!

சிறு அளவிலான போட்டிகள் தொடங்கி ஒலிம்பிக், தேசிய, ஆசியப் போட்டிகள் வரை விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு அந்தந்த விளையாட்டுச் சங்கங்களிடம்தான் உள்ளது. தமிழக அரசுகூட அதில் தலையிட முடியாது. தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்கும் வீரர்களைத் தேர்வு செய்ய ஒரு குழுவை அமைத்து, அதில் உறுப்பினர்களை நியமித்து, வீரர்களைத் தேர்வு செய்யும் எண்ணம்கூட அரசுக்கு இல்லை. சங்கங்கள் ஒருங்கிணைக்கும் போட்டிகளுக்கு அவர்கள் அனுப்பும் பில் தொகையை பாஸ் செய்வது, விளையாட்டு மைதானங்களை வாடகைக்கு விட்டு மேற்பார்வையிடுவதைத் தவிர தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு வேறு பணி கிடையாது. 2019-2020 நிதிநிலை அறிக்கையில், விளையாட்டுத் துறைக்கு 168.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி முழுமையாகத் தமிழக இளைஞர்களுக்குப் பயன்பட வேண்டும் என்றால், அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விளையாட்டுச் சங்கங்களின் சார்பில் தேர்வாகும் வீரர்கள் தகுதி உடையவர்கள்தான். ஆனாலும், கூடுதலான பயிற்சி கட்டணங்கள், ஏழை - பணக்கார விளையாட்டு வீரர்களிடம் காட்டப்படும் பாகுபாடுகள், போட்டிக்குத் தேர்வு செய்ய வீரர்கள், வீராங்கனைகளுக்குக் கொடுக்கப்பட்ட பல்வேறு வகையிலான அழுத்தங்கள் என்று விளையாட்டு வீரர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்” என்றார்கள்.

சங்கப் பொறுப்புகளில் சம்பந்தமே இல்லாதவர்களைக் களைந்துவிட்டு, விளையாட்டுத் துறையில் சாதித்த முன்னாள் வீரர்களைக்கொண்டு சங்கங்களை நிர்வகிக்க வேண்டும். அதேபோல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்ய, அரசு உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்க வேண்டும். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், விளையாட்டு என்பது பணம் படைத்தவர்களும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுக்கும் மட்டுமே என்கிற நிலை ஏற்பட்டுவிடும்.

ந.பொன்குமரகுருபரன்,
படம்: ஈ.ஜெ.நந்தகுமார்
ஓவியங்கள்: சந்தோஷ் நாராயணன்

அரசியலால் சீரழியும் விளையாட்டுத் துறை!
அரசியலால் சீரழியும் விளையாட்டுத் துறை!

 “அரசுக்கு நாங்கள்தான் எடுத்துச்சொல்ல முடியும்”

மிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவரும், தமிழ்நாடு கபடி கழகத் தலைவருமான சோலை ராஜா மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசினோம். “முதலில் நான் என் விஷயத்துக்குப் பதில் சொல்லிவிடுகிறேன். நான் இந்தப் பொறுப்புக்கு வருவதற்கு முன்னால் அரசியலில் இருந்தவன் இல்லை. பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது அதெலெட்டிக் கோல்டு மெடல் பிளேயர். அதற்குப் பின், கபடி விளையாட்டில் ஆர்வம் வந்து மாவட்ட கபடி கழகத்தில் இணைந்தேன். நல்ல வீரர்களை அடையாளம் காட்டவும், அவர்களை மாநில, தேசிய வீரர்களாகவும் மாற்றவுமே நான் இந்தப் பொறுப்பில் இருந்து, என் சொந்தப் பணத்தைச் செலவழித்துவருகிறேன்.

விளையாட்டு கழகங்களில் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் இருக்கிறார்கள்தான். மறுக்கவில்லை, ஆனால், அவர்களுமே விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள். தவிர, அவர்களால்தான் வீரர்களின் தேவைகளை அரசுக்கு எடுத்துச்செல்ல முடியும். தவிர, இவர்கள் ஜனநாயகரீதியிலான தேர்தலில் வெற்றி பெற்றுத்தான் பொறுப்புக்கு வருகிறார்கள். விளையாட்டுச் சங்கங்களில் பொறுப்புகளில் இருந்தவர்கள் நிறையச் சாதித்தும் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் விளையாட்டு வீரர்களுக்கு மின்சாரம், போக்குவரத்து, காவல்துறை பணிகளில் இரண்டு சதவிகித இடஒதுக்கீடு வழங்கினார். முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. விளையாட்டுச் சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்த பின்பு அதை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, வெற்றி பெறும் அணியின் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு லட்சம் வழங்க உத்தரவிட்டார். எங்களது நீண்டகால கோரிக்கையை ஏற்று, இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூன்று துறைகளில் மட்டும் இருந்த விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டை 33 துறைகளிலும் வழங்கி, இரண்டு சதவிகிதமாக இருந்த இடஒதுக்கீட்டைத் தற்போது மூன்று சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறார். இதெல்லாம் பொறுப்பிலிருக்கும் எங்களைப் போன்றவர்களால்தான் சாத்தியமாகியிருக்கிறது.

  - செ.சல்மான்

மிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியில் இருக்கிறார் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா. தமிழ்நாடு பூப்பந்து சங்கத்தின் தலைவராக இருக்கிறார் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி.  தமிழ்நாடு டேக்வோன்டோ சங்கத்தில் ஐசரி கணேசன், கைப்பந்து சங்கத்தில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ராமசுப்பிரமணி, தமிழ்நாடு படகுப் போட்டி சங்கத்தில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரகுநாதன் என்று விளையாட்டு சங்கப் பொறுப்புகளில் இருப்பவர்களின் பட்டியல் ரொம்பவே நீளம்.