Published:Updated:

போராட்டத்தின் முகம்

போராட்டத்தின் முகம்
பிரீமியம் ஸ்டோரி
போராட்டத்தின் முகம்

வாழ்தல் இனிது

போராட்டத்தின் முகம்

வாழ்தல் இனிது

Published:Updated:
போராட்டத்தின் முகம்
பிரீமியம் ஸ்டோரி
போராட்டத்தின் முகம்

“இந்தக் குத்துச்சண்டை எல்லாம் என்னோட போகட்டும், என் பொண்ணு  இதைக் கத்துக்கிட்டா, அவளுக்கு அடிபட்டுடுச்சுன்னா, அவளை யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க?!” - மேரி கோமின் அப்பா இப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தார். வசதியற்ற குடும்பம். மேரியின் அப்பாவும் அம்மாவும் ஒப்பந்தம் அடிப்படையில் வேளாண்மை பார்த்துக்கொண்டிருந்தார்கள். வீட்டுக்கு மூத்த மகளான மேரி, வீட்டு வேலைகள் செய்வது, தம்பி தங்கையைப் பார்த்துக்கொள்வது, படிப்பது, விளையாட்டுகளில் பங்கேற்பது என்று இயல்பாக இருந்தார். அதேநேரம், வீட்டுக்குத்தெரியாமல் பதுங்கி பதுங்கிக் குத்துச்சண்டை கற்றுக்கொண்டிருந்தார்!

2000-ல் அவர் மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டியில் பதக்கம் பெற்ற புகைப்படம் நாளிதழில் வரும்வரை, அவர் குத்துச்சண்டை பயின்ற விஷயம் அவரது அப்பாவுக்குக்கூட தெரியாது. அன்று யாருக்கும் தெரியாமல் பயிற்சி பெற்ற மேரி, இன்று ஆறு முறை உலகச் சாம்பியன் பட்டம் பெற்றவர்; தீர்க்கமான போராட்டத்தின் சொந்தக்காரர்; கூர்மையான விமர்சனங்களும், மேடு பள்ளங்களும் நிறைந்த இந்த 17 ஆண்டுகால பயணத்தில் ஒவ்வொருமுறை சறுக்கும்போதும், துணிவும் எழுச்சியுமாகத் திரும்பிவரும் அவர், காயங்களையும் தழும்புகளையும் கடந்து போராடிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான முகங்களின் பிரதிநிதி!

போராட்டத்தின் முகம்

முப்பதுகளில் இருக்கும் நிறைய விளையாட்டு வீரர்களைத் துரத்தும் அந்தக் கேள்வி மேரியையும் துளைக்காமல் இல்லை. ‘எப்போது ஓய்வு பெறுவீர்கள் மேரி?’ 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் பெற்றவுடன் கேட்கப்பட்ட இந்தக் கேள்வி, 2016 ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறாமல் போனபோதும் கேட்கப்பட்டது. இந்தமுறை இன்னும் உக்கிரமாக... அப்போது அவர் கையில் ஐந்து உலக சாம்பியன்ஷிப் பட்டங்கள் இருந்தன. மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். மூன்று பிள்ளைகளுக்குத் தாயாக இருந்தார். கிடைக்கவிருக்கும் ஓய்வூதியத்தைக் கொண்டு இடையூறுகள் இல்லாத ஒரு வாழ்க்கையை அவரால் வாழ்ந்திருக்க முடியும்.

ஆனால், ஒரு ‘நிம்மதியான’, ‘சராசரியான’ வாழ்க்கை வாழ மேரிக்கு விருப்பம் இல்லை. அவரின் உயிர்ப்பையும், அவரின் சாதனைகளை அவரே முறியடிக்கும் வேட்கையையும் அந்தக் குத்துச்சண்டைக் களத்தினுள் அவர் பொதித்து வைத்திருந்தார். அந்தக் களத்தில் நடக்கும் போராட்டமும், அடிகளும், அவர் வகுக்கும் உத்திகளும், உடலில் கிடைக்கும் காயங்களும்தான் அவரை ஒவ்வொரு முறையும் மீளச்செய்கின்றன; ஒரு தாயாக முப்பது வயதைக் கடந்த ஒருவர் எப்படி எல்லாம் இருப்பார் என்ற பொது பிம்பங்களைச் சுக்குநூறாக உடைக்கும் மகத்தான செயலையும் அந்தப் போராட்டத்தின் வழியேதான் செய்கிறார்; ஒவ்வொரு முறையும் தன்னுடைய வெற்றியால் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தபடி செல்லும் மேரியின் பயணம், நம் ஒவ்வொருவருக்குள்ளும் பெரும் நம்பிக்கையை விதைத்துவிட்டுச் செல்லும்.

நாகரிகம் மிக்கவர்கள் என்று கூறப்படும் ஐரோப்பிய நாடுகளில்கூட, 1920-களில் பெண்களின் குத்துச்சண்டைப் போட்டி என்பது கலாசார இழிவாகக் கருதப்பட்டது. பெண்களின் குத்துச்சண்டைக்கு அங்கீகாரம் என்பதே பல ஆண்டுகள் கழித்தே கிடைத்தது.

1974-ல் ஆண்களுக்காக உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறத் தொடங்கியது. சரியாக 26 ஆண்டுகள் கழித்துப் பெண்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டி 2001-ல் தொடங்கியது. அப்போது, பதினெட்டு வயதே நிரம்பிய மேரி கோம் வெள்ளிப்பதக்கம் பெற்று தன்னுடைய சர்வதேச விளையாட்டுப் பயணத்தைத் தொடங்கினார். அதற்குப் பிறகு, 2002, 2005, 2006, 2008, 2010 என்று ஐந்து முறை உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் தங்கப்பதக்கங்கள் குவித்தபடியிருந்தார். இடையில் திருமணம், குழந்தைகள் என்று ஆனபோதும்கூட, விடாமல் தன்னுடைய கனவுகளைத் துரத்தியபடி 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இக்காலகட்டத்தில்தான் மிக முக்கியமான சவாலை மேரி சந்திக்க வேண்டியிருந்தது. அவர் பங்கு பெறும் 48 கிலோ எடைப்பிரிவு போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டார். அதற்குப் பதிலாக, 51 கிலோ பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு மாற வேண்டிய கட்டாயத்தில் இருந்த மேரிக்கு, தசைப்பிடிப்பு, காயங்கள் என்று ஏகப்பட்ட சிக்கல்கள். சிறிது காலம் ஓய்வு எடுத்தார். விளையாட்டு வாழ்க்கை அவ்வளவுதான் என்று எல்லாரும் நினைத்துக்கொண்டிருந்தபோது, 2017-ம் ஆண்டு தனக்குப் பழக்கமான 48 கிலோ எடைப்பிரிவில் மீண்டும் களமிறங்கினார். ஹோ சி மின்னில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று, ‘நான் இன்னும் பழைய மேரிதான்’ என்று சொல்லாமல் நிரூபித்தார் மேரி. அதன் தொடர்ச்சியாகக் கிடைத்த பதக்கம்தான் நவம்பர் மாதம் அவர் வென்ற உலக சாம்பியன்ஷிப் பட்டமும். 

 `ஷூ வாங்க காசு இல்லை’, `சரியான சாப்பாடு இல்லை’ என்றாலும் தீவிரமாகப் பயிற்சி செய்யும் ஒடுக்கப்பட்ட பெண்களின் ஆதர்சம் மேரி. நிமிர்ந்து அவர் பயிற்சி செய்யும் ஒவ்வொரு நொடியும், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் நிச்சயம் என்றே உரைக்கின்றன. வென்று வாருங்கள் மேரி

- சிவ.உறுதிமொழி