Published:Updated:

ஆடா பராக்..!

ஆடா பராக்..!
பிரீமியம் ஸ்டோரி
ஆடா பராக்..!

ஆடா பராக்..!

ஆடா பராக்..!

ஆடா பராக்..!

Published:Updated:
ஆடா பராக்..!
பிரீமியம் ஸ்டோரி
ஆடா பராக்..!

பேலன் டி ஓர் (Ballon d’or) - கால்பந்தாட்ட உலகின் ஆகப்பெரிய விருது. மிகச்சிறந்த வீரர்களுக்கு மட்டும் கிடைக்கும் மரியாதை. ஜிடேன், மெஸ்ஸி, ரொனால்டோ என ஜாம்பவான்களின் கைகளில் தவழ்ந்த விருது. அந்த லெஜெண்டுகளின் பட்டியலில் முதல்முறையாக ஒரு பெண் பெயர் சேர்ந்திருக்கிறது.  நார்வேயைச் சேர்ந்த ஆடா ஹெகர்பெர்க் இந்த உயரிய விருதைப் பெற்றுள்ளார்.

ஆடாவுக்கு வயது வெறும் 23 தான்... ஆனால், கால்பந்துக் களத்தில் இவர் காட்டிய ஜாலங்கள் அவரை அந்த மரியாதைக்குரிய மேடையில் ஏற்றியிருக்கிறது.

தன் சகோதரி ஆண்ட்ரீன் கால்பந்து ஆடுவதைப் பார்த்து, விளையாடத் தொடங்கியவர் ஆடா.  பின்னாளில் அவரையே விஞ்சுமளவுக்கு வளர்ந்தார். 15 வயதில் தேசிய அணி, 16 வயதில் முதல் ஹாட்ரிக், 19 வயதில் உலகின் சிறந்த கிளப்பான லயானுடன் ஒப்பந்தம் என ஆடாவின் விளையாட்டுப் பயணம் டாப் கியரிலேயே இருந்தது.

ஆடா பராக்..!

கடந்த சீசனில், 55 கோல்கள், ஒட்டுமொத்தமாக 300-க்கும் மேற்பட்ட கோல்கள் என உலகில் வேறெந்த வீராங்கனையும் நெருங்கிட முடியாத தூரத்தில் நிற்கிறார் ஆடா. அதிகமும் கவனம் பெறாத மகளிர் கால்பந்தாட்டத்தின் மேல் உலகின் கவனம் விழ முக்கியக் காரணமாகத் திகழ்கிறார் ஆடா.

எத்தனை டிஃபண்டர்கள் வந்தாலும் அவர்களை ஏமாற்றும் டெக்னிக், பாக்ஸுக்கு வெளியே இருந்தும் கோலடிக்கும் விஷன், பெனால்டி ஏரியாவில் காட்டும் அந்த பர்ஃபெக்ஷன்... இவையெல்லாம்தான் ஆடாவின் பலம். ஆனால், அவரை அங்கு நிற்கவைத்தது அவை மட்டுமல்ல. ஆடா ஹெகர்பெர்க் என்ற பெண்ணின் தீர்க்கமான மன உறுதி. அதை பேலன் டி ஓர் விழா மேடையிலேயே உலகுக்கும் காட்டினார்.

மேடையில், ‘உங்களின் இலக்கு என்ன?’, ‘அடுத்த ஆண்டும் இந்த விருதை வெல்வீர்களா?’ என்பதுபோன்ற வழக்கமான கேள்விகள் கேட்கப்படுவதுதான் நடைமுறை. ஆனால் அன்று அப்படி நடக்கவில்லை. முதல் முறையாக ஒரு பெண் அந்த மேடையில் ஏறுகிறார். இதுவரை எந்த ஆண் கால்பந்தாட்ட வீரரிடமும் கேட்கப்படாத ஒரு கேள்வி ஆடாவிடம் கேட்கப்படுகிறது.

‘Can you Twerk?’

(ட்வெர்க் - உடலின் பின்பக்கத்தை வளைத்துச் சற்று கவர்ச்சியாக ஆடப்படுவது.)

 இப்படியொரு கேள்வியை இதற்கு முன் விருது வாங்கிய யாரிடமும் கேட்டதில்லை. ஆடாவிடம் மட்டும் ஏன் இப்படி ஒரு கேள்வி?

இந்தக் கேள்விக்காக மொத்த உலகமும் கொந்தளித்தது. ‘விளையாட்டுத்துறையில் காட்டப்படும் அர்த்தமற்ற பாலியல் பாகுபாடுகளுக்கு இது இன்னுமொரு எடுத்துக்காட்டு’ என்று கடுமையாகச் சாடினார் ஆண்டி முர்ரே. அந்த விருது விழா முடிந்து இரண்டு நாள்களுக்கு அதுதான் சமூக வலைதளங்களின் வைரல் விஷயமாக இருந்தது.

ஆனால் ஆடா கொதிக்கவில்லை. அவர் கோபம் கொள்ளவில்லை. 23 வயதேயான ஆடா மிகப் பக்குவமாக அதை எதிர்கொண்டார். மைதானத்தில் மட்டுமல்ல, மேடையிலும் தன்னுடைய நிதானத்தை வெளிப்படுத்தினார்.

அவர் மனதில் இருந்ததெல்லாம் ஒரே விஷயம் - ‘உலகம் மகளிர் கால்பந்தைப் பற்றிப் பேசவேண்டும்’. அப்படியொரு மிகப்பெரிய மேடை மகளிர் கால்பந்துக்குக் கிடைக்குமா தெரியாது. அதனால், அதைப் பயன்படுத்திக்கொள்வதில் தெளிவாக இருந்தார் ஆடா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆடா பராக்..!

கேள்வி கேட்டவரிடம், ‘நோ’ என்று மட்டும் அமைதியாகச் சொன்னார். அங்கு நடந்ததைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் அடுத்த விஷயங்களைப் பேசத் தொடங்கினார். தன்னுடைய அணி, அணி உரிமையாளர், நண்பர்கள், குடும்பத்தினர் எனப் புன்னகையோடு ஒவ்வொருவருக்கும் நன்றி செலுத்தியவரின் குரல், பேசி முடிக்கையில் உடைந்தது. ஆனால், விடாமல் பேசினார், ``இந்த உலகில் உள்ள பெண் குழந்தைகளுக்காகவும் நான் சொல்வது இதுதான் - ப்ளீஸ் உங்களை நம்புங்கள்” என உணர்ச்சிபொங்க அவர் பேசியபோது ஒட்டுமொத்த அரங்கமும் கண்களைத் துடைத்துக்கொண்டது.

அந்த விழா முடிந்த பிறகு ஆடா பேசினார். “அதை நான் பெரிதாகக் கண்டுகொள்ளவே இல்லை. அவரும் வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். அங்கு பேசுவதற்கு வேறு எத்தனையோ விஷயங்கள் இருந்தன. அந்த மேடை பெண்கள் கால்பந்துக்கான மேடையாக இருக்கவேண்டும் என்றுதான் நான் விரும்பினேன்” என்று சொல்ல, உலகமே ஆடாவை உச்சி மோந்தது.

அந்த மேடையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதிலிருந்து, கிடைத்த மேடையை, கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுவரை மிகவும் தெளிவாக இருந்தார் ஆடா. அந்தத் தெளிவுதான், தீர்க்கமான மனநிலைதான் அவரைக் களத்தில் சாம்பியனாக இயக்குகிறது.

அத்தனை சர்ச்சைகள் எழுந்திருந்தாலும், தான் நடந்துகொண்ட விதத்தால், தன்மீதான, மகளிர் கால்பந்தாட்டத்தின் மீதான சிறிய வெளிச்சம்கூடச் சிதறாமல் பார்த்துக்கொண்டார் ஆடா. வரலாற்றில் தன் பெயரைப் பதியவைத்துவிட்டார். வரும் ஆண்டுகளில், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், இவரிடம் சரியான கேள்விகளைக் கேட்கவேண்டும். ஏனெனில், வரும் ஆண்டுகளில் கால்பந்தாட்ட மேடைகளை அலங்கரிக்கப்போவது ஆடாதான்!

- மு.பிரதீப் கிருஷ்ணா, சிவ.உறுதிமொழி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism