Published:Updated:

“ஓட்டத்திலும் சயின்ஸ் இருக்கு!”

“ஓட்டத்திலும் சயின்ஸ் இருக்கு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஓட்டத்திலும் சயின்ஸ் இருக்கு!”

“ஓட்டத்திலும் சயின்ஸ் இருக்கு!”

ந்தச் சிறுவன் வெறும் காலில் ஓடிக் கொண்டிருந்த சாலைகளில் இப்போது அவன் படம் போட்ட பேனர்கள் நின்றுகொண்டிருக்கின்றன. வெள்ளிப் பதக்கமும் வெற்றிக் களிப்புமாக அந்த பேனரில் நிற்கிறார் தருண். இப்போது அவிநாசியின் பெருமையும் அடையாளமும் இவர்தான். தருண் அய்யாசாமி... ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று மிகப்பெரிய நம்பிக்கையாக உயர்ந்திருக்கிறார் இந்த 21 வயது இளைஞர். ஓட்டப் பயிற்சிக்காக வட இந்தியாவை முற்றுகையிட்டிருந்த புயல், இப்போதுதான் சொந்த ஊர்ப் பக்கம் தரை ஒதுங்கியிருக்கிறது. அதற்குள் ஒடிசா சென்று தேசிய ஓப்பன் அத்லெட்டிக்ஸ் சாம்பியன்ஷிப்பிலும் வென்று திரும்பியிருக்கிறார் தருண். ஓடிக்கொண்டே இருந்தவரை ஓர் ஓய்வு நாளில் சந்தித்தேன்.

“ஓட்டத்திலும் சயின்ஸ் இருக்கு!”

“வாழ்த்துகள்... ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறீர்கள். இதற்கு எப்படித் தயாரானீர்கள்?”

“ஒரு வருஷ போராட்டம் அது. அந்தத் தொடருக்காக வீட்டுக்கே வராமல் தொடர்ந்து பிராக்டீஸ் பண்ணிட்டிருந்தேன். இறுதிப் போட்டிக்கு முன் சைக்கலாஜிகலா என்னை பலப்படுத்திக்கிட்டேன். என்னோடு போட்டியிட் டவர்கள் பற்றி நல்லா தெரிஞ்சுக்கிட்டேன். ஃபைனலிஸ்ட்களின் பெஸ்ட் பர்சனல் டைமிங்கையும் ஒப்பிட்டுப்பார்த்தேன். அதில் என்னைவிட மூணு பேர் நல்ல டைமிங் வச்சிருந்தாங்க. நான் நான்காவது இடத்தில் இருந்தேன். என் பர்சனல் டைமிங்கை முறியடிச்சா, அவங்கள்ல ஒருவரையாவது என்னால் முந்திட முடியும்னு தோணுச்சு. ஒரு பதக்கம் ஜெயிச்சிடலாம். நிச்சயமா அதை முறியடிக்க முடியும்னு நம்பிக்கை இருந்துச்சு. அந்த நம்பிக்கையை நிஜமாக்க வெறியோடு ஓடினேன். 48.96 விநாடிகள்ல தேசிய சாதனையோடு வெள்ளியும் ஜெயிச்சிட்டேன்.’’

“அந்த வெற்றித்தருணம் எப்படி இருந்துச்சு?”

“ரேஸ் முடிஞ்சதும் அம்மாவிடம் பேச போனைத் தேடினேன். அதைக் கண்டுபிடிச்சு கால் பண்ணினா ‘கரன்ட்லி பிஸி’ன்னு வந்துட்டே இருந்துச்சு. என்னன்னு பார்த்தா, அம்மா சொந்தக்காரங்களுக்கெல்லாம் போன் பண்ணி சொல்லிட்டிருந்திருக்காங்க. என் குரல் கேட்டதும் ரொம்பவே எமோஷனல் ஆகிட்டாங்க. எனக்கும் வார்த்தையே வரல. என் வாழ்க்கைல மறக்க முடியாத நாள், மறக்க முடியாத தருணம் அது. ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு. எதிர்பார்த்ததைவிடப் பெரிய வெற்றி கிடைச்சது. யார் யாரோ கால் பண்ணிப் பாராட்டுனாங்க. அவ்வளவு நெகிழ்ச்சியா இருந்துச்சு. ரொம்ப சந்தோஷமா இருக்கு.’’

“49 விநாடிகளுக்குள் 400 மீட்டர் தடை ஓட்டத்தை நிறைவு செஞ்ச முதல் இந்தியர் நீங்கள்தான். அது எப்படி சாத்தியமாச்சு?”

“ஓட்டத்திலும் சயின்ஸ் இருக்கு!”

“என்னோட டெக்னிக்ல நிறைய மாற்றம் கொண்டுவந்தேன். தடையைத் தாண்டும்போது தொடைப் பகுதி ரொம்ப சரியா ஸ்ட்ரெட்ச் ஆகணும். இல்லைனா வேகம் குறையும், காயங்களும் ஏற்படும். அதை ரொம்ப கவனமா சரிசெஞ்சேன். பிறகு என்னோட ஸ்ட்ரைட் எண்ணிக்கையைக் குறைச்சேன். இப்படி டெக்னிக்கலா எதெல்லாம் என்னோட பர்ஃபாமன்ஸை அதிகரிக்குமோ, அதிலெல்லாம் அதிக கவனம் செலுத்தினேன். கண்ண மூடிட்டு ஓடிட முடியாதுல்ல. ஓட்டத்துலயும் நிறைய சயின்ஸ் இருக்கு. அதைச் சரியா பயன்படுத்தினேன்.’’

“உங்கள் தடகள தாகம் எப்போது தொடங்கியது?”

“சின்ன வயசுல இருந்தே எனக்கு விளையாட ரொம்பப் பிடிக்கும். ஸ்கூல்ல நான் கோ - கோ பிளேயர். அப்போ அத்லெடிக்ஸ்மேல பெருசா ஆர்வம் இல்ல. என்னோட வேகம், ஸ்டாமினா எல்லாம் பார்த்துட்டு என்னோட பயிற்சியாளர்தான் என்னை இந்தப் பக்கம் அனுப்பி வச்சார். ஒன்பதாவது படிக்கும்போது ஓட ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள்லயே அது பிடிச்சுப்போச்சு. ஸ்கூல் போட்டிகள்ல ஜெயிக்க ஆரம்பிச்சது மாவட்ட, மாநில அளவில் தொடர்ந்தது. வெற்றிகள் ஆர்வத்தை இன்னும் தூண்டுச்சு. பிறகு இதுதான் எல்லாமுமேன்னு ஆகிடுச்சு.’’

“உங்களின் அடுத்த இலக்கு?”

``அடுத்த வருஷம் வர்ற ஆசிய சாம்பியன்ஷிப்ல தங்கம் ஜெயிக்கணும். இன்னும் பெட்டரான டைமிங் வைக்கணும். டைமிங் குறைச்சிட்டே இருந்தா பெரிசா ஜெயிக்கலாம்.’’

மு.பிரதீப்கிருஷ்ணா - படங்கள்: வீ.நாகமணி