Published:Updated:

சதுரங்கத்தில் கலக்கும் அஜய்!

சதுரங்கத்தில் கலக்கும் அஜய்!
பிரீமியம் ஸ்டோரி
News
சதுரங்கத்தில் கலக்கும் அஜய்!

சதுரங்கத்தில் கலக்கும் அஜய்!

சென்னை, கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் உள்ள பூங்காவில்  விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அருகே சென்று “இங்கே அஜய்னு...’’ என முடிப்பதற்குள்,  ‘`நம்ம செஸ் சாம்பியன்தானே வாங்க’’ என உற்சாகமாக அழைத்துச் செல்கிறார்கள்.

பூங்காவுக்கு எதிரில்தான் அஜய் வீடு இருந்தது. வீட்டின் மூலை முடுக்கெல்லாம் பதக்கங்களும் கேடயங்களும் நிறைந்திருந்தன. அஜய், சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த நேஷனல் சப் ஜூனியர் செஸ் டோர்னோமென்ட்டில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார்.

“அண்ணா, என் அப்பா கார்த்திகேயன், சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அம்மா வித்யா, ஐ.டி-யில் வொர்க் பண்ணினவங்க. இப்போ எனக்காக வேலையை விட்டுட்டு என்னை கவனிச்சுக்கிறாங்க. இது என் செல்லமான தங்கச்சி சஞ்சனா’’ என அறிமுகப்படுத்துகிறார்.

சதுரங்கத்தில் கலக்கும் அஜய்!

“சின்ன வயசிலிருந்தே செஸ் என் உயிர். 10 வருஷமா பொழுதுபோக்கா மட்டுமே விளையாடிட்டிருந்தேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் தீவிரமா ஆர்வம் காட்டினேன். 2016-ம் ஆண்டு, ஏழாவது படிச்சுக் கிட்டிருந்தபோது, 1600 பாயின்ட்ஸ் வரைதான் இருந்தேன். ஜனவரியில் நடந்த ஸ்டேட் லெவல் போட்டியில 1900 பாயின்ட்ஸ் எடுத்து ரெண்டாவது இடத்தைப் பிடிச்சேன். எனக்குள் பெரிய தன்னம்பிக்கை வந்துச்சு. அப்புறம் மலேசியா, ஸ்பெயின், துபாய், ஷார்ஜா என வெளிநாடுகளுக்குப் பயணிக்க ஆரம்பிச்சாச்சு” என்கிற அஜய், இந்த 13 வயதிலேயே பல்வேறு நாடுகளுக்குப் பயணித்துவிட்டார்.

சதுரங்கத்தில் கலக்கும் அஜய்!


‘`அஜய்யின் அப்பாவும் செஸ் பிளேயர்தான். அவர்தான், அஜய்க்கு ரோல் மாடல். அஜய்க்கு ஒரு விஷயத்தை ஒருமுறை சொன்னாலே கற்பூரம் மாதிரி பிடிச்சுப்பான். போட்டிக்குப்  போகும்போதெல்லாம் ‘ரேட்டிங்க்ஸ் முக்கியமில்லே. நீ உன் இன்ட்ரஸ்ட்டுக்கு விளையாடு’ என்று அவன் அப்பா சொல்வார். செஸ் விளையாட்டைப் பொறுத்தவரை கத்துக்கிறதைவிட அப்ளை பண்ணிப் பார்க்கணும். அதனால், சென்னை, மும்பைன்னு எங்கே டோர்னமென்ட், கேம்ப் நடந்தாலும் அழைச்சுட்டுப் போயிடுவோம். இந்த நேஷனல் லெவல் வெற்றிக்கு அஜய் அப்பாவின் நம்பிக்கையும் காரணம்” என்கிறார் அம்மா வித்யா.

“உண்மையைச் சொல்லணும்னா, பையனுக்காக வேலையை விட்டுட்டு முழு நேரமும் பக்கபலமா இருக்கிறது அஜய்யின் அம்மாதான். ஸ்கூலுக்குத் தயார்பண்ணி அனுப்புறது, போட்டிகளுக்கு அழைச்சுட்டுப் போறது, ஒரே நாளில் எக்ஸாம், டோர்னமென்ட்னு வந்தால் மேனேஜ் பண்றது என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து கவனிக்கிறது எல்லாமே அவன் அம்மாதான்.’’ என்கிறார் அப்பா கார்த்திகேயன்.

“தேசிய அளவிலான போட்டிக்குப்  போகும்போது, ‘உன்னால் முடிஞ்ச அளவுக்கு விளையாடு.  ஒருவேளை தோற்றுவிட்டால் அடுத்த நிமிஷமே மறந்துடு. அடுத்த மேட்ச்ல பார்த்துக்கலாம்’னு சொன்னாங்க. ஆனா, நான் நம்பிக்கையோடு இருந்தேன். நாம தோத்துடவே கூடாதுன்னு உறுதியா நினைச்சுட்டு ஒவ்வொரு மூவ் வெச்சேன். 2300 ரேட்டிங்கில் சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்சத்தை ஜெயிச்சேன். அந்த ஃபீலிங்கை சொல்லவே முடியலை. ரொம்ப ஹேப்பியா இருந்துச்சு. இன்னும் நல்லா விளையாடி, கிராண்ட் மாஸ்டர் ஆகணும்’’ என்கிறார் அஜய்.

உலக அரங்கில் தமிழகத்தின் சதுரங்க நாயகனாக உயர வாழ்த்துகள் அஜய்!

- மு.பார்த்தசாரதி

படம்: கார்த்திகா