Published:Updated:

இனி இவங்கதான்!

இனி இவங்கதான்!
பிரீமியம் ஸ்டோரி
இனி இவங்கதான்!

மு.பிரதீப் கிருஷ்ணா

இனி இவங்கதான்!

மு.பிரதீப் கிருஷ்ணா

Published:Updated:
இனி இவங்கதான்!
பிரீமியம் ஸ்டோரி
இனி இவங்கதான்!

ஃபெடரர், நடால், ரொனால்டோ என இன்னும் சீனியர்கள் கோலோச்சிக்கொண்டிருக்கும் விளையாட்டு உலகில், இப்போது பல புதிய நட்சத்திரங்கள் மின்னத் தொடங்கிவிட்டனர். பல ஆண்டுப் போராட்டத்துக்குப் பின் சிலருக்கு 2018 பெரும் புகழைக் கொடுத்திருக்கிறது. உலக அளவில் சிலர் அறிமுகப் போட்டிகளிலேயே சரித்திரம் படைத்திருக்கின்றனர். சில இந்திய நட்சத்திரங்கள் உலக அளவில் தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்துள்ளனர். சர்வதேச, தேசிய அளவில் சாதனைகள் படைத்த இந்த ஆண்டின் ட்ரெண்டிங் ஸ்டார்ஸ் சிலர் இங்கே...

இனி இவங்கதான்!


ஈட்டி  எறிதல் நீரஜ் சோப்ரா

நீ
ரஜ் சோப்ரா -  இந்திய தடகளத்தின்  புதுமுகம். இன்னும் சில ஆண்டுகளில் இந்திய தடகளத்தின் முகம்! ஒவ்வொரு தொடரிலும் இவர் எறியும் ஈட்டிகள் பதக்கங்களை சரியாகக் குறிவைத்துவிடுகின்றன. ஒவ்வொரு தொடரிலும் தேசிய சாதனைகளைத் தகர்த்துக் கொண்டிருந்த இந்த இளைஞன், 2018-ல் உலக சாம்பியன்களுக்கு எல்லாம் சவால் விடத் தொடங்கி விட்டார். காமன்வெல்த் தங்கம், தோஹா டைமண்ட் லீகில் நான்காம் இடம் என ஒவ்வொரு தொடரிலும் முத்திரை பதித்துக்கொண்டிருக்கிறார். 20 வயதிலேயே 87.43 மீட்டர் வரை ஈட்டி வீசியிருக்கும் நீரஜ், இன்னும் சில ஆண்டுகளில் ஒலிம்பிக் மேடை ஏறிவிடுவார். ஏனெனில், உலகிலேயே ஈட்டி எறிதலில் 100 மீட்டருக்கும் மேல் வீசியுள்ள ஒரே வீரரான ஊவே ஹோன்தான் இவருக்குப் பயிற்சியாளர்!

இனி இவங்கதான்!

கால்பந்து  கிலியன் எம்பாப்பே

ன்னும் 15 வருடம் தன்னை ஆளப்போகும் வீரனை இந்த உலகக் கோப்பையில் கண்டெடுத்துள்ளது கால்பந்து. முதல் உலகக் கோப்பையிலேயே தன் ஆட்டத்தால் அனைவரையும் மெர்சலாக்கிவிட்டார் இந்த 19 வயது பிரெஞ்சு வீரர். 60 ஆண்டுகளுக்கு முன் கால்பந்தின் கடவுள் பீலே உலக அரங்குக்குள் நுழைந்ததை நினைவுபடுத்துகிறது எம்பாப்பேவின் இந்தப் பயணம். ரசிகர்கள், விமர்சகர்கள், முன்னாள் இந்நாள் வீரர்கள் என அனைவரும் இந்த இளம் புயலை உச்சிமுகர்கின்றனர். “எம்பாப்பே என் சாதனைகளை இப்படித் தகர்த்துக்கொண்டிருந்தால், நான் மீண்டும் பூட்ஸ்களைத் தூசி தட்டவேண்டியிருக்கும்” என்று பீலேவே சொல்லியிருக்கிறார். இதைவிட அவரது திறமைக்கான பாராட்டு வேறென்ன வேண்டும்?

இனி இவங்கதான்!

துப்பாக்கி  சுடுதல்  அனிஷ் பன்வாலா

கோ
ல்ட் கோஸ்டில், 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றபோது அனீஷுக்கு வயது 15. தன்னைவிட இரண்டு, மூன்று மடங்கு வயதொத்தவர்களுக்கு இடையே போட்டியிட்டு, மிக இளம் வயதில் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் அனிஷ். மிகவும் பரபரப்பான கட்டத்தில், 15 வயது அனிஷ் காட்டிய முதிர்ச்சி அசாத்தியமானது. அதுதான் இவரை இந்தியாவின் எதிர்கால நம்பிக்கையாகவும் பார்க்க வைக்கிறது. சிட்னி, சூல் நகரங்களில் நடந்த ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்களிலும் தங்கம் வென்று அழுத்தமாகத் தன் தடத்தைப் பதிவு செய்துள்ளார் இந்த ஜூனியர் சாம்பியன்!

இனி இவங்கதான்!

ஓட்டப் பந்தயம் ஹீமா தாஸ்

லகின் எந்த டிராக்கிலும் இந்தியக் கால்கள் அப்படி ஓடியதில்லை. ஹீமா - சரித்திரத்தைத் திருத்தி எழுதியிருக்கிறார். பின்லாந்தில் நடந்த 20 வயதுக்குட்பட்டோர் உலக சாம்பியன்ஷிப்பில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார் இந்த அசாம் பெண். அதிலும் அந்தக் கடைசி  80 மீட்டரை அவர் கடந்த வேகம்... புயலும் தோற்றுப்போகும்! இந்தியத் தடகள வரலாற்றில், டிராக் பிரிவில் கிடைத்துள்ள முதல் தங்கம் இது. பதினெட்டே வயதில் மகத்தான சாதனையைப் படைத்திருக்கும் ஹீமா, காமன்வெல்த் போட்டியிலும் ஃபைனல் வரை முன்னேறியுள்ளார். சரியான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, தரமான பயிற்சியும் கொடுக்கப் பட்டால் இவரால் நிச்சயம் சீனியர் போட்டிகளிலும் வெற்றிபெற முடியும்.

இனி இவங்கதான்!

கிரிக்கெட்  ஃபகர் ஜமான்

ர்வதேச அரங்கில் வீழ்ந்துகொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கு குளுக்கோஸ் ஏற்றிக்கொண்டிருக்கிறார் ஃபகர் ஜமான். சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டியில் சதம், ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் என கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட்டைத் தலைப்புச் செய்தியாக்கியவர் இவர்தான். 18 போட்டிகளில் ஆயிரம் ரன்களைக் கடந்த விவியர் ரிச்சர்ட்ஸின் 38 ஆண்டுக்கால சாதனையை முறியடித்து பிரமிக்க வைத்துள்ளார் இந்த 28 வயது பேட்ஸ்மேன். இதே வேகத்தில் பயணித்தால் விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் ஆகியோர் அடங்கிய எலைட் பேட்ஸ்மேன்கள் லிஸ்டில் சீக்கிரம் இடம்பிடித்துவிடுவார் ஜமான்.

இனி இவங்கதான்!

செஸ்  பிரக்ஞானந்தா

12
வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டம். ஒரு மாபெரும் செஸ் சகாப்தம் சென்னையில் தொடங்கியிருக்கிறது. உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் சென்னை, பாடியைச் சேர்ந்த  பிரக்ஞானந்தா. 7 வயதில் ‘வேர்ல்டு யூத் சாம்பியன்ஷிப்’ வென்றவர், அடுத்த ஐந்தே ஆண்டுகளில் கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார். செஸ் ரேங்கிங் பட்டியலில் முன்னணியில் இருக்கும் இவரின் பெயர், சதுரங்கத்தின் வரலாற்றைச் சுமந்துகொண்டிருக்கும் ரஷ்யாவின் புகழ்பெற்ற செஸ் மியூசியத்திலும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு, 64 சதுரங்களுக்கிடையே இந்தியாவின் பெயரை எழுதப்போகும் லிட்டில் ஜீனியஸ் இவராகத்தான் இருப்பார்!

இனி இவங்கதான்!

டென்னிஸ்  சிமோனா ஹாலப்

செ
ரீனா, கெர்பர், வோஸ்னியாக்கி, முகுருஸா, க்விட்டோவா என, கடும் சவால் நிறைந்த பெண்கள் டென்னிஸ் அரங்கில், தன் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார் சிமோனா ஹாலப். இத்தனை ஆண்டுகளாக ‘டாப் பிளேயர்’ லிஸ்டில் மட்டுமே இருந்தவர், இந்த ஆண்டு சாம்பியன் அவதாரம் எடுத்துவிட்டார். ஆண்டுத் தொடக்கத்தில் பல டென்னிஸ் தொடர்களில் பட்டையைக் கிளப்பியவர், கிராண்ட் ஸ்லாம் தொடர்களிலும் சீறத் தொடங்கினார். ஆஸ்திரேலிய ஓப்பன் ஃபைனலில் தோற்றாலும், பிரெஞ்சு ஓப்பன் வென்று, தரவரிசையிலும் நம்பர் ஒன் அரியணை ஏறினார். டென்னிஸுக்கு மட்டுமல்லாமல், மொத்த ரொமானியாவுக்குமே இப்போது சிமோனாதான் ஐகான்!