Published:Updated:

ஆறாவது தங்கம்! - உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் வரலாறு படைத்த மேரிகோம்

ஆறாவது தங்கம்! - உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் வரலாறு படைத்த மேரிகோம்
ஆறாவது தங்கம்! - உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் வரலாறு படைத்த மேரிகோம்

உலக மகளிர் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில், 6-வது முறையாகத் தங்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார், இந்தியாவின் மேரி கோம். 

Photo Credit: Twitter/@BFI_official

உலக மகளிர் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகள் டெல்லியில் நடைபெற்றுவருகின்றன. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில், 48 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹானா ஒகோடாவை எதிர்கொண்டார். முதல் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய மேரி கோமுக்கு, ஒகாடோ இரண்டாவது சுற்றில் அழுத்தம்கொடுத்தார். மூன்றாவது சுற்றில் ஒகாடோவின் கை ஓங்கியிருந்தாலும், 3 சுற்றுகள் முடிவில் 5:0 என்ற கணக்கில் மேரி கோம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். 

உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகளில் மேரி கோம் வெல்லும் 6-வது தங்கப்பதக்கம் இதுவாகும். இதன்மூலம், ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளிலும் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகளில் அதிக தங்கம் (6 முறை) வென்றவர் என்ற சாதனையை கியூபாவின் ஃபெலிக்ஸ் சாவோனுடன் மேரிகோம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். வெற்றிக்குப் பின்னர் ரசிகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்த மேரி கோம், ``நான் இன்று சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறேன். ஏனென்றால், கடந்த சில போட்டிகளில் சரியாக நான் விளையாடவில்லை என நினைக்கிறேன். அதேபோல, நான் தேர்ந்தெடுத்த பிரிவும் சவாலானது’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.