பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

எங்களையும் கண்டுகொள்ளுங்கள்!

எங்களையும் கண்டுகொள்ளுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
எங்களையும் கண்டுகொள்ளுங்கள்!

தமிழ்ப்பிரபா - படங்கள்: தே.சிலம்பரசன்

``டிக்கெட்டுக்கு 3,500 ரூபாய் கேட்டாங்க. அம்மா, வேலைசெய்ற டீக்கடையில கேட்டுப்பார்த்தாங்க, கிடைக்கலை. அப்புறம் பக்கத்து வீட்ல வாங்கிக்கொடுத்தாங்க. அதைவெச்சுதான் உத்தரப்பிரதேசம் போனேன்” எனச் சொல்லும் சபரிநாதன், சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் தேசிய அளவில் நடைபெற்ற வான்வழி விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற சிறுவன். இவனைப்போல போட்டியில் கலந்துகொள்வதற்குக் கூடப் பணம் இல்லாமல் இந்த விளையாட்டில் தேசிய அளவில் சாதித்த பல மாணவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் அதிகமானோர் விழுப்புரத்தைச் சார்ந்தவர்கள். 

மல்லர் கம்பம் பற்றி விழுப்புரத்தில் ஆரம்பித்த பயிற்சிதான், இப்போது தமிழ்நாடு முழுக்கப் பரவிவருகிறது. இந்த விளையாட்டுகளில் ஒன்றானதுதான் ஏரியல் சில்க். இரு கம்பங்களுக்கு நடுவே அந்தரத்தில் தொங்கவிடப்பட்ட பட்டுத்துணியைப் பிடித்தபடி மேலே ஏறி உடலை வளைத்து சாகசம்செய்வது. 13-06-2018 அன்று உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 12 மாநிலங்கள் பங்கேற்றன. அதில் 15 தங்கம், 11 வெள்ளி, 5 வெண்கலம் என முதல் இடத்தைப் பிடித்தனர் தமிழக மாணவர்கள். இதில் விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 26 பேர்.

எங்களையும் கண்டுகொள்ளுங்கள்!

விழுப்புரம் பழைய பேருந்துநிலையம் அருகே இருக்கும் நகராட்சிப் பூங்காவில், காலை 6 மணிக்கெல்லாம் பயிற்சிக்காகக் கூடிவிடுகிறார்கள் மாணவர்கள். ஒருபக்கம் சிலம்புப் பயிற்சி, இன்னொரு பக்கம் மல்லர் கம்பம், மற்றொரு பக்கம் கயிறு ஏறுதல், வேறொரு பக்கம் `ஏரியல் சில்க்’ என `வார்ம் அப்’ முடித்த கொஞ்ச நேரத்திலேயே தங்களுக்குரிய விளையாட்டுப் பயிற்சிகளில் தீவிரமடைகிறார்கள்.

மேல் சட்டை இல்லாமல், ஒரு சிறுவன் தன் உடலின் வியர்வையைத் துடைத்துக்கொண்டு, கையில் பவுடரைக் கொட்டித் தட்டிக்கொண்டான். வழுவழுப்பான தேக்குமரக் கம்பத்தில் தன் உடலை முறுக்கியவாறு ஏறி அதன் உச்சியில் நின்று எங்களைப் பார்த்துச் சிரித்தான். பிறகு, லாகவமாக உடலை முறுக்கியவாறு கீழே இறங்கி வந்து, எங்களுடன் பேசத் தொடங்கினான்.

``நாங்க ஒரு போட்டிக்கு குஜராத் போகும்போது, டிரெயின்ல உட்காரக்கூட இடம் இல்லை. எப்டியோ போய்ச் சேர்ந்துட்டோம். சாப்பாட்டுக்கும் காசு இல்லை. ஆனா, எங்களை இவ்ளோ கஷ்டப்பட்டுக் கூட்டிட்டு வந்த எங்க மாஸ்டருக்காக, கொலைப்பசியிலயும் உயிரைக்கொடுத்து மல்லர் கம்பம் ஏறினேன். ஜெயிச்சேன். அந்த மெடலை வாங்கும்போது அழுதேன். ஆனா, அது பசியால அழுததுன்னு எனக்கு மட்டும் தாண்ணே தெரியும்” என்ற  மாணவன் ராமச்சந்திரனின் புன்னகையில் வலியும் இருந்தது.

``அண்ணா, போன மாசம் நாங்கெல்லாம் உத்தரப்பிரதேசத்துல இருக்கிற ஜான்சிக்குப் போயி ஃபேப்ரிக் போட்டியில 31 மெடல்கள் ஜெயிச்சோம். ஆனா, எந்த பேப்பர்லயும் எங்களப் பத்தி ஒரு சின்ன நியூஸ்கூட வரலை” என்கிறார் ஒரு மாணவி. ``அண்ணா, நியூஸ் வரலைனாக்கூடப் பரவாயில்லை. போட்டிக்காக வெளிமாநிலத்துக்கு நாங்க போகும்போது, டிரெயின் டிக்கெட்ல கன்சஷன் கொடுத்தாலாவது நல்லா இருக்கும்” என்கிறார் இன்னொரு மாணவி.

பயணத்துக்கு ஆகும் செலவுக்கு அக்கம்பக்கம் கடன் வாங்கி, நகையை அடமானம் வைத்து, சில மாணவர்களுக்குப் பயிற்சியாளர்களே பணம் சேர்த்துக்கொடுத்து... இப்படித்தான் செல்கிறார்கள். தேசிய அளவிலான போட்டிக்கு வெளிமாநிலத்துக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் மிகப்பெரிய பணத் தட்டுப்பாட்டுடன்தான் இவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

எங்களையும் கண்டுகொள்ளுங்கள்!

``மல்லர் கம்பம், ஏரியல் சில்க், மால் ரோப்... இந்த விளையாட்டுகளைப் பற்றி நிறைய பேருக்குத் தெரியாததாலேயே இதுக்குக் கவனம் கிடைக்க ரொம்பவும் போராடவேண்டியிருக்கு. குறிப்பா, மல்லர் கம்பம் விளையாட்டு. சோழ, பல்லவர் காலத்துல இது ரொம்பப் பிரபலமா இருந்தது. மல்யுத்தத்தோடு தொடர்புடைய ஒரு விளையாட்டு இது. மல்யுத்தத்தில் உயிர்ச்சேதம் அதிகமானதால அன்றைய மன்னர்கள் இந்த மல்லர் கம்பம் விளையாட்டை அதிகமாக உற்சாகப்படுத்தி யிருக்காங்க. ஆனா, தமிழ்நாட்டுல இதை எடுத்து வழிநடத்த ஆள் இல்லாம, வடமாநிலங்கள்ல இந்த விளையாட்டை நடத்த ஆரம்பிச்சிட்டாங்க. நமக்கும் இந்த விளையாட்டுக்குமான தொடர்பு அற்றுப்போயிடுச்சு. அதை மீட்டெடுக்கும் முயற்சியாதான், தொடர்ந்து மாணவர்களை ஊக்கப்படுத்துறோம். ஆனா, அரசாங்கம் எங்க விளையாட்டைப் பெருசா கண்டுக்கிறதேயில்லை” என வருத்தத்தோடு பதிவுசெய்கிறார் பயிற்சியாளர் ஜனார்த்தனன்.

இங்கு இந்த விளையாட்டுகள் அனைத்தும் இலவசமாகவே பயிற்றுவிக்கப்படுகின்றன. ``மாசம் நூறு, இருநூறுன்னு கட்டணம் வைக்கலாம். ஆனா, அதைக்கூடத் தர இயலாத குடும்பப் பின்னணிகொண்ட மாணவர் களுக்குத்தான் பயிற்சி அளிச்சிட்டிருக்கோம்” என்றார் இன்னொரு பயிற்சியாளர் ஆதித்தன்.

மல்லர் கம்பத்தைப் பள்ளியில் விளையாடக்கூடிய விளையாட்டாக மற்ற மாநிலங்களில் அங்கீகரித்துவிட்டாலும், இன்னும் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இது அமல் படுத்தவில்லை. மாணவர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரிடமும் இதுகுறித்த வருத்தம் இருக்கிறது. ``ஸ்கூல் கேம்ஸ்ல இது சேர்க்கப்பட்டா மட்டும்தான் எங்களுக்கான எல்லாச் சலுகைகளும் கிடைக்கும்.  இது சீக்கிரம் சேர்க்கப்படணும்” என்பது இவர்களின் முக்கியமான கோரிக்கையாக இருக்கிறது.

விழுப்புரத்தில் ஓரமாக, பூங்காவில் பயின்றுகொண்டிருக்கும் இந்த மாணவ மாணவியர்தாம், ஒருபக்கம் யாரும் கவனிக்கப் படாமல் தமிழ்நாட்டுக்குப் பதக்கங்களைக் குவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பூங்காவில் மாணவர்களுக்கான பயிற்சிக்கு சரியான உபகரணங்கள் இல்லை. நைந்துபோய்க் கிடக்கிற மெத்தையை நம்பியே மாணவர்கள் தலைகுப்புறக் கீழே விழுந்து, உடனே எழுந்து புன்னகையுடன் சல்யூட் அடிக்கிறார்கள்.

இது வலுவான சல்யூட்டாக மாற வேண்டும்.