Published:Updated:

வில்வித்தையில் கலக்கும் ஷாசன் ஜெயின் கல்லூரி மாணவிகள்!

தமிழ்நாடு வில்வித்தை சங்கம் நடத்திய 11 வது மாநில அளவிலான வில்வித்தை கோப்பை தொடர் சமீபத்தில் நடந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல அணிகள் கலந்துகொண்டன. 23 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் உட்பட மொத்தம் 38 பதக்கங்களை ஷாசன் ஜெயின் கல்லூரி மாணவிகள் வென்றுள்ளனர்.

வில்வித்தையில் கலக்கும் ஷாசன் ஜெயின் கல்லூரி மாணவிகள்!
வில்வித்தையில் கலக்கும் ஷாசன் ஜெயின் கல்லூரி மாணவிகள்!

ள்ளுபடியில் பொருள்கள் வாங்க அலைமோதிக்கொண்டிருக்கும் தியாகராய நகரில், ஒலிம்பிக் பதக்கம் வாங்க வேண்டுமென்ற லட்சியத்தோடு உழைத்துக்கொண்டிருக்கிறது ஒரு பெண்கள் குழு. ஷாசன் ஜெயின் பெண்கள் கல்லூரியின் நுழைவு வாயிலிலேயே `ஒலிம்பிக் கோல்ட் க்வஸ்ட்' என்ற பேனர் வரவேற்கிறது. அதன் அருகே தங்கள் அம்புகளை, இலக்கை நோக்கி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் அந்த ஆறு பெண்கள். அவர்கள்தான் இப்போது தமிழகத்தின் சாம்பியன்கள். கல்லூரி வகுப்புகளுக்கே போகாமல், 14 மணி நேரமும் பயிற்சியில் ஈடுபடும் 6 மாணவிகள்தான் தற்போது வில்வித்தையின் ’ஸ்டேட்’ சாம்பியன்ஸ்.

தமிழ்நாடு வில்வித்தை சங்கம் நடத்திய 11 வது மாநில அளவிலான வில்வித்தை கோப்பை தொடர் சமீபத்தில் நடந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல அணிகள் கலந்துகொண்டன. 23 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் உட்பட மொத்தம் 38 பதக்கங்களை ஷாசன் ஜெயின் கல்லூரி மாணவிகள் வென்றுள்ளனர்.

ஒலிம்பிக் கனவு

ஷாசன் ஜெயின் கல்லூரி மாணவிகளான கமனா, நிவேதா, உமா ஆகியோர் ரீகர்வ் (Re Curve) பிரிவிலும், ஸ்ரீதுர்கா, யுவஸ்ரீ, மஹிமா ஆகியோர் காம்பவுண்டு (Compound) பிரிவிலும் பயிற்சி பெற்று வருகின்றனர். “ஒரு க்ரூப் ஒலிம்பிக் பதக்கம் வாங்கணும் என்ற கனவிலும், இன்னொரு க்ரூப் உலக சாம்பியன்ஷிப்ல வெற்றி பெறணும் என்ற கனவோடும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கோம். காலை 4 மணிக்கு தொடங்குற எங்க பயிற்சி மாலை 7 மணிக்கு முடியும்” என்றார் மாநில அளவிலான தனிநபர் காம்பவுண்டு பிரிவில் தங்கம் வென்ற ஸ்ரீதுர்கா.

தமிழ்நாடு வில்வித்தை அமைப்பின் பொதுச் செயலாளர் ஷிஹான் ஹுசைனியின் தலைமையில் மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். 22 மாதங்களாகத் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாணவிகளின் ஒலிம்பிக் பயணம் 4 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. மாநில வில்வித்தைத் தொடரில் வெற்றி பெற்றது மட்டுமன்றி, ஒலிம்பிக் போட்டிகளில் தேர்ச்சி பெறுவதற்கான சிறப்பான ஸ்கோரை தன்வசம் வைத்துள்ளனர். வில்வித்தை விளையாட்டில் உள்ள ரீகர்வ் (நவீன வில்), காம்பவுண்டு (இயந்திர வில்) என்ற இரு பிரிவுகளில் இந்த மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில், ரீகர்வ் பிரிவு மட்டுமே ஒலிம்பிக் தொடரில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. காம்பவுண்டு பிரிவு, வில்வித்தை உலக சாம்பியன்ஷிப் தொடரில் இடம் பிடித்துள்ளது.

14 மணி நேர பயிற்சி

ஷாசன் ஜெயின் கல்லூரி மாணவிகளின் பயிற்சிக்கு நிதி உதவி அளித்து வரும் கல்லூரிச் செயலாளர் அபய் குமார், “ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வெல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. பயிற்சியாளர் உதவியோடு வில்வித்தை அணியை உருவாக்கினோம். இப்போது மாநில அளவில் சாம்பியனாக உள்ள மாணவிகள் அணி, சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற பயிற்சி மேற்கொண்டு வருகிறது” என்றார்.

``இந்த 6 மாணவிகளுக்கும், டாக்டர். எம்.ஜி.ஆர் ஜானகி அம்மாள் கல்லூரி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில், 14 மணி நேரம் வில்வித்தைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. முக்கியமாகப் போட்டியை எதிர்கொள்ளத் தேவையான மனவளப் பயிற்சியில் வீராங்கனைகள் ஈடுபட்டுள்ளனர். டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளதால், போட்டி நடைபெற இருக்கும் இடத்தின் மாதிரி வடிவம் புதுச்சேரியில் அமைக்கப்பட உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முன், புதுச்சேரியில் பயிற்சி மேற்கொள்ளப்படும்’’ என்றார் கராத்தே ஹூசைனி.

2020 ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில், முழு நேர பயிற்சி, சரியான ஓய்வு, உணவுக் கட்டுப்பாடு எனத் திட்டமிட்டு பயணித்து வருகின்றனர். “எங்களுடைய பெற்றோர், கல்லூரி நிர்வாகம், கோச், ப்ரெண்ட்ஸ் ஆகியோரின் சப்போர்ட் எங்களுக்கு உதவியா இருக்கு” என்றார் கமானா. அவரின் கருத்தை ஆமோதித்த மற்ற மாணவிகள், ``நாங்க வெச்ச குறி தப்பாது” என்றனர்  கோரஸாக!