Published:Updated:

6 வயதில் பாக்ஸிங் கிளவுஸ்...16 வயதில் பளுதூக்குதலில் தங்கம்... யூத் ஒலிம்பிக் சாம்பியன் ஜெரமி!

6 வயதில் பாக்ஸிங் கிளவுஸ்...16 வயதில் பளுதூக்குதலில் தங்கம்... யூத் ஒலிம்பிக் சாம்பியன் ஜெரமி!
6 வயதில் பாக்ஸிங் கிளவுஸ்...16 வயதில் பளுதூக்குதலில் தங்கம்... யூத் ஒலிம்பிக் சாம்பியன் ஜெரமி!

ஒருகாலத்தில் இந்தியாவைப் பொறுத்தவரை பளுதூக்குதல் என்றாலே கர்ணம் மல்லேஸ்வரி மட்டும்தான். சமீபகாலமாகத்தான் மீராபாய் சானு, சதீஷ் சிவலிங்கம் போன்றவர்களின் பெயர்களும் நம் மனதில் இடம்பிடித்திருக்கின்றன. அந்தப் பட்டியலில் இப்போது இணைந்திருக்கிறார், `யூத் ஒலிம்பிக்ஸ்' தொடரில் தங்கம் வென்ற இளம் சாம்பியன் ஜெரமி லால்ரினுங்கா. 

சர்வதேசப் பளுதூக்குதல் போட்டியில் தனது 14 வயதிலேயே வெள்ளிப்பதக்கம் வென்ற ஜெரமி, மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரின் தந்தை தேசிய அளவில் பாக்ஸர். அதனால் இவருக்கும் 2008-ம் ஆண்டு, அதாவது அவரின் 6-வது வயதில் பாக்ஸிங் கோச்சிங் தொடங்கியது. 6 வயது தொடங்கி 2 ஆண்டுகள் கடும் பயிற்சிபெற்ற அவருக்கு, புனேவில் இருக்கும் ஆர்மி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் (AIS) அகாடமியில் இடம் கிடைத்தது. அவ்வளவு எளிதில் இடம்பிடிக்க முடியாத இடத்தில் இடம் கிடைத்த மகிழ்ச்சியில், தன் மகன் நிச்சயம் தன்னைவிட சிறந்த பாக்ஸர் ஆகிவிடுவான் என்ற நம்பிக்கையில் விட்டுச் செல்கிறார் அவரின் தந்தை.

அகாடமியில் சில நாள் அவருக்கு பாக்ஸிங்க்கான பயிற்சி வழங்கப்படுகிறது. அப்போது பல சீனியர் வீரர்களைவிட அதிக வெயிட்களைத் தூக்கினார் ஜெரமி. 9 வயதில் 15 கிலோவுக்கு மேல் எந்தப் பயிற்சியுமின்றி அசாதாரணமாகத் தூக்கினார். அப்போதுதான் அவரின் பயிற்சியாளருக்கு பளுதூக்குதலில் பல சாதனைகளை இந்திய தேசத்துக்காக இவன் புரியவிருக்கிறான் என்பது விளங்கியது.

உடனடியாக பாக்ஸிங்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஒன்றுமே தெரியாத பளுதூக்குதலுக்கு இவர் பழக்கப்படுத்தப்படுகிறார். ஆனால், பாக்ஸிங்கில் எதிராளியின் மூக்கை உடைப்பதில் இருக்கும் சுவாரஸ்யம் இவருக்கு வெற்றுக்கம்பிகளைத் தூக்குவதில் இல்லை. அதனால் இந்த விளையாட்டிலிருந்து விடுபடவே பார்க்கிறார் அந்தக் குறும்புப் பையன். அவர் விட்டாலும் அந்த விளையாட்டு அவரை விடுவதாய் இல்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு 50 கிலோ உடல் எடையில் இருந்துகொண்டு 100 கிலோ பளுவைத் தூக்கி அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கினார்.

2016-ம் ஆண்டில் தனது 14-ம் வயதில் முதல் போட்டியில் பங்கேற்கிறார். தேசிய இளைஞர் பளுதூக்குதல் போட்டி.  ஸ்னேட்ச்சில் 90 கிலோ, க்ளீன் அண்ட் ஜெர்க்கில் 108 கிலோ எனக் கிட்டத்தட்ட 198 கிலோவைத் தூக்கி தேசிய சாதனையோடு தங்கம் வென்றார். அப்போது அவர் உடல் எடை 50 கிலோ. இந்தியன் கேம்ப்பின் பயிற்சியாளர் விஜய்யின் அறிவுரையின் பேரில் 6 கிலோ உடல் எடையை அதிகரித்து 56 கிலோ பிரிவில் போட்டியிடத் தொடங்கினார். அதற்குப் பிறகு, தான் பங்கேற்ற அத்தனை போட்டிகளிலும் முதல் இரண்டு இடங்களுக்குள் தவறாமல் இடம்பிடித்தார்.

க்ளீன் அண்ட் ஜெர்க்கில் இவரது பெஸ்ட் 136 கிலோ. ஸ்னேட்ச்சில் 110 கிலோ, பெஞ்ச் பிரஸ்சில் 75 கிலோ, ஓவர் ஹெட் பிரஸ்சில் 63 கிலோ, டெட் லிஃப்ட்டில் 150 கிலோ எனத் தன் வயதுக்குமீறிய சாதனைகளைக் கொண்டுள்ளார் ஜெரமி. கடந்த ஆண்டு நடந்த உலக ஜூனியர் பளுதூக்குதலில் 240 கிலோ (SNATCH 110 + CLEAN AND JERK 130) தூக்கி வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

6 வயதில் பாக்ஸிங்குக்காகப் பயிற்சிபெற வந்தவர், 16 வயதில் பளுதூக்குதலில் பல சாதனைகளைப் புரிகிறார். பத்தாண்டுகளில் அனைவரும் பிரமிக்கும் வளர்ச்சி. அந்த வளர்ச்சியின் உச்சமாக `இந்தியர்கள், காமன்வெல்த், ஆசியப் போட்டிகளில்தான் தங்கம் வெல்வார்கள்' என்ற க்ளிஷேவைத் தகர்த்து இளையோர் ஒலிம்பிக்ஸில் ஸ்னாட்ச்சில் 124 கிலோவும், க்ளீன் அண்ட் ஜெர்க்கில் 150 கிலோவும் என மொத்தம் 274 கி எடையைத் தூக்கி மீண்டும் ஒரு தேசிய சாதனையோடு தங்கம் வென்று அசத்தினார் அவர்.

இது, இந்த ஆண்டு இவர் பெற்ற 3வது பதக்கம். இதற்கு முன்பு யூத் ஆசியப் போட்டியில் வெள்ளியும், ஜூனியர் ஆசியப் போட்டியில் வெண்கலமும் வென்றுள்ளார். வயதுக்கும் திறமைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை தன் வெற்றியின் மூலம் நிரூபித்திருக்கிறார் ஜெரமி.