Published:Updated:

பதக்கங்களுடன் சியர்ஸ் சொல்லும் 80 வயது விளையாட்டு வீராங்கனைகள்!

பதக்கங்களுடன் சியர்ஸ் சொல்லும் 80 வயது விளையாட்டு வீராங்கனைகள்!
பதக்கங்களுடன் சியர்ஸ் சொல்லும் 80 வயது விளையாட்டு வீராங்கனைகள்!

`சாதிப்பதற்கு வயது ஒரு தடையே இல்லை'

உற்சாகப்படுத்துவதற்கு வழக்கமாக எல்லோரும் சொல்கிற வாசகம்தான். ஆனால், இந்த வாசகத்துக்கு உயிர் தருபவர்களை நேரில் பார்க்கும்போது, வார்த்தைகளில் சொல்லமுடியாத உத்வேகத்தை நாம் அடைவோம் இல்லையா. அப்படியான மனிதர்கள் ரோல் மாடலாகவும் நமக்கு மாறிவிடுவார்கள் அல்லவா. ஆம் என்று நீங்கள் சொன்னால், லீலாவதியும் வசந்தா சாமுவேலும் உங்களுக்கும் ரோல் மாடல்கள்தாம். இவர்களுக்கு வயது 80 +. ஆனால், சாதிக்கும் எண்ணமும் போட்டியில் கலந்துகொள்ளும் ஆர்வமும் இவர்களின் வயதை 20 -ஆக்கி விடுகிறது. முதலில், இவர்கள் கலந்துகொண்ட போட்டியைப் பற்றிப் பார்க்கலாம். 

 கோவை மாவட்டம், மாஸ்டர்ஸ் தடகளச் சங்கம் நடத்தும் 36-வது தடகளப் போட்டி, சமீபத்தில் கோவை நேரு மைதானத்தில் நடைபெற்றது. விளையாட்டுச் சங்கத்தின் தலைவர் பாலசுந்தரம், செயலாளர் ராதாமணி ஒருங்கிணைந்து நடத்திய இப்போட்டியில் 35 முதல் 90 வயதுக்கு மேற்பட்டோர் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தையொட்டி 400-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். விளையாட்டு நிகழ்வுகள் வயதுக்கு ஏற்ப வகைப்படுத்தி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ச்சியாக நடைபெற்றது.
 
தடகளச் சங்கத்தின் தொழிற்நுட்ப தலைவர் சீனிவாசன், ``இப்போட்டியில் வெற்றிபெறுவோர் தஞ்சாவூரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கும், அதைத் தொடர்ந்து குண்டூரில் நடக்கவிருக்கும் தேசிய அளவிலான போட்டிக்கும் அனுப்பப்படுவர் .வருடாவருடம் நிறைய போட்டியாளர்கள் உற்சாகத்துடன் கலந்துகொள்கின்றனர்" என்றார். 

கோவை விளையாட்டுச் சங்கத்தின் பெண்கள் பிரிவு தலைவர் சிவகாமி, ``பன்னிரண்டு வயது முதல் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்கிறேன். மாவட்ட, மாநில, தேசிய,உலகளாவிய போட்டிகளில் கலந்துகொண்டதுண்டு. ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்காகக் கலந்துகொண்டு தட்டெறிதல், ஈட்டியெறிதல் போட்டிகளில் பதக்கம் பெற்றுளேன்" எனப் பெருமைப்பட பகிர்ந்தவர், பெண்கள் விளையாட்டில் கலந்துகொள்ளும்போது வெளிநாடுகளில் கிடைக்கும் உதவிகளைப் பற்றிப் பேச்சைத் தொடர்ந்தார்.

``சீனாவுக்குச் சென்று முதன்முதலில் ஆசிய தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பொழுது நமது தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது எங்களுக்கான பெருமை. மற்ற நாட்டவர்கள் நமது போட்டியாளர்களுக்கு தரும் மதிப்புகூட நமது நாட்டில் இருப்பதில்லை. உலக அளவிலான போட்டிகளுக்கு நமது வீரர்கள் செல்லும் போது அவர்களுக்கான போக்குவரத்து செலவு, உணவுக்கான செலவு இன்னபிற செலவுகளுக்கு அரசு மிகக் குறைந்த தொகையே வழங்குகிறது. எனவே தனியார் ஸ்பான்ஸர்களை உதவிக்கு நாடுகிறோம். பல நாடுகளில் பெண் போட்டியாளர்களுக்குப் பிற வேலைகளைக் குறைத்தும், பயிற்சி வகுப்புகள், விளையாட்டு மைதானம், தேவையான வசதிகளை அரசே செய்து தருகிறது. நம் நாட்டில் அவ்வாறான வசதிகள் இல்லாத நிலையிலும் குடும்பம், குழந்தைகள் என அதில் அதிக கவனம் செலுத்தும் பட்சத்திலும் நம் பெண்கள் அவர்களுடன் சவாலாகப் போட்டியிட்டு வெல்கின்றனர். இப்படி இருக்கும் போது அரசு விளையாட்டு துறையின் மீது அலட்சியம் காட்டுவது வேதனைக்குரியது" என ஆதங்கப்பட்டார்.

உற்சாகப் பாட்டிகள் பற்றிய விஷயத்து வருவோம். 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடி, மூச்சு வாங்கி நிற்கும் 82 வயது லீலாவதியிடம், பேட்டி எடுப்பதற்காகச் சிறிதுநேரம் கழித்து வருகிறேன் என்றபோது, ``எனக்கு ஓய்வு தேவையில்லை, இப்போதே பேசலாம்" எனச் சிரிப்புப்பொங்கத் தயாரானார். ``ஐ எம் லீலாவதி. சென்னையிலிருந்து வருகிறேன். கோயமுத்தூர் சொந்த ஊர். என் குடும்பத்தில் என்னை விட எல்லாரும் நிறைய படித்தவர்கள். எனக்குப் படிக்கப் பிடிக்காது. விளையாட்டில்தான் ஆர்வம். எனவே கல்லூரி படிக்கும்போது தடகளப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினேன். நிறைய பரிசுகள் வாங்கினேன். பிறகு, 1981 லிருந்து மூத்தோர் தடகளப் போட்டியில் கலந்துகொள்ள ஆரம்பித்த நான் இன்று வரை அதே மன வேகத்தோடு ஓடிக்கொண்டிகிறேன். எம்.ஜி.ஆரிடம் வாங்கிய பரிசுதான் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று" என்றவரிடம் போட்டோ எடுத்துக்கொள்ளலாமா எனக் கேட்டவுடன் ``ஜஸ்ட் வெய்ட், போஸ் கொடுக்கிறேன்" என்று சிரித்தவாறே போஸ் கொடுத்தார்.

லீலாவதியிடம் கைக்குலுக்கி மகிழ்வைப் பகிர்ந்துகொண்ட 81 வயது வசந்தா சாமுவேலிடம் பேசுகையில், ``நானும் லீலாவும் 80-ம் ஆண்டுகளிலிருந்து தோழிகள். குடும்ப நண்பர்கள் என்றாகிவிட்டது. ஒரே போட்டியில் இருவரும் கலந்துகொள்ளும்போது நிகரான போட்டியாளராக லீலா இருப்பார். இருவரும் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஒரே போட்டியில் கலந்துகொள்ளாமல் நான் உயரம் தாண்டுதல், கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளிலும், அவர் ஓட்டப் பந்தயத்திலும் கலந்துகொள்வோம். இருவரும் பதக்கங்களை வாங்கியது சந்தோசமே பெரிதுதான். எங்களுக்காக நாங்கள் வெற்றிகளைப் பகிர்ந்துகொள்வோம், வீ ஆர் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்!" எனப் பூரிப்புடன் லீலாவதியை அரவணைத்துக் கொண்டார்.
     
யார் வெல்வது என்னும் எண்ணமில்லாமல் வயதிலும் வெற்றிகளிலும் மூத்தவர்கள், பதக்கங்களுடன் கொண்டாடுவது ``நட்புக்கு சியர்ஸ்" சொல்வது போலிருந்தது !