Published:Updated:

"இந்த அர்ஜூனா விருது மறைந்த என் அப்பாவுக்குச் சமர்ப்பணம்!” சத்தியன் உருக்கம்

”நவம்பர் 2015..சென்னை வெள்ளம் ஆரம்பிக்கிற சமயம்..அப்பாவுக்கு ஏற்கனவே இருந்த நுரையீரல் புற்றுநோய் ரொம்ப மோசமானது. கிமோதெரமி போன்ற சிகிச்சையெல்லாம் முன்னாடி எடுத்துக்கிட்டாரு. ஆனாலும், அவர் உடம்பு தாங்கலை.”

"இந்த அர்ஜூனா விருது மறைந்த என் அப்பாவுக்குச் சமர்ப்பணம்!” சத்தியன் உருக்கம்
"இந்த அர்ஜூனா விருது மறைந்த என் அப்பாவுக்குச் சமர்ப்பணம்!” சத்தியன் உருக்கம்

”விருது கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு. சந்தோஷம்னு சொல்றதைவிட மனநிறைவா இருக்கு. இந்த விருது மிகப்பெரிய ஊக்கத்தைத் தந்திருக்கு" தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் ஞானசேகரனின் குரலில் உற்சாகம் ததும்புகிறது.   மத்திய அரசு அறிவித்த 'அர்ஜூனா' விருது வென்ற வீரர்களில் இவரும் ஒருவர்! ஒவ்வொரு வீரனின் வாழ்வில் நிறைய சவால்கள், போராட்டங்கள், வலிகள்.. எனப் பல சோதனைகளுக்குப் பிறகே, சாதனைகள் படைப்பார்கள். அப்படிதான் சத்தியனின் வெற்றியும்! சத்தியன் மகிழ்ச்சியான குரலில் தொடர்கிறார். 

”ஸ்கூல் படிக்கிறதுலேருந்து, டேபிள் டென்னிஸ் மீது ஆர்வம் அதிகம். அதற்கு முக்கியக் காரணம் எங்க அப்பாதான். அவர் ஸ்டேட் லெவல் டேபிள் டென்னிஸ் பிளேயர். அதனால், எப்பவுமே எனக்கு சப்போர்ட்டா இருந்தார். அதுவும் 2011 வருஷத்திலிருந்து 2012 வரை எனக்கு நெருக்கடியான காலகட்டம்னு சொல்லலாம். இன்ஜீனியரிங் முடிக்க வேண்டிலருந்துச்சு. சிலபஸ் வேற ரொம்ப கஷ்டம். பிராக்டிஸ்க்குக்கூடச் சரியா போக முடியலை. படிப்பையும் விளையாட்டையும் எப்படி பேலன்ஸ் பண்றதுனு கொஞ்சம் திணறினேன். ஆனா, 2012 ஆம் வருஷம் முடியும்போது, ஓ.என்.ஜி.சி நிறுவனத்துல எனக்கு வேலை கிடைச்சது. அப்புறம், முன்னாள் வீரர் ராமன் சார்கிட்ட பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன். இந்த இரண்டுமே என் வாழ்க்கையில நல்ல மாற்றங்கள்! ராமன் சார்கிட்ட பயிற்சி எடுத்துக்கும்போதுதான், ஜூனியர் லெவலுக்கும் சீனியர் லெவலுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்குனுப் புரிய ஆரம்பிச்சுது. இதற்கிடையே, ராகுல் டிராவிட் சாரின் ‘கோ ஸ்போர்ட்ஸ்’ போண்டேஷனிடன் சர்போர்ட்டும் கிடைச்சது, அப்புறம், தமிழ்நாட்டு  விளையாட்டுத்துறை, ‘எலைட் ஸ்கிம்’னு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தார்கள். இந்தத் திட்டத்தில், நாங்க சர்வதேசப் போட்டிகள்ல கலந்துக்க வசதிகள், உதவிகள் தமிழக அரசு செய்யும்னு அறிவிச்சாங்க. இப்படித் தொடர்ந்து, என்னுடைய விளையாட்டுல முழுகவனம் செலுத்தினேன். தொடர்ந்து தேசிய அளவிலான போட்டிகள்ளேயும் கலந்துக்கிட்டேன்.

ஆனா, 2014-ம் வருஷம், என் இன்ஜீனியரிங் இறுதி ஆண்டு. அதனால, அந்த வருஷம் நடந்த காமன்வெல்த் போட்டில கலந்துக்கமுடியல. சரி, இன்ஜீனியரிங் முதல்ல முடிச்சிடலாம்னு எல்லா பேப்பர்ஸையும் க்ளியர் செஞ்சேன். அதுக்கு அப்புறம், முழுக்க முழுக்க டேபிள் டென்னிஸ்ல கவனம் செலுத்தினேன். ஒரு நாளைக்கு இரண்டு முறை பயிற்சி செய்தேன். அதுக்கு முன்னாடியெல்லாம் ஒருதடவைதான் செய்வேன். ரஷ்யன் ஓபன்ல கலத்துக்கிட்டேன். இப்படிச் சர்வதேச அளவுல, 200வது ரான்கிங்ல வந்தேன்.

அப்பா ஞானசேகரனுடன்..

நவம்பர் 2015.-ல் சென்னை வெள்ளம் ஆரம்பிக்கிற சமயம். அப்பாவுக்கு ஏற்மநனவே இருந்த நுரையீரல் புற்றுநோய் ரொம்ப மோசமாயிடுச்சு. கிமோதெரபி சிகிச்சையெல்லாம் முன்னாடி எடுத்துக்கிட்டாரு. ஆனாலும், அவர் உடம்பு தாங்கலை. ஆனா, அவர் மரணப் படுக்கையில இருந்தபோதும், என் பிராக்டிஸ் எப்படிப் போகுது, என்னென்ன போட்டிகள் வருதுனு கேட்டிட்டு இருந்தாரு. அவர் இறக்கும்போது, நான் குவஹாதிக்கு ஒரு போட்டிக்காகப் போயிருந்தேன். அப்பா இறந்த செய்திக் கேட்டதும், அந்தப் போட்டியில கலந்துக்காம, உடனே கிளம்பி சென்னை வந்துட்டேன். ரொம்ப உடைஞ்சிப்போயிட்டேன். ஆனா, அந்தச் சமயத்துல அம்மா தைரியமா இருந்து, ‘இனி அப்பாவின் ஆசையே நீ விளையாடி சாதிப்பதுதான்'னு ஊக்கப்படுத்தினாங்க. ஆனா, வீட்ல இருக்கிற எந்த அழுத்தங்களையும் எங்க அம்மாவோ என் இரண்டு சகோதரிகளோ எனக்குத் தரவேயில்லை. நான் விளையாட்டுல மட்டும் கவனம் செலுத்தினாப் போதும் என்ற அளவிலதான் என்னைப் பார்த்துக்கிட்டாங்க.

அம்மா மலர்கொடியுடன் சத்தியன்

சரி, இதுக்கு மேல இழக்கறதுக்கு என்கிட்ட ஒண்ணுமில்லை என்ற கட்டத்துல, என் மனவலிஅய எல்லாத்தையும் என் விளையாட்டு மேல காட்டினேன். சர்வதேசப் போட்டிகள்ல தொடர்ந்து கலந்துக்கிட்டேன். ராமன் சார் என்கூடவே இருந்து பயிற்சியோட ஊக்கமும் கொடுத்தாங்க. ஒரு இலக்கை நான் நெருங்கும்போதே, எனக்கு அடுத்த இலக்கைச் செட் பண்ணி தயாரா வைச்சிருப்பாரு. இப்படி விளையாடிதான், இன்னிக்கு நான் சர்வதேச ரான்கிங்ல 40க்குள் வந்திருக்கிறேன். அர்ஜூனா விருது கிடைச்சிருக்கு, இந்த விருது என் குடும்பத்துக்குத்தான் சமர்ப்பணம்! ஆசியப் போட்டிகள் முடிச்சுட்டு, பிரதமரைச் சந்திச்சப்ப, “இனிதான் உங்களுக்குப் பெரிய பெரிய சவால்கள் காத்திட்டு இருக்கு. தன்னபிக்கையோட இன்னும் பெரிய வெற்றிகள் இந்தியாவுக்கு வாங்கி கொடுக்கனும்'னு சொன்னார். இப்போ என்னுடைய அடுத்து டார்கெட் 2020 ஒலிம்பிக்ஸ்தான். நிச்சயம் என் குடும்பத்துக்கும் அப்பாவுக்கும் நம்ம நாட்டுக்கும் பெருமை சேர்க்க வகையில விளையாடுவேன்!" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சத்தியன்.