Published:Updated:

கடன் பெற்று சென்று சர்வதேசப் போட்டியில் 3 தங்கம் வென்ற ஆஷிகா! கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகள்

கடன் பெற்று சென்று சர்வதேசப் போட்டியில் 3 தங்கம் வென்ற ஆஷிகா! கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகள்
கடன் பெற்று சென்று சர்வதேசப் போட்டியில் 3 தங்கம் வென்ற ஆஷிகா! கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகள்

சர்வதேச வலு தூக்கும் போட்டியில், இந்தியாவுக்கு முதன்முறையாக மூன்று தங்கப்பதக்கங்களைப் பெற்றுத்தந்த புதுச்சேரி மாணவி ஆஷிகாவை, மத்திய மற்றும் மாநில அரசுகள் கௌரவிக்கத் தவறியிருக்கின்றன.

புதுச்சேரி, ஐயங்குட்டிப்பாளையத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் ஆறுமுகம். இவரின் 14 வயது மகள், ஆஷிகா, சர்வதேச வலு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கப்பதக்கங்களைத் தட்டிவந்திருக்கிறார். சர்வதேச வலு தூக்கும் சம்மேளனம் சார்பில் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 40 நாடுகள் பங்கேற்றன. அதில், 43 கிலோ எடைகொண்ட சப்-ஜுனியர் பிரிவில், வெற்றிபெற்றதுடன், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் கைப்பற்றி, உலக நாடுகளை புருவம் உயர்த்தவைத்திருக்கிறார். கடந்த 43 ஆண்டுகளில், சர்வதேச அளவிலான வலு தூக்கும் போட்டியில் இந்தியா பெற்றிருக்கும் முதல் தங்கம் இதுவே. கடந்த வாரம் இந்தியா திரும்பியவரை புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன்.

பெருமையும் மகிழ்ச்சியும் சூடியிருந்த ஆஷிகா. ``அப்பா கராத்தே மாஸ்டர் என்பதால், அண்ணனுக்கும் எனக்கும் சின்ன வயசிலிருந்தே கராத்தே மேலே ஈர்ப்பு. அண்ணனும் நானும் மாநில, தேசிய அளவில் நிறைய போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கோம். மூணு வருஷத்துக்கு முன்னாடி, வெயிட் லிஃப்ட் (பளு தூக்குதல்) மேல ஆர்வம் வந்துச்சு. அப்பாகிட்ட சொன்னதும், கோச் பாக்கியராஜ் சார்கிட்ட அனுப்பினார். கொஞ்ச நாளில் பவர் லிஃட் (வலு தூக்குதல்) பயிற்சிக்காக பன்னீர்செல்வம் மாஸ்டரிடம் கத்துக்கிட்டேன். இவங்களின் பயிற்சிதான் என்னை இந்த அளவுக்குக் கொண்டுவந்திருக்கு. இப்போ, ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். கல்லூரிப் படிப்பு முடிஞ்சதும், ஜிம் ஆரம்பிச்சு பலருக்கும் பயிற்சி கொடுக்கணும். அவங்க அத்தனை பேரும் நம்ம நாட்டுக்காக தங்கப்பதக்கங்களை வாங்கணும். அதுதான் என் ஆசை” என்கிறார், கண்கள் மிளிர.

``சாதாரண குடும்பம்தான் சார் எங்களோடது. புதுச்சேரி உழவர்கரை நகராட்சியில் டிரைவரா இருக்கேன். எனக்கு கராத்தே தெரியும். 35 வருஷமா ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறேன். அதுக்காக யாருகிட்டேயும் காசு வாங்கறதில்லே. போலீஸ் பயிற்சிக்குப் போகிறவங்களுக்கும் என்னால முடிஞ்ச பயிற்சிகளைக் கொடுப்பேன். என்னிடம் பயிற்சி எடுத்த பலர் மாநில, தேசிய அளவில் நிறைய மெடல் வாங்கியிருக்காங்க. நிறைய பேர் போலீஸ் வேலையில் இருக்காங்க. எனக்கு ரெண்டு பசங்க. 

நாங்க வசதியான குடும்பமா இல்லையென்றாலும் எங்கள் குழந்தைகளின் ஆர்வத்துக்கு முடிஞ்ச அளவுக்கு உறுதுணையா இருக்கோம். இப்போ நடந்த போட்டிக்காக ஆஷிகாவை ஆப்பிரிக்கா அனுப்பவே, வட்டிக்குக் கடன் வாங்கினேன். ஆனாலும், என் புள்ள நாட்டுக்காக மூணு தங்கப் பதக்கத்தோட வந்திருக்கிறதைப் பார்த்ததும், அந்தக் கஷ்டம் பறந்துபோச்சு. இதுவரை அரசாங்கம் எங்களுக்கு எந்த உதவியும் செய்யலை. திறமையான புள்ளைகளை ஊக்குவிச்சாத்தானே மற்ற பிள்ளைகளும் ஆர்வமா வருவாங்க” என ஆதங்கத்தோடு கூறுகிறார் ஆஷிகாவின் தந்தை ஆறுமுகம்.

ஆஷிகாவின் பயிற்சியாளர் பிரவீன்குமார், இந்திய வலு தூக்கும் சம்மேளனப் பயிற்சியாளரும்கூட. ``1975-ம் வருஷம், இந்திய வலு தூக்கும் சம்மேளனம் தொடங்கப்பட்டது. கடந்த 43 ஆண்டுகளில் சர்வதேச அளவில் நடைபெற்ற வலு தூக்கும் போட்டிகளில், இந்தியா தங்கம்  வென்றதில்லை. அந்த நிலையை மாற்றியிருக்கிறார் ஆஷிகா. இது மற்ற நாடுகளுக்குக் கிடைத்திருந்தால், அவர்கள் கொண்டாடி இருப்பார்கள். ஆனால், ஆஷிகாவுக்குக் கிடைத்திருப்பது ஏமாற்றம் மட்டுமே” என்றார் வருத்தத்துடன்.

மாபெரும் சபையில் இந்தியாவின் வெற்றிமுகமாக, கம்பீரமாக நின்ற அந்தச் சிறுமிக்கு நம் அரசு என்ன செய்யப்போகிறது?