Published:Updated:

’ஹிட்லரை விட ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட்தான் எங்களை அவமதித்துவிட்டார்!’ - ஜெஸ்ஸி ஓவன்ஸ் பிறந்த தினப் பகிர்வு

’ஹிட்லரை விட ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட்தான் எங்களை அவமதித்துவிட்டார்!’ - ஜெஸ்ஸி ஓவன்ஸ் பிறந்த தினப் பகிர்வு
’ஹிட்லரை விட ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட்தான் எங்களை அவமதித்துவிட்டார்!’ - ஜெஸ்ஸி ஓவன்ஸ் பிறந்த தினப் பகிர்வு

``கறுப்பு உழைப்போட வண்ணம்" - காலா படத்தில் அனைவரையும் பேச வைத்த ஒரு வசனம். அவமானமாகப் பார்க்கப்படும் கறுப்பை அடையாளமாக்கியது இந்த வசனம். இன்று அந்த வசனத்தை அப்படிச் சிலாகித்துப் பாராட்டுகிறோம். ஆனால், 80 ஆண்டுகளுக்கு முன்னரே  நிறவெறியையும், இனவெறியையும் எதிர்த்து சர்வ வல்லமை படைத்த ஒரு சர்வாதிகாரியின் அடக்குமுறைக்குத் தன் வெற்றியின் மூலம் பதில் சொன்ன ஜெஸ்ஸி ஓவென்ஸ் கொண்டாடித் தீர்க்க வேண்டிய ஒரு வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.  

ஒரு சாதாரணக் கூலி விவசாயின் பத்தாவது மகன், பல ஆண்டுகளாக வெள்ளையர்களுக்குக் கொத்தடிமையாக விளங்கியவர்களின் பேரன் இவை தவிர்த்து, அடையாளம் எதுவும் ஜெஸ்ஸி ஓவென்ஸ்க்கு இல்லை. அமெரிக்காவின் தென் கோடியில் உள்ள ஏதோ ஒரு கிராமத்தில்தான் ஓவென்ஸ் பிறந்தார். பின்னாளில் மிகப் பெரிய தடகள வீரர் ஆவார் என்ற எந்தச் சாத்தியக்கூறுகளும் அவரிடம் இல்லை.  ஏனெனில், ஒல்லியான கால்களும், மெலிந்த தேகமும், தட்டையான மார்புகளோடும்தாம் அவர் உடல்வாகு இருந்தது. அந்தத் தீக்குச்சி போன்ற உடலமைப்பினுள்ளேதான் ஒரு பிரவாகத்துக்கான ஜுவாலை அடங்கியிருந்தது, யாருக்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை.

காலையில் வேலைக்குச் சென்றால் ஓவன்ஸின் பெற்றோர் வீடு திரும்ப இருட்டிவிடும். இந்த உடலைக் கொண்டு தன்னால் பெற்றோர்களுக்கும் சகோதரர்களுக்கும் வயல்வெளியில் உதவியாக இருக்க முடியாது என்பதை அறிந்த ஓவன்ஸ், தன் பால்ய காலத்தின் ஆரம்பத்தை தனிமையில் கழித்தார். ஐந்தாவது வயதில் ஓவன்ஸின் மார்பில் ஒரு கட்டி வளர்ந்தது. நுரையீரலை ஆக்கிரமித்திருக்கும் அந்தக் கட்டியை அகற்றாவிட்டால் இரண்டு வருடங்களில் அவர் ஆயுள் முடிந்துவிடும் என மருத்துவர்கள் சொல்ல, செய்வதறியாது நின்றனர் அவரது பெற்றோர். அரைவயிறு கஞ்சிக்கு அடிமைகளாக அல்லற்படும் பெற்றோரிடம் ஆபரேஷன் எனப் பழக்கப்படாத வார்த்தைகளைக் கூறினால்.... ஓவன்ஸின் தாய் முடிவெடுத்துவிட்டார் சமையலுக்குப் பயன்படுத்தும் கத்தியைக் கொண்டு ஓவன்ஸின் கட்டியைக் கிழித்தெறிந்தார். அதீத இரத்தப்போக்கு ஏற்பட்டது. 

ஒரு வழியாக ஓவன்ஸ் உயிர்பிழைத்தார். அவரது உடல் இயல்பு நிலைக்குத் திரும்பியபோது நிமோனியாவால் பாதிக்கப்பட்டார். மீண்டும் போராடி மீண்டார் ஓவன்ஸ். இப்படி அடுத்தடுத்து உடல்நிலை கோளாற்றாலும் வேலையில் ஏற்பட்ட மாற்றுதலாலும் அமெரிக்காவின் வடக்கு மாகாணத்துக்குக் குடிபெயர்ந்தனர் ஓவன்ஸ் குடும்பத்தினர். அங்கே இதைவிட நிறவெறி தலைவிரித்தாடியது. ஓவன்ஸின் பெற்றோர் கஷ்டப்பட்டு ஒரு வழியாக அவரைப் பள்ளிக்கு அனுப்பினர்.

பள்ளியில் பிற குழந்தைகள் நிறத்தைக் காரணமாக முன்னிறுத்தி அவரை ஒதுக்கியே வைத்திருந்தனர். தன்னைப் போன்ற குழந்தைகள் மனதிலும் ஒரு பேதத்தை வளர்த்தற்காக, இந்தச் சமூகத்தின் மீது மிகுந்த கோபம் கொண்டிருந்தார் ஓவன்ஸ். ஓரே ஒரு கண்டிப்பான ஆசிரியர் மட்டுமே ஓவன்ஸை அரவணைத்தார். ஜெஸ்ஸி ஓவன்ஸ் என்ற பெயர் வைத்தவரும் அவரே. ஜேம்ஸ் கேம்லாடு ஓவன்ஸை சுருக்கி J.C Owens என்றே அழைப்பார் அந்த ஆசிரியர். JC என்ற பட்டப் பெயரே பின்னாளில் JESSE OWENS என்றாகி கடைசி வரை நிலைத்து விட்டது. தினமும் காலையில் பள்ளி சென்று மாலையில் வீடு திரும்ப ஓவன்ஸுக்குப் பிடித்தமில்லை.

இந்த நிலையிலும் தன்னைப் பள்ளிக்கு அனுப்பிய பெற்றோருக்கு உதவும் விதமாகச் செருப்புத் தைக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்தார். அவர் வாழ்வின் ஒவ்வோர் அத்தியாயமும் கஷ்டங்களோடு இருக்க, அவரின் பள்ளி ஆசிரியர் ஓவன்ஸை ஆடுகளத்துக்கு அழைத்துச் சென்றார். முதலில் கூச்சப்பட்டு வெளியிலேயே நின்ற ஓவன்ஸ் பின்னர் விளையாடத் தொடங்கினார். மைதானத்திலும் இன பேதம் ஓவன்ஸைச் சூழத் தொடங்கியது. அப்போது வெறி வந்தவர் போல ஓடத் தொடங்கினார் ஓவன்ஸ். தினமும் அனைவரும் சராசரி ஐந்து சுற்றுகள் ஓடினால் அவர் பத்துச் சுற்று ஓடுவார். தன்னை இகழ்ந்து பேசியவர்களும் தானும் சமம் என்பதை நிரூபிப்பதற்காக அவர் ஓடவில்லை. இகழ்ந்தவர்களும் தன்னைப் புகழ வேண்டும் என்பதை மனதில் கொண்டு தன் ஒவ்வோர் அடியையும் எடுத்து வைத்தார்.

இந்தச் சமூகத்தினால் ஒடுக்கப்பட்டவனுக்கு அதே சமூகத்தின் அங்கீகாரம் கிடைக்க ஓடினார். பல தூரம் ஓடினார். அந்த ஓட்டமும் ஆசையும் ஒரு புள்ளியில் இணைய முதன்முறையாகத் தேசிய அளவிலான ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார். பங்கேற்ற முதல் பெரிய போட்டியிலே பெயர் சொல்லும் அளவுக்குப் பெரிய வெற்றியை எட்டினார். 100 யார்ட் (91மீ)  ஓட்டத்தில் 9.4 நொடிகளில் முதலிடம் மட்டுமல்லாமல், உலக சாதனையும் படைத்தார். நீளம் தாண்டுதலில் 7.56 மீட்டர் தாண்டி தங்கம் வெல்லும் போதுதான் தன்னாலும் வெற்றி என்ற சொல்லை உணர முடியுமென்பதை அறிந்தார். அதன் பின் ஓவன்ஸுக்கு ஓக்லோ பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. அங்குதான் தன் பயிற்சியாளராகவும் மானசிக குருவாகவும் இருந்த லேரி ஸ்னைடரைச் சந்தித்தார். 

 1935-ம் ஆண்டு ஓவன்ஸ் வாழ்வை தலைகீழாய் திருப்பியது. NCAA சாம்பியன்ஷிப்பில் நான்கு தங்கம் வென்றார். எலும்பில் காயமிருந்த போதிலும் போராடி வென்றார். இந்த வெற்றி அவருக்கு Buckeye bullet என்ற பட்டப்பெயரை பெற்றுத் தந்தது. பின்னர் 1936-ம் வருடம் அதே சாம்பியன்ஷிப். அங்கும் அதே நான்கு தங்கங்கள். தொடர்ச்சியாக அந்த சாம்பியன்ஷிப்பில் 8  தங்கங்கள் பெற்று இன்று வரை தகர்க்க முடியாத சாதனையைத் தன்வசமாக்கினார். தடகள வாழ்வில் கோலோச்சிய போதும் எங்கும் தீண்டாமை அவரைத் தீண்டிப் பார்த்தது.  உணவு விடுதிகளில் அவருக்கு மட்டுமல்ல எல்லாக் கறுப்பினத்தவர்க்கும் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் 1936-ம் ஆண்டு நடக்கவிருக்கும் பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஓவன்ஸ் உட்பட சில கறுப்பின வீரர்களுக்கு அழைப்பு வந்தது. இதுவரை உள்ளூர் உள்நாட்டுப் போட்டிகளையே பார்த்த ஓவன்ஸுக்கு முதன்முறையாக உலகளவில் தன் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், யாரும் செல்வதற்கு தயாராய் இல்லை. பின்னர் ஒலிம்பிக் கமிட்டி நிறபேதத்துக்கு இடம் அளிக்காது என உறுதியளித்த பின்னரே ஓவன்ஸ் உட்பட 14 கறுப்பின வீரர்கள் ஒலிம்பிக் சென்றனர். அமெரிக்க வீரர்களாக அவர்கள் சென்றாலும், அவர்களுக்கெனத் தனி வீடு, தனி இடம் என ஒலிம்பிக் கிராமத்திலேயே பாகுபாடு இருந்தது. போட்டி தொடங்கிய அன்று, உலகின் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மன் வீரர்கள் தவிர, யாருடனும் கைகுலுக்காமல் செல்ல மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார் ஓவன்ஸ்.

அந்த மனஉளைச்சல்தான் ஓவன்ஸை மின்னல் வேகத்தில் ஓட வைத்து, நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உலக சாதனையோடு தங்கம் பெற வைத்தது. ஜெர்மன் வீரர்கள்தாம் தங்கம் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துக்கு முதல் முட்டுக்கட்டைப் போட்டார். என்ன நடப்பதென்று ஹிட்லர் சுதாரிப்பதற்குள் 200 மீ, நீளம் தாண்டுதல், 400 மீ தொடர் ஓட்டம் என அடுத்தடுத்து மூன்று தங்கங்கள். அதுவும் உலக சாதனைகளோடு... மிரண்டு போனார் ஹிட்லர்.

ஓட்டத்தில் தங்கம் வெல்வது என்பது இயலாத காரியமில்லை. ஆனால், ஓட்டத்தோடு நீளம் தாண்டுதலிலும் உலக சாதனையோடு தங்கம் வென்றது இன்றளவும் யாராலும் சமன் செய்ய முடியாத சாதனை. யாரிடம் கைகுலுக்க வெட்கப்பட்டு ஹிட்லர் சென்றாரோ அந்த 14 கறுப்பின வீரர்கள் பத்துப் பதக்கங்கள் பெற்றனர். என்னதான் ஜெர்மனி பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்றாலும் ஜெர்மனிக்குக் கிடைக்குமென நினைத்த நான்கு பதக்கங்களையும் அள்ளிச் சென்ற ஓவன்ஸின் மீது தீரா வன்மம் இருந்தது ஹிட்லருக்கு.

அதனால், ``கறுப்பின மக்களின் உடல் இன்னும் முழுப் பரிணாம வளர்ச்சியடைவில்லை. எனவே, அவர்களை மற்ற வீரர்களோடு சமமாகப் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்" என அறிக்கை விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஹிட்லர் கோட்டையிலேயே தங்க வேட்டையாடி உலகம் முழுதும் பரவலாக அறியப்பட்ட ஓவன்ஸ் கறுப்பினத்திற்கே விடிவுகாலம் பிறந்துவிட்டதாக எண்ணி அமெரிக்கா திரும்பினார்.

ஆனால், அங்கு எல்லாமும் அப்படியேதான் இருந்தது. ஒலிம்பிக்கிற்கு  முன், ஒலிம்பிக்கிற்கு பின் என மாற்றி எழுதும் படியான நிகழ்வு ஏதும் நிகழவில்லை. பேருந்தின் முன் சீட்டில் அமர்ந்து கூட அவரால் பயணிக்க முடியவில்லை. பின்னர் ஓவன்ஸ் ஒரு பேட்டியில் ``தன்னை மிகவும் மனக்கஷ்டத்துக்கு ஆளாக்கியது ஹிட்லர் அல்ல, இவ்வளவு பெயர் எடுத்தும் மரியாதை நிமித்தமாகக் கூட எங்களைச் சந்திக்காத அமெரிக்க ஜனாதிபதி ப்ராங்ளின் ரூஸ்வெல்ட்தான் எங்களின் வருத்தத்துக்குக் காரணம்" எனப் பதிவிட்டார். ஒலிம்பிக்கில் சாதித்த பின்னும், தன் எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஓவன்ஸுக்கு இல்லை. நான்கு ஒலிம்பிக் தங்கங்கள் பெற்றும் ஒரு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்ததால் தடகளத்திலிருந்து ஓய்வு பெற்றார்.

பின்னர் குதிரைகளோடு ஓடியும், சில புதிய உள்ளூர் வீரர்களோடு ஓடியும் காசு சேர்த்தார் ஓவன்ஸ். அதன் பின்னர் பெட்ரோல் பங்க், dry cleaning எனச் சின்ன வேலைகளை, தன்னை நம்பி வந்த தன் காதல் மனைவி மற்றும் தன் மகளின் வாழ்வாதாரத்தின் பொருட்டு செய்து வந்தார். பின்னர், சில தனியார் நிறுவனங்களில் வேலை செய்து, ஒலிம்பிக் கமிட்டியிலும் இடம் பெற்றார். 1976-ம் ஆண்டு ஜனாதிபதி விருது, 1979-ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்தது. தன் பத்தாவது வயதில் வந்த நுரையீரல் தொற்று விட்டுபோன செல்களால் உருவாகிய புற்றுநோயால் 1980-ம் ஆண்டு மார்ச் 30-ல் இறந்து போனார்.

அவருக்குப் பின் பல கறுப்பின வீரர்கள் தடகளத்தில் கோலோச்சியிருக்கலாம். பல சாதனைகளைச் செய்திருக்கலாம். இன்று தடகள உலகையே தன் வசமாக்கிய உசைன் போல்ட் 2009-ம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் தான் பெற்ற பதக்கங்களையும், நிகழ்த்திய உலக சாதனைகளையும் ஓவன்ஸுக்குச் சமர்ப்பிப்பதாகச் சொன்னார். போல்ட் பெர்லினில் உலக சாதனை நிகழ்த்தியதும், ஓவன்ஸ் நிகழ்த்தியதும் அவர்களின் 22-ம் வயதில்தான் என்பது சுவாரஸ்யம். `இவரை விட வேறெந்த விளையாட்டு வீரரும் அடக்குமுறை, இனவெறி, சர்வாதிகாரம் இவற்றிற்கு எதிராகப் போராடியதில்லை’ என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கார்டர் கூறியுள்ளார்.

இன்று கறுப்பின வீரர்கள் தடகளத்தில் கோலோச்சுவதற்கான விதை ஜெஸ்ஸி ஓவன்ஸ் போட்டது. ``எல்லோருக்கும் ஆசை இருக்கும் அந்த ஆசை நிறைவேறத் தீர்மானமும் அதற்கான மனவுறுதியும் இருந்தால் போதும்" என்ற கூறி ஹிட்லரின் சர்வாதிகாரக் கோட்டையில் தங்க வேட்டையாடிய கறுப்பு வைரம் ஜெஸ்ஸி ஓவன்ஸ் பிறந்ததினம் இன்று.