Published:Updated:

ஆறு விரல்கள் கைப்பற்றிய தங்கம் - இந்தியாவின் முதல் ஹெப்டத்லான் சாம்பியன் ஸ்வப்னா!

எத்தனையோ காலணிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. அதில், ஒன்றுகூட ஏழை ஸ்வப்னாவுக்குப் பிரத்தியேக காலணி தயாரித்து வழங்க முன்வரவில்லை. இதனால், ஸ்வப்னாவே  உள்ளூரில் பிரத்யேகமாக ஸ்பைக்ஸ் செய்து பயன்படுத்துவார். 

ஆறு விரல்கள் கைப்பற்றிய தங்கம் - இந்தியாவின் முதல் ஹெப்டத்லான் சாம்பியன் ஸ்வப்னா!
ஆறு விரல்கள் கைப்பற்றிய தங்கம் - இந்தியாவின் முதல் ஹெப்டத்லான் சாம்பியன் ஸ்வப்னா!

ஸ்வப்னா... என்கிற ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளியின் மகள், இப்போது இந்தியாவின் தடகள அடையாளம் ஆகியிருக்கிறார். ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு ஹெப்டத்லான் பிரிவில் தங்கம் வென்று கொடுத்துள்ளார், குடிசையில் பிறந்த தங்கப்பெண். ஆசியப் போட்டியில் ஹெப்டத்லானில் இதற்கு முன் இந்தியர்கள் தங்கம் வென்றதில்லை. ஹெப்டத்லான் என்பது  100, 200, 800 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட 7 விளையாட்டுகள் அடங்கிய கடினமான பிரிவு. போட்டிக்கு முன்னதாக பல்வேறு உடல் உபாதைகளைத் தாண்டி, இத்தகைய வரலாற்றுச் சாதனையை எட்டியிருக்கிறார் ஸ்வப்னா. 

மேற்குவங்க மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள ராஜ்பொன்ஷி என்ற கிராமம்தான் இவரின் சொந்த ஊர். ஸ்வப்னாவின் அம்மாவுக்குக் காலில் ஆறு விரல்கள். ஆறு விரல்கள்கொண்ட தாய்க்குப் பிறந்ததால் என்னவோ... ஸ்வப்னாவுக்கு இரு கால்களிலும் ஆறு விரல்கள். காலிலோ அல்லது கையிலோ ஆறு விரல்கள் இருந்தால் கிராமத்தில் `அதிர்ஷ்டசாலி' என்பார்கள். கிராம மக்கள் பார்வையில் ஸ்வப்னா `லக்கி கேர்ள்'. ஆனால், ஸ்வப்னாவுக்கோ காலில் ஆறு விரல்கள் தாங்க முடியாத வலியைத்தான் (ஜகார்த்தாவில் தங்கம் வெல்லும் வரை) தந்துகொண்டிருந்தன. காலில் ஆறு விரல்கள் என்பதால், எந்தக் காலணியும் அவருக்குப் பொருந்தாது. ஸ்பைக்ஸ் போன்றவை மிகுந்த டைட்டாக காலுடன் ஒட்டியிருந்தால்தான் சிறப்பான ஓட்டத்தை வெளிப்படுத்த முடியும்.

அப்படியிருக்கையில் காலில் ஆறு விரல்கள் இருப்பதால், தன் அனைத்து விரல்களையும் சேர்த்து பேன்டேஜ் கட்டி ஒட்டிய பிறகே ஸ்வப்னாவால் காலணி அணிய முடியும். இதனால் ஓடும்போதும் சரி, தாண்டும்போதும் சரி, அவருக்குக் கால்களில் தாங்க முடியாத வலி ஏற்படும். இந்த வலியைத் தாங்கிக்கொண்டுதான் ஸ்வப்னா ஜகார்த்தா போட்டியில் பங்கேற்றார். எத்தனையோ காலணிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. அதில், ஒன்றுகூட ஏழை ஸ்வப்னாவுக்குப் பிரத்தியேக காலணி தயாரித்து வழங்க முன்வரவில்லை. இதனால், ஸ்வப்னாவே  உள்ளூரில் பிரத்யேகமாக ஸ்பைக்ஸ் செய்து பயன்படுத்துவார். 

ஸ்வப்னாவின் குடும்பத்தில் வறுமையும் தாண்டவமாடியது. தந்தை பஞ்சானன் பர்மானுக்குப் பக்கவாதம். மருத்துவமனையில் நீண்டகாலம் சிகிச்சையில் இருந்தவர். ஸ்வப்னாவின் தாயாருக்கு டீ எஸ்டேட் ஒன்றில் தேயிலை பறிக்கும் வேலை. இதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. பயிற்சியின்போது ஒருமுறை ஸ்வப்னாவுக்கு முதுகில் அடிபட்டது. தண்டுவடத்தில் ஒரு டிஸ்க் நகர்ந்துவிட்டது. இதனால், கடும் முதுகுவலி ஏற்பட்டது. முதுகுவலிக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்டேதான் பயிற்சியில் அவர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் தடகளத்திலிருந்து ஒதுங்கிவிடலாம் என்கிற எண்ணம்கூட அவருக்குத் தோன்றியது. ஸ்வப்னாவின் நிலையை அறிந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நிதியுதவி செய்தார். திறமைமிகுந்த வீராங்கனை என்பதை அறிந்த இன்னும் சிலரும் உதவிபுரிந்தனர். 

கடந்த அக்டோபர் மாதத்தில் பிரபல கிரிக்கெட் பிசியோதெரபிஸ்ட் ஜான் க்ளஸ்டரை, ஸ்வப்னா சந்தித்தார். இந்த க்ளஸ்டர்தான் சச்சினுக்கு ஏற்பட்ட முதுகுவலி குணமாக காரணம். ``முதுகுவலி தீர, அறுவைசிகிச்சைதான் வழி'' என்று க்ளஸ்டர் பரிந்துரைத்தார். அறுவைசிகிச்சை செய்தால் ஆசியப் போட்டிக்காக மேற்கொள்ளும் பயிற்சி பாதிக்கும் என்பதால், ஸ்வப்னா அதைத் தள்ளிவைத்துவிட்டார். எனினும், ஜான் க்ளாஸ்டர் கொடுத்த சில அறிவுரைகள் ஸ்வப்னாவுக்குப் பயனுள்ளதாக இருந்தன. ஸ்வப்னாவின் முதுகுவலியும் குறைந்தது. 

ஜகார்த்தா ஹெப்டத்லானில் ஸ்வப்னாவுக்கு சீன வீராங்கனை வாங் ஜிங்லிங் கடும் போட்டியாக இருந்தார். ஆனால், போராட்டமே வாழ்க்கையாகிப்போன ஸ்வப்னாவின் தீரத்துக்கு முன் வாங் ஜிங்லிங்கின் முயற்சி நீர்த்துப்போனது. ஸ்வப்னா 6,026 புள்ளிகள் எடுத்து தங்கம் வெல்ல... வாங் ஜிங்லிங் 5,954 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திபடவேண்டியதாகிவிட்டது.

தங்கம் வென்ற ஸ்வப்னா, மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார். ``வாழ்க்கை முழுவதுமே வலியை மட்டுமே அனுபவித்துவந்துள்ளேன். முதுகுவலி, வலது மூட்டுவலி, கால் விரல்களில் வலி, கணுக்கால்களில் வலி என வலியால் நான் அவதிபடாத நாளே இல்லை. விதிமுறைகள் காரணமாக மருந்துகள் எடுத்துக்கொள்வதிலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால்,  ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கவேண்டியதாகிவிடும். இதனால், வலிநிவாரண மாத்திரைகளும் எடுத்துக்கொள்ளவில்லை. இவையெல்லாம் போதாதெனப் போட்டி நடந்த தினங்களில் பல்வலியும் இருந்தது. இதனால், கன்னத்திலும் பிளாஸ்டர் ஒட்டி பல்வலியைக் குறைத்தேன். என் மனம், `தயவுசெய்து வலியை மறந்துவிட்டு, போட்டியில் மட்டும் கவனம் செலுத்து' எனச் சொல்லிக்கொண்டேயிருந்தது. வலியை மறந்தேன் தங்கம் வென்றேன்'' என்று பெருமையுடன் கூறுகிறார். 

வறுமை, உடல்வலிகளைத் தாண்டி சாதித்த ஸ்வப்னாவுக்குக் கிடைத்த பரிசுதான், ஆசியத் தங்கம்!