Published:Updated:

பி.டி.உஷாவை சாதனைப் பெண்ணாக்கிய மூன்று காரணங்கள்! #HbdPTUsha #MotivationStory

பி.டி.உஷாவை சாதனைப் பெண்ணாக்கிய மூன்று காரணங்கள்! #HbdPTUsha #MotivationStory
பி.டி.உஷாவை சாதனைப் பெண்ணாக்கிய மூன்று காரணங்கள்! #HbdPTUsha #MotivationStory

``வெற்றிக்கு... உழைப்பு, விடாமுயற்சி, தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஆகியவை நிச்சயம் தேவை. அப்படித்தான் முன்பு நாட்டுக்காக ஓடினேன். இப்போது என் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்க ஓடுகிறேன். என் அனுபவத்தில் ஒரு விஷயத்தை மட்டும் அடிக்கடி சொல்வேன். உண்மையான உழைப்பு என்றுமே வீண் போகாது. என் ஓட்டமும், நிற்காது!"


 

ந்திய விளையாட்டு சரித்திரத்தில் தவிர்க்க முடியாத நட்சத்திரம், பி.டி.உஷா. 'இந்தியாவின் தங்க மங்கை', 'தடகள நாயகி', 'ஆசிய தடகள ராணி' 'தடகள அரசி' உள்ளிட்ட பல பட்டப் பெயர்களுக்குச் சொந்தக்காரர். விளையாட்டுத்துறையில் சாதிக்கும், சாதிக்க நினைக்கும் பலருக்கும் நம்பிக்கை நட்சத்திரம், இவரே. தடகள நாயகியின் பிறந்த நாளான (ஜூன் 27) இன்று, அவர் வாழ்வில் நடந்த பல விஷயங்களைப் பற்றி பல்வேறு இடங்களில் அவர் பகிர்ந்து கொண்டவைகளைப் பார்ப்போம்.  

கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள பயோலி கிராமத்தில் 1964-ம் ஆண்டு பிறந்தார், உஷா. சிறுவயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டவர், பள்ளி அளவிலான பல தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுவந்தார். 1976-ம் ஆண்டு கேரள அரசு பெண்களுக்கு என கண்ணூரில் தொடங்கிய விளையாட்டுப் பள்ளியில் சேர்ந்தார். தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டார். 1979-ம் ஆண்டு தேசிய தடகளப் போட்டியின் 100 மீட்டர் பிரிவில் பட்டம் வென்றார். அன்று முதல் இவரின் விளையாட்டுத் திறன்  பிரகாசிக்கத் தொடங்கியது. 

1980-ல் பங்கெடுத்த முதல் ஒலிம்பிக் (மாஸ்கோ) போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்தார். ஆனாலும் தன் விடாமுயற்சியை மட்டும் உஷா விடவில்லை. பின்னர் தேசிய, ஆசிய, சர்வதேச அளவிலான பல போட்டிகளில் தொடர்ந்து தங்கப் பதக்கங்கள் உள்ளிட்ட பல பதக்கங்களைக் குவித்தார். தடகள விளையாட்டில், இந்தியாவின் நம்பிக்கையாக ஜொலித்துக்கொண்டிருந்த உஷாவுக்கு, அப்போது ஏற்பட்ட சறுக்கல்களும், அதிலிருந்து அவர் மீண்ட விதமும் ஆச்சர்யம் ஏற்படுத்துபவை.

``1988-ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்பை இழந்தேன். அந்தக் காலகட்டத்தில், மீள முடியாத வலியுடன் ஒரு விபத்தை எதிர்கொண்டேன். என் வாழ்நாளில் நான் எதிர்கொண்ட வலியும் வேதனையுமான காலகட்டம் அது. 'இனி உஷா விளையாட்டுத்துறையில் ஜொலிக்க மாட்டார்; அவரால் உத்வேகத்தோடு விளையாட முடியாது' என்றெல்லாம் ஏகப்பட்ட விமர்சனங்கள். அத்தகைய பேச்சுகள்தாம், என் உடல் வலியை விடவும் அதிக வேதனையைக் கொடுத்தது. ஒருவர் கீழே விழுந்தால் எழுப்பி விடுவதைவிட, அவரை எழுந்திரிக்கவே விடக்கூடாது என்பதுபோல சிலர் செயல்படுவார்கள். அதைக் கண்கூடாக உணர்ந்தேன். தோல்வி, வலி, புறக்கணிப்பு இன்றி சாதனை என்பது சாத்தியமில்லையே! அதை நன்கு உணர்ந்தேன். 

அப்போது என் வீட்டில் எனக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. உடனே, 'நீ உன் கனவை வசப்படுத்து; உன் திறமையை வெளிப்படுத்து' என்று என் வீட்டார் கொடுத்த ஊக்கம் விவரிக்க முடியாதது. மேலும், ஒரு மனநல ஆலோசகரின் ஊக்கம், என் மருத்துவ வழிமுறைகள் என மூன்று விஷயங்கள்தாம் மீண்டும் நான் எழவும்; வெற்றிக்கோட்டை தொடவும் உதவியது" என்று உருக்கமாகக் கூறியிருக்கிறார், உஷா. அந்தத் துடிப்பான மனத்திறனுடன், 1989-ம் ஆண்டு டெல்லியில் நடந்த 'ஆசிய சாம்பியன்ஷிப்' போட்டியில் கலந்துகொண்டார். 4 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று, முத்திரை பதித்தார். 1991-ல் சீனிவாசன் என்பவரை மணந்துகொண்டவர், மூன்று ஆண்டுகள் ஓய்வில் இருந்தார். கணவரின் ஊக்கத்தால், மீண்டும் தடகளப் போட்டிகளில் ஓடத்தொடங்கினார், கூடுதல் புத்துணர்ச்சியுடன்.  

``அதிக தோல்விகளை கண்டிருக்கிறேன். அப்போதெல்லாம், 'எனக்கான ஒரு பதக்கமும் வெற்றியும் பறிபோய்விட்டதே' என ஒருபோதும் நினைத்ததில்லை. இந்தியாவுக்கான வெற்றி பறிபோய்விட்டதே' என்றுதான் ஆதங்கம் கொள்வேன். பின்னர் தோல்விக்கான காரணம் மற்றும் என் தவறுகளை உணர்ந்து, தோல்விகளைவிட அதிகமான வெற்றிகளையும் பெற்றிருக்கிறேன். என் உழைப்புக்கு உண்மையான பலன் கிடைத்தது" என்று கூறும் உஷாவின் வெற்றி, தோல்விகள்... பிறருக்குப் பாடம். தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் 103 பதக்கங்களைக் குவித்து தனிப்பெரும் சாதனைக்கு உரியவராக இன்றுவரை திகழ்கிறார். 

``பயோளி கடற்கரைப் பகுதியில்தான் பெரும்பாலும் ஓட்டப்பயிற்சி மேற்கொள்வேன். என் காலத்தில் இப்போது இருப்பதுபோன்ற பயிற்சி வசதிகள் இருந்திருந்தால், இன்னும் நிறைய பதக்கங்களைப் பெற்றிருப்பேன். இப்போது விளையாட்டுத்துறையில் முன்னேற்றங்கள் அதிகரித்துள்ளன. அதை இன்றைய இளைய வீரர்களும் வீராங்கனைகளும் முறையே பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பல துறைகளில் இந்தியா முன்னேறியிருந்தாலும், விளையாட்டில் பின்தங்கியே இருக்கிறது. அதற்கு இங்குள்ள கட்டமைப்புகள் சரியாக இல்லாததே காரணம். விளையாட்டுத்துறை ஆணையம் மற்றும் பிற அமைப்புகளில், அனுபவம் பெற்ற திறமையான நபர்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. மேலும், எல்லா விளையாட்டுகளுக்கும் உரிய, இணையான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அதனால்தான் நிறைய திறமையான வீரர்கள் நம் நாட்டில் இருந்தும், இந்தியாவால் விளையாட்டுத் துறையில் பெரிய வளர்ச்சியைப் பெற முடியவில்லை" என்று ஆதங்கம் கொள்கிற உஷா, 2000-ம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் கோழிக்கோடு அடுத்த கொயிலாண்டி என்ற இடத்தில், 'உஷா தடகளப்பள்ளி' என்ற பயிற்சி மையத்தைத் தொடங்கினார். இவரின் மாணவர்கள் தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியாவின் புகழை நிலைநாட்டிவருகின்றனர்.

தற்போது கேரள மாநிலத்தில் வசித்துவரும் உஷா, இந்திய ரயில்வே துறையில் பணியாற்றிவருகிறார். அர்ஜூனா விருது, பத்மஶ்ரீ விருது உள்ளிட்ட இந்திய அரசின் பல உயரிய விருதுகளையும் பெற்றிருக்கிறார். 54-ம் வயதில் அடியெடுத்து வைக்கும் இவருக்கு, கோழிக்கோடு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி இந்த ஆண்டு கௌரவப்படுத்தியது. இவரின் வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்டில் படமாக இயக்கவுள்ளார், ரேவதி வர்மா. படத்தில் உஷாவாக நடிக்க இருப்பவர், பிரியங்கா சோப்ரா.  

உஷாவின் பேச்சுகளில் அதிகம் இடம்பெறும் தன்னம்பிக்கை வரிகள், ``தோல்வியைப் பெறாமல், பெரிய வெற்றிகளை ஒருபோதும் அறுவடை செய்யவே முடியாது. வெற்றிக்கு இடைப்பட்ட காலங்களில் நிச்சயம் வலியும் புறக்கணிப்பும் இருக்கத்தான் செய்யும். அந்தத் தடைகளைத் தாண்டிவந்தால்தான், வெற்றிக் கோட்டை அடைய முடியும். அதற்கு உழைப்பும், விடாமுயற்சியும், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் நிச்சயம் தேவை. அப்படித்தான் முன்பு நாட்டுக்காக ஓடினேன். இப்போது என் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்க ஓடுகிறேன். என் அனுபவத்தில் ஒரு விஷயத்தை மட்டும் அடிக்கடி சொல்வேன். உண்மையான உழைப்பு என்றுமே வீண் போகாது. என் ஓட்டமும், நிற்காது!"

தடைகளைத் தாண்டி ஓடுங்கள்... ஓடிக்கொண்டே இருங்கள், உஷா!

அடுத்த கட்டுரைக்கு