Published:Updated:

''கால் வலியோடதான் தங்கம் ஜெயிச்சான்!''- நெகிழும் சதீஷ்குமார் அம்மா! #SathishSivalingam

''கால் வலியோடதான் தங்கம் ஜெயிச்சான்!''- நெகிழும் சதீஷ்குமார் அம்மா! #SathishSivalingam

ஆஸ்திரேலியாவில் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார் சதீஷ்குமார்.  வேலூர் மக்கள் இதை விழாபோல கொண்டாடி வருகிறார்கள்.

''கால் வலியோடதான் தங்கம் ஜெயிச்சான்!''- நெகிழும் சதீஷ்குமார் அம்மா! #SathishSivalingam

ஆஸ்திரேலியாவில் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார் சதீஷ்குமார்.  வேலூர் மக்கள் இதை விழாபோல கொண்டாடி வருகிறார்கள்.

Published:Updated:
''கால் வலியோடதான் தங்கம் ஜெயிச்சான்!''- நெகிழும் சதீஷ்குமார் அம்மா! #SathishSivalingam

‘'கடினமா உழைச்சு அதன் மூலமா கிடைக்கிற வெற்றி மட்டுமே நிலைக்கும். ஒருவர் தவறவிடும் வாய்ப்பால் நமக்குக் கிடைக்கும் வெற்றி நிலைக்காது'' - காமென்வெல்த் போட்டியில் தங்கம் வென்றிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கத்தின் அம்மா சொன்ன வார்த்தைகள் இவை. அதை வேதவாக்காக எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதை அவர் வெற்றி நமக்கு உணர்த்துகிறது.

வேலூரும் வெயிட் லிஃப்ட்டிங்கும்!

50 வருடங்களுக்கு வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் முதன் முதலாக வெயிட் லிப்டிங் போட்டிக்காக வெளிநாடு சென்றுவந்தார். அரசு வேலையும் கிடைத்து. அர்ஜுனா விருது வென்ற இவரைப் பார்த்து நிறைய பேர் வெயிட் லிப்டிங்கில் சேர ஆரம்பித்தார்கள். வெயிட் லிப்டிங்கில் சேர்ந்து சாதித்தால் அரசு வேலை நிச்சயம் என்ற நிலை உருவானது. இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் வேலைக்காகவே 'வெயிட் லிப்டிங்' கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். வேலூர் பகுதியில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பளுதூக்கும் வீரர்கள் உருவாகியிருக்கின்றார்கள். தமிழக அளவில் எங்கு போட்டிகள் நடந்தாலும் வேலூர் மாவட்டத்தில் உள்ளவர்கள்தான் வெற்றிபெறுவார்கள் என்கிற நிலை இருக்கிறது. சுமார் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் விமானப்படை, ராணுவம், தெற்கு ரயில்வே போன்ற மத்திய அரசுப்பணிகளில் இருக்கின்றார்கள். வேலூர் பகுதியில் 26 பேர் இன்டர்நேஷ்னல் லெவல் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் வென்றவர்கள். அதில் தமிழ்ச்செல்வன், தேவன், முத்து ஆகியோர் அர்ஜுனா விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைப் பொறுத்தவரை, வேலூர் பகுதியில் உள்ளவர்கள் வெயிட் லிஃப்ட்டிங்கில் அதிக அளவில் பயிற்சி பெற்றுவருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்பா தந்த ஊக்கம்!

வேலூர், சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கடந்த 2014-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் 77 கிலோ பிரிவிலும் தங்கம் வென்று சாதனை படைத்தவர். தற்போது ஆஸ்திரேலியாவில் நடக்கும் காமன்வெல்த் போட்டியிலும் அதே பிரிவில் தங்கம் வென்றிருக்கிறார்.  வேலூர் மக்கள் இதை விழாபோல கொண்டாடி வருகிறார்கள். சதீஷின் தந்தை சிவலிங்கமும் வெயிட் லிஃப்ட்டிங் சாம்பியன்தான். ராணுவத்தில் கோச்சாக பணியாற்றியவர். செகந்திராபாத், போபால் என பணியாற்றிய அவர் ஓய்வுபெற்றபின் சொந்த ஊரான வேலூருக்குக் குடிபெயர்ந்தார். அவரிடமே பேசினோம் 

''சதீஷ்குமாரை 13 வயசில் வேலூருக்கு கூட்டிட்டு வந்தோம். அவனுக்கு அப்போ தமிழ் தெரியாது. சொந்தக்காரங்கதான் அவனுக்கு தமிழ் கத்துக்கொடுத்தாங்க. ஸ்கூல்ல படிக்கிறப்பவே என்னோட அடிக்கடி ஜிம்முக்கு வருவான். அவன் எட்டாவது படிச்சுட்டிருந்த நேரம், ஸ்கூல்ல விளையாட்டுப் போட்டி நடக்குதுப்பா, நானும் கலந்துக்கப் போறேன்னு சொன்னான். என்னைப் பொறுத்தவரைக்கும் விளையாட்டுனாலே வெயிட் லிப்டிங்தான். அதனால நாந்தான் அதுல பேர் கொடுடானு சொன்னேன்.

அவனும் அதையே வேதவாக்கா எடுத்துகிட்டு பேர் கொடுத்ததோட மட்டுமல்லாம என்னோட தினமும் ஜிம்முக்கு வருவான். அவன் கலந்துகிட்ட முதல் போட்டியிலேயே அவனுக்குப் பரிசு கிடைச்சது. ரொம்பவே சந்தோஷப்பட்டோம். அன்னையிலேருந்து படிக்கிற நேரம் போக, மத்த நேரமெல்லாம்  சதீஷை ஜிம்லதான் பார்க்க முடியும். அவன் பசி, தூக்க, கனவு எல்லாமுமா வெயிட் லிப்டிங் இருந்ததை கவனிச்சேன். ஜிம்மில்தான் சதீஷை பார்க்க முடியும். சதீஷின் உலகம், கனவு எல்லாம் வெயிட் லிஃப்டிங்தான். 2006-ல் தேசிய அளவுல ஸ்கூல் பசங்களுக்காக நடந்த போட்டியில ஆரம்பிச்சது அவனோட தங்க வேட்டை. 2011-க்குப் பிறகு, தேசிய அளவு, ஆசிய அளவு, காமன்வெல்த் சேம்பியன் போட்டி, 2014 காமன்வெல்த், 2018 காமன்வெல்த்னு எல்லாத்திலேயும் கலந்துகிட்டு பட்டையைக் கிளப்பினான்'' என்று சொல்லும்போது அவர் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் பெருமிதம் மிதக்கிறது.  

சதீஷின் அம்மா தெய்வானையிடம் பேசினோம், “நாங்க மிடில் கிளாஸ் தம்பி. அவன் சின்ன வயசுலருந்தே வெயிட் லிப்டிங் பயிற்சினா உயிரை விடுவான். அதுல அவன் தீவிரமா இருக்கிறதைப் பார்த்த இவரு (கணவர்) அவனுக்குச் சத்தான ஆகாரமா கொடுனு சொன்னார். அதனால் தெனமும் சிக்கன், மட்டன், முட்டை, பழம்தான். ஒரே மாதிரியான சாப்பாடு சாப்ட்டு அலுத்துச் போச்சுன்னு சில நேரங்கள்ல அடம்பிடிப்பான். ஒருவழியா சமாதானம் செய்து சாப்பிட வைப்போம். எக்ஸாம் நேரத்தை தவிர்த்து மத்த நேரத்தில் ஜிம்மே கதினு இருப்பான். அவன் கலந்துக்கிற ஒவ்வொரு போட்டியிலேயும் அவனைவிட அதிக எடையை தூக்குறவங்க இருக்கிறாங்கனு சொல்லுவான். அவங்கதான் ஜெயிச்சுடுவாங்கனு தோணும். ஆனா சதீஷ்குமார், `ம்மா கவலைப்படாத... நாந்தான் ஜெயிப்பேன்'னு சொல்வான். சொன்ன மாதிரியே தங்கத்தோட வருவான். ஒவ்வொரு முறையும் அவனுக்கு மெடல் கொடுக்கிறதை நேர்ல பார்க்கணும்னு ஆசைப்படுவேன். இந்தியாவில் நடக்கிற போட்டிக்கு நான் வர்றேன்டானு சொல்லுவேன். வேண்டாம்மானு தவிர்த்திடுவான். 

போனமுறை காமன்வெல்த்தில் அவன் தங்கம் ஜெயிக்கும்போது டிவி-யில நேரடியா பார்த்தேன். என்னால கண்ணீரை அடக்க முடியல. இரண்டாவது காமன்வெல்த் போட்டி இதுங்கிறதுனால எனக்கு ரொம்ப படபடப்பா இருந்தது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி பயிற்சியப்ப அவனுக்கு கால்ல அடிபட்டிருச்சு. அந்த வலிக்காக டெல்லியில ட்ரீட்மென்ட் எடுத்துகிட்டான். அதோடதான் காமென்வெல்த்ல கலந்துகிட்டான். அவன் கால் வலியோட போட்டியில கலந்துகிட்டு வெயிட் தூக்குறதைப் பார்க்க மனசில்லை. அதனால வேற இடத்துல போய் உட்கார்ந்துகிட்டேன். சதீஷ் தங்கம் ஜெயிச்சதா சொன்னவுடன் டிவி-க்கு முன்னால ஓடிவந்தேன். திரும்ப ஒரு முறை அதை ஒளிபரப்பினாங்கனவன் எப்படா தங்க மெடலோட இங்க வருவான்னு எதிர்பார்த்துகிட்டு இருக்கேன். மனசு சந்தோஷத்துல அலைபாயுது தம்பி.  சீக்கிரமே அவனுக்குச் கல்யாணம் பண்ணி வைக்கணும். அதுதான் இப்ப இருக்கிற எங்களோட ஒரே ஆசை'' என்பவரின் வார்த்தைகளில் தாய்மைக்கே உரிய பெருமிதம்.
ஒலிம்பிக்தான் சதீஷ்குமாரின் அடுத்த இலக்காம். வெற்றி உங்களுக்கு அமையட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism