Published:Updated:

“ஆள் வளர்ந்துட்டேன் அதுக்கேற்ற சைக்கிள் வாங்கத்தான் முடியல” - ஒலிம்பிக் பயணத்தைத் தொடர முடியாத ஐஸ்வர்யா!

ஜெ.பஷீர் அஹமது
“ஆள் வளர்ந்துட்டேன் அதுக்கேற்ற சைக்கிள் வாங்கத்தான் முடியல” - ஒலிம்பிக் பயணத்தைத் தொடர முடியாத ஐஸ்வர்யா!
“ஆள் வளர்ந்துட்டேன் அதுக்கேற்ற சைக்கிள் வாங்கத்தான் முடியல” - ஒலிம்பிக் பயணத்தைத் தொடர முடியாத ஐஸ்வர்யா!

மாநில அளவிலான ரோடு சைக்கிளிங் போட்டியில் தொடர்ந்து ஐந்து முறை தங்கம் வென்றவர், ஐஸ்வர்யா. திருச்சி, திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்தவர். அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவருகிறார். இவரது தந்தை பானிபூரி விற்பனை செய்யும் தொழிலாளி. அம்மா, வீட்டு வேலைகள் செய்கிறார். வறுமை தொடர்ந்து விரட்டினாலும், உலக அளவில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற லட்சியத்துடன் போராடுபவருக்கு அது கடைசிவரை கனவாகவே போய்விடுமோ என்ற படபடப்பு ஏற்பட்டுள்ளது. 

சமீபத்தில், நாகப்பட்டினத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்படோருக்கான மகளிர் பிரிவுப் போட்டியில் தங்கம் வென்றவரைச் சந்தித்தோம். “சின்ன வயசிலிருந்தே சைக்கிள் ஓட்டுறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஸ்கூல் லெவல் போட்டிகளில் கலந்துக்கிட்டு ஜெயிச்சேன். என் ஆசிரியர்களின் பயிற்சியாலும், ஊக்கத்தாலும் மண்டல, மாவட்ட அளவிலான போட்டிகளில் பதக்கங்களை ஜெயிச்சேன். இந்த வெற்றிகளுக்காகத் தினமும் காலையில் 40 கிலோமீட்டர் சைக்கிளை ஓட்டி பயிற்சி செய்திருக்கேன். போட்டி நடக்கும் சமயங்களில் 80 கிலோமீட்டர்கூட போவேன். எனக்கு வசதி இல்லாததால், தனிப் பயிற்சியாளர் யாரையும் வெச்சுக்கலை. என் ஆர்வத்தையும் முயற்சியையும் பார்த்து, சர்வதேச சைக்கிள் பந்தய வீரர் ராஜேஸ், பல பயிற்சி முறைகளைக் கற்றுக்கொடுத்தார். என் உடற்கல்வி ஆசிரியர்கள் சிவகாமி மற்றும் கார்த்திக் ஆகியோரின் வழிகாட்டுதலில் பயிற்சி எடுத்துட்டிருக்கேன். "ஆள் வளர்ந்துட்டேன். அதுக்கேற்ற சைக்கிள் வாங்கத்தான் முடியல" என்கிறார் ஐஸ்வர்யா. 

இதுவரை ஜெர்மனியிலிருந்து வாங்கப்பட்ட முழு காப்பர் சைக்கிளையே பயன்படுத்தி வந்திருக்கிறார் ஐஸ்வர்யா. அது சில வருடங்களுக்கு முன்பிருந்த அவரின் உயரத்துக்கான சைக்கிள். இப்போது, அந்த சைக்கிளைப் பயன்படுத்த முடியாத நிலை. 

ஐஸ்வர்யாவின் தந்தை ஜெயராமன், ''ஆரம்பத்தில் நான் பால் விற்பனை செய்ய பயன்படுத்தின சைக்கிளில்தான் என் மகள் பயிற்சி செய்துட்டிருந்தா. அவள் திறமை நல்லா தெரியுது. ஒவ்வொரு முறையும் பதக்கத்தோடு வந்து நிற்கிறப்போ சந்தோஷமா இருக்கு. இன்னும் அவளுக்கு ஏதாவது செய்யணும்னு ஆசைதான். ஆனால், காசு இல்லையே. அவள் கேட்கிற சைக்கிளை எங்களால் நினைச்சுகூட பார்க்க முடியாது'' என்கிறார் ஆதங்கத்துடன். 

ஐஸ்வர்யா படிக்கும் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஜெயசுடர்விழி, ''ஐஸ்வர்யா சைக்கிளிங்கில் மட்டுமல்ல, படிப்பிலும் முதலிடம்தான். இவரது திறமை அறிந்து, எங்கள் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், சில தன்னார்வ அமைப்புகளிடம் பேசி முன்பு 2.25 லட்சம் மதிப்புள்ள சைக்கிளை வாங்கிக் கொடுத்தோம். இப்போது, அவரது உயரத்துக்கு ஏற்ற சைக்கிளின் விலை 4 லட்சம் ஆகுமாம்'' என்கிறார். 

''என் லட்சியம் ஒலிம்பிக் சைக்கிளிங் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கம் வாங்கிக் கொடுக்கிறது. அப்புறம், என்னை மாதிரி சைக்கிளிங் போட்டிகளில் ஆர்வமுடையோருக்குப் பயிற்சி கொடுக்கணும். ஆனால், தேசியப் போட்டியில் பங்கேற்கவே முடியாமல் போராடிட்டிருக்கேன். என் லட்சியங்கள் எல்லாம் கனவாகவே போயிடுமோனு கவலையா இருக்கு'' என்ற ஐஸ்வர்யாவின் வார்த்தைகள் முழுக்க வலி. 

எளிய அளவிலான பொருளாதாரப் பின்புலம் கொண்டுள்ள வீடுகளிலிருந்து சாதிக்கத் துடிக்கப் போராடும் ஐஸ்வர்யா சந்திக்கும் சவால்கள் ஏராளம். அவரின் லட்சியப் பயணம் தடையில்லாமல் எப்படியேனும் தொடர வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்.