கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 30 தொடங்கிய இந்த் தொடர் பிப்ரவரி 11 வரை நடைபெற இருக்கிறது . இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் இருந்து 5,000 மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்தை உருவாக்கும் வகையில் மத்திய அரசால் 2018 ஆம் ஆண்டு கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் உருவாக்கப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் இந்தியா அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.அந்த வகையில் ஐந்தாவது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இதில் தடகளம், கபடி, ஹாக்கி கைப்பந்து, கோகோ, யோகாசனா உள்ளிட்ட 27 விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றுள்ளது.
ஏழாவது நாள் முடிவின் படி,
பதக்கப் பட்டியலில் 83 பதக்கங்களுடன் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது .
தமிழ்நாடு அணி 7 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களுடன் 9-ஆவது இடத்தில் உள்ளது.

200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த வருண் உரி மனோகர் தங்கம் வென்றார் . இதற்கு முன் 100 மீட்டர் ஓட்டைப்பந்தயத்தில் இவர் தமிழ்நாடு அணிக்காக வெண்கலம் வென்றிருந்தார். மேலும் ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டத்தில் (Hurdles) ரத்தீஷ் பாண்டிதுரை தங்கம் வென்றார்.
தடகள பிரிவு ட்ரிபிள் ஜம்ப் விளையாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த அபிநயா ஸ்ரீ 12.05 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார். இதுவரை தடகள விளையாட்டில் மட்டும் நான்கு தங்கம், ஒரு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் ஏழு பதக்கங்களை வென்று தமிழ்நாடு அணி அசத்தியுள்ளது. பிப்ரவரி 2- ஆம் தேதி நடைபெற்ற யோகாசனா விளையாட்டில் தமிழ்நாட்டிற்கு முதல் தங்கம் கிடைத்தது.
யோகாசனாவில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்கள் தமிழ்நாட்டிற்குக்கு கிடைத்திருக்கிறது.
சைக்கிளிங் விளையாட்டிலும் தமிழக வீரர்கள் ஒரு வெள்ளி ஒரு வெண்கலம் வென்றுள்ளனர். மேலும் குத்து சண்டை விளையாட்டில் ஒரு வெண்கலம் பெற்றுள்ளனர். பேட்மிண்டன், கூடைப்பந்து விளையாட்டில் தலா ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கபடி போட்டியில் தமிழ்நாடு கபடி அணி காலிறுதிப் போட்டியில் வெளியேறி ஏமாற்றத்தை அளித்தது.