Published:Updated:

"ஆபத்தான பைக் சாகசம் வேண்டாம். மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு வாருங்கள்!"- பைக் ரேஸ் சாம்பியன் நிவேதா

நிவேதா ஜெசிகா
News
நிவேதா ஜெசிகா

"பொள்ளாச்சிக்குச் சென்ற போது அங்கு ஒரு கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்களைச் சந்தித்தோம். அங்கு குழந்தைத் திருமணங்கள் மிகவும் சகஜமாக நடப்பதைப் பார்த்து, அவர்களுக்குக் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தோம்." - நிவேதா

Published:Updated:

"ஆபத்தான பைக் சாகசம் வேண்டாம். மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு வாருங்கள்!"- பைக் ரேஸ் சாம்பியன் நிவேதா

"பொள்ளாச்சிக்குச் சென்ற போது அங்கு ஒரு கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்களைச் சந்தித்தோம். அங்கு குழந்தைத் திருமணங்கள் மிகவும் சகஜமாக நடப்பதைப் பார்த்து, அவர்களுக்குக் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தோம்." - நிவேதா

நிவேதா ஜெசிகா
News
நிவேதா ஜெசிகா
இந்தியாவின் முதல் பெண்கள் மோட்டார் சைக்கிள் அமைப்பை உருவாக்கி நடத்தி வரும் நிவேதா ஜெசிகா, தி.மு.க மாநில விளையாட்டுத் துறைத் துணைச் செயலாளராகத் தேர்வாகியுள்ளார். தி.மு.க ஸ்போர்ட்ஸ் விங்கில் இருக்கும் ஒரே பெண் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதலில் பைக் ரைடிங் ஆரம்பித்து, பின் அதற்கென பாதுகாப்பான ஒரு ஸ்போர்ட்ஸ் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு மோட்டார் சைக்கிள் ரேசிங்கில் பயிற்சி பெற்றார் ஜெசிகா. பல போட்டிகளில் கலந்துகொண்டு தேசிய அளவில் மோட்டார் சைக்கிள் சேம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றுள்ளார்.

”பைக் ரேசிங் மட்டுமல்ல, ஏதாவது ஒரு ஸ்போர்ட்ஸில் நாம் ஈடுபடும் போது உடல் வலிமையுடன், மன வலிமையும் கூடுகிறது என்று தெரிந்துகொண்டேன். பெண்கள் பலர் பைக் ஓட்ட வேண்டும், அல்லது மோட்டார் ஸ்போர்ட்ஸில் பங்கு பெற வேண்டும் என்று விரும்பினாலும், முறையான பாதுகாப்பான பயிற்சி மையங்கள் இல்லாததால், தங்கள் கனவைத் தொடர முடியாததை அறிந்து, நானே இந்தியாவில் முதல் முறையாக பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் கிளப்பை உருவாக்கினேன்.

நிவேதா ஜெசிகா
நிவேதா ஜெசிகா

தமிழ்நாட்டைத் தாண்டி, இந்தியா முழுக்கப் பல மாநிலங்களிலிருந்தும் பெண்கள் எங்களுடைய அமைப்பில் இணைய விரும்பினார்கள். அதனால் இன்று இந்தியாவில் 11 மாநிலங்களில் நாங்கள் இயங்கிவருகிறோம். பெண்கள், மோட்டார் ஸ்போர்ட்ஸில் அவர்கள் விரும்பிய போட்டிகளுக்காகப் பயிற்சி பெறலாம். அப்படியே எல்லோருமாகச் சேர்ந்து பைக் ரைடும் போவோம். அப்போது பல இடங்களுக்குச் சென்று, அங்கு சந்திக்கும் மக்களிடம் கல்வி, சுகாதாரம் குறித்தும், பெண்களை விளையாட்டில் ஈடுபடச்சொல்லியும் விழிப்புணர்வு உண்டாக்குவோம். 

அப்படி பொள்ளாச்சிக்குச் சென்ற போது அங்கு ஒரு கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்களைச் சந்தித்தோம். அங்கு குழந்தைத் திருமணங்கள் மிகவும் சகஜமாக நடப்பதைப் பார்த்து, அவர்களுக்குக் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தோம். பின் தொடர்ந்து அந்தப் பகுதிக்குச் சென்று, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினோம். கல்வி மட்டுமே எல்லா அறியாமையையும் போக்கி, சமூகத்தை உயர்த்தும்.

பெண்கள் தைரியமாக இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம். கல்வி எப்படி தன்னம்பிக்கையைக் கொடுக்கிறதோ, அதே போல விளையாட்டு நமக்கு தைரியத்தையும் துணிவையும் கொடுக்கும். அதனால் தி.மு.க மாநில விளையாட்டுத் துறைத் துணைச் செயலாளராகக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பையும் பொறுப்பையும் பயன்படுத்தி இளைஞர்கள், பெண்கள் எல்லோரும் விளையாட்டில் பயிற்சி பெறத் தேவையான முயற்சிகளை எடுப்பேன்.

நிவேதா ஜெசிகா - தி.மு.க ஸ்போர்ட்ஸ் விங்
நிவேதா ஜெசிகா - தி.மு.க ஸ்போர்ட்ஸ் விங்

அது தவிர, பல இளைஞர்கள் வீதிகளில் ஆபத்தான வழியில் பைக் ரேசிலும் பைக் சாகசங்களிலும் ஈடுபடுகிறார்கள். அதற்கு பதிலாக மோட்டார் சைக்கிள் ஸ்போர்ட்ஸை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி பைக் ரைடு மற்றும் பைக் ரேசிங்கைக் கட்டுப்படுத்தி, பாதுகாப்பான முறையில் அவர்களை இந்த விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும்” என்கிறார்.