
காலத்தைப் பின்னோக்கி ஓடவைக்கும் புதிய தொழில்நுட்பம் ஒன்றினால் மூன்றாவது உலக யுத்தம் வரவிருக்கிறது.
பறவைகள் பின்னோக்கிப் பறக்கின்றன. தோட்டாக்கள் பின்னோக்கிப் பாய்ந்து துப்பாக்கியில் தஞ்சம் அடைகின்றன. பேசும் வார்த்தைகள் தலைகீழாக செவிக்கு எட்டுகின்றன. ஆம், கனவுக்குள் கனவு விளையாட்டு, விண்வெளிப் பயணம், இட-காலத் தொடரளவைச் சிக்கல்கள் எனப் பல புதிய அறிவியல் கதைக்களங்களில் நேர விளையாட்டுகளை நிகழ்த்திய நோலன், இந்த முறை டைம் இன்வர்ஷன் (நிகழ்வுகளில் பின்னோக்கிப் பயணப்படுதல்), பொருள்களைப் பின்னோக்கிப் பயணம் செய்ய வைத்தல், ஒரே சமயத்தில் ஒருவரே பின்னோக்கியும் முன்னோக்கியும் பயணப்படுதல் எனத் தெளியவைத்துத் தெளியவைத்துக் கதை சொல்லியிருக்கிறார்.

காலத்தைப் பின்னோக்கி ஓடவைக்கும் புதிய தொழில்நுட்பம் ஒன்றினால் மூன்றாவது உலக யுத்தம் வரவிருக்கிறது. அதற்குக் காரண கர்த்தாவான ரஷ்ய வில்லனைத் தடுக்க முயல்கிறான் நாயகன். ஜேம்ஸ்பாண்டு படப் பாணி ஒன்லைன்தான் என்றாலும், இங்கே நம் எதிராளி நம் எதிர்கால சந்ததியினர். ஆம், நம்முடைய எதிர்காலமே நம்மைப் பழிவாங்க நினைத்தால் நம்மால் தப்பிக்க முடியுமா? ‘டெனெட்’ என்ற ரகசிய அமைப்பு பெயரிடப்படாத நாயகன் (a protagonist) உதவியுடன் இதைத் தடுக்க நினைக்கிறது. அவனுக்குப் பக்கபலமாக ஒருவன் துணை நிற்க, இவர்கள் வில்லனை எதிர்க்கும் சுழலில் மாட்டிக்கொள்ளும் வில்லனின் மனைவியே இந்தக் கதையின் நாயகியாக மாற... அற்புதமாக வடிவமைக்கப்பட்ட ரிவர்ஸ் சேஷிங் காட்சிகள், விமான விபத்துக் காட்சிகள், யுத்தகளக் காட்சிகளுடன் ஒரு மெகா சைஸ் ‘பெரிய’ திரைவிருந்தை இந்தக் கொரோனா காலத்தில் கொடுத்திருக்கிறது படக்குழு. அதிலும் ஒரே காட்சியை முன்னோக்கியும் பின்னோக்கியும் இருமுறை நடிக்க வைத்து, நிகழ வைத்துப் படம் பிடித்ததெல்லாம் யாரும் எடுக்கத் தயங்கும் ரிஸ்க்!

‘டெனெட்’டின் பிரச்னை அதன் அறிவியலிலோ அதைத் திரையில் காட்டிய விதமோ இல்லை. இந்த அந்நியக் கதைக்களத்துடன் நாம் ஒன்றிப்போக ஓர் உணர்வுபூர்வமான கதாபாத்திரமோ ஒரு நிகழ்வோ படத்தில் இல்லை என்பதுதான். ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், எலிசபெத் டெபிக்கி, நம்மூர் டிம்பிள்கபாடியா எனப் பலர் நடித்திருந்தாலும் ராபர்ட் பேட்டின்சனைத் தவிர வேறு யாரும் பெரிதாக ஈர்க்கவில்லை. இருந்தும், இந்த ‘ஓடிடி எழுச்சி’ காலத்திலும் நோலன் ஏன் பெரிய திரை அனுபவத்துக்காக இவ்வளவு பிரயத்தனப்படுகிறார் என்பதற்கான விடையாக இருக்கிறது இந்த ‘டெனெட்’ எனும் பிரமாண்டம்!