சினிமா
தொடர்கள்
Published:Updated:

உதைப்போம்... உயரம் தொடுவோம்!

ஸ்பெயின் CF FUENLABRADA கிளப்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்பெயின் CF FUENLABRADA கிளப்

ரவி ஒரு தனியார் நிறுவன மேலாளராக இருக்கிறார். சிந்தாதிரிப்பேட்டை அரசுப் பள்ளியில் படித்தவர்தான். கால்பந்துமீது தீராக்காதல்.

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரிலிருந்து வீடியோ காலில் பேசுகிறான் ராகுல். சிந்தாதிரிப்பேட்டை செக்குமோட்டில், 80 சதுரடி வீட்டுக்குள் இருந்து சாமுண்டீஸ்வரியும் கமலக்கண்ணனும் கண்கள் கலங்க அவனோடு பேசிகொண்டிருக்கிறார்கள். ``இப்பத்தாம்மா கிரௌண்ட்ல இருந்து வந்தேன்... எப்படியும் கிளப்ல இடம் கிடைச்சிரும். நல்லா விளையாடுறேன்னு கோச் சொன்னார்...’’ என்கிறான் ராகுல். ``நம்ம கஷ்டம் உணர்ந்து விளையாடும்மா...’’ என்கிறார் சாமுண்டீஸ்வரி.

ராகுல், சிந்தாதிரிப்பேட்டை ஆண்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறான். சிறு வயதிலிருந்தே கால்பந்துமீது தீரா ஆர்வம். பள்ளி மைதானத்தில் பந்தை உதைத்துக்கொண்டிருந்தவனைக் கண்டெடுத்தார் ரவி. முறைப்படி நுட்பங்கள் கற்றுத்தந்து ஆளாக்கினார். ஸ்பெயின் CF FUENLABRADA கிளப் ராகுலை அரவணைத்துக்கொண்டது. மேட்ரிட் நகரில் தீவிரப் பயிற்சியிலிருக்கிறான் ராகுல்.

உதைப்போம்... உயரம் தொடுவோம்!

``இன்னைக்கு இந்தியா உலகக்கோப்பைக் கால்பந்துல விளையாடாம இருக்கலாம். ஆனா, உலக நாடுகள்ல இருக்கிற பல கிளப்கள் இந்தியா வந்து நல்ல பிளேயர்ஸை அடையாளம் கண்டு கூட்டிக்கிட்டுப் போய்க்கிட்டிருக்காங்க. ராகுல் மட்டுமில்லை... கார்த்திக்னு இன்னொரு பையனும் ஸ்பெயின் கிளப்புக்குத் தேர்வானான்... எங்களால ஒருத்தனைத்தான் அனுப்ப முடிஞ்சுச்சு...’’ என்று வருத்தமாகச் சொல்கிறார் ரவி.

57 வயதாகிறது ரவிக்கு. தினமும் காலையும் மாலையும் சிந்தாதிரிப்பேட்டை மே தினப்பூங்கா மைதானத்தில் அவரைப் பார்க்கலாம். அரைக்கால் சட்டையும் ஜெர்ஸியுமாக விசிலோடு வந்து இறங்கிவிடுவார். சிந்தாதிரிப்பேட்டை வட்டார குடிசைப்பகுதிகளில் வசிக்கும் 10 வயதுச் சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை எல்லோரும் அவரைச் சூழ்ந்துகொள்கிறார்கள். அடுத்த இரண்டு மணிநேரம் அனலாகிறது மேதினப் பூங்கா. அப்பா, கோச், மாஸ்டர் என்று எல்லோரும் கொண்டாடுகிறார்கள் ரவியை.

ரவி ஒரு தனியார் நிறுவன மேலாளராக இருக்கிறார். சிந்தாதிரிப்பேட்டை அரசுப் பள்ளியில் படித்தவர்தான். கால்பந்துமீது தீராக்காதல். கல்லூரிப்படிப்பை முடித்து விட்டு விம்கோ கிளப், ரிசர்வ் பேங்க், ஏசிஎஸ் டீம் எனப் பல அணிகளில் பங்கேற்று விளையாடியவர். எல்லாம் இருந்தும் ஒரு கட்டத்துக்கு மேல் பயணிக்க முடியவில்லை. தான் தொடமுடியாத உயரத்தைத் தன் அடுத்த தலைமுறை தொட வேண்டும் என்ற நோக்கத்தில் மேதினப் பூங்காவுக்கு வந்தவர், மூன்றாண்டுகளில் அந்தக் குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறார்.

உதைப்போம்... உயரம் தொடுவோம்!


``தியாகராயர் கல்லூரியில படிக்கும்போது ஃபுட்பால் விளையாடி சூப்பர் டிவிஷன் வரைக்கும் போனேன். அதுக்கப்புறம் வாய்ப்பு கிடைக்கலே. ஒரு கட்டத்துல வெறுத்துப்போச்சு. ஒரு தனியார் கம்பெனியில வேலை கிடைச்சு செட்டிலாகிட்டேன்.ஆனாலும் மனசுக்குள்ள ஒரு தகிப்பு. அப்போ மேதின மைதானத்துக்கு வருவேன். இங்கே விளையாடுற பிள்ளைகளோட திறமையையெல்லாம் பாக்குறப்போ ஆச்சர்யமா இருக்கும். ஆனா, அவங்களால இந்த மைதானத்தை விட்டு வெளியே போகவே முடியாது.

ஒரு பள்ளியில விளையாட்டு ஆசிரியரா இருக்கிற ரமேஷ் என்கூட இணைஞ்சார். ரெண்டு பேரும் ரெகுலரா இங்கு வர ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல பசங்க எங்களைப் பாத்து பயந்தாங்க. கிட்ட நெருங்கலே. கிண்டல் பண்ணினாங்க. படிப்படியா அவங்களுக்கு நம்பிக்கையை உருவாக்கி ஒருங்கிணைச்சுட்டோம். இப்போ 70 பேர் இங்கே பயிற்சிக்கு வர்றாங்க. பெண்களும் வர்றாங்க. பெரியவங்க பயிற்சி எடுத்துக்கிட்டிருக்கப்போ குட்டி குட்டிப் பசங்களெல்லாம் வந்து பந்தை உதைஞ்சு விளையாடுதுங்க... பாக்க சந்தோஷமா இருக்கு’’ என்கிறார் ரவி.

ராகுல்
ராகுல்

ரவியிடம் பயிற்சி பெற்ற முரளி செகண்ட் டிவிஷன் வரைக்கும் விளையாடியுள்ளார். எம்.எஸ்.டபிள்யூ படித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் ஹெச்.ஆராகப் பணியாற்றினார். இப்போது சொந்தமாக பிசினஸ் செய்கிறார்.

``ரவி சார் இந்த மைதானத்துக்கு வந்தபோது நாங்கதான் முதல் செட். சும்மா கிடைக்கிற பந்தை வச்சுக்கிட்டு செருப்புக்காலால உதைச்சு விளையாண்டுக்கிட்டிருப்போம். இவர்தான் எங்களுக்குப் பந்து, ஜெர்ஸி, பூட் எல்லாம் வாங்கித் தந்தார். ரவி சார்கிட்ட பயிற்சிக்கு வரணும்னா ஒரே கன்டிஷன், கண்டிப்பா பள்ளிக்கோ கல்லூரிக்கோ போகணும். போகலேன்னா சேத்துக்க மாட்டார். ரொம்ப நுட்பமா, பொறுமையா சொல்லிக்கொடுப்பார். எங்கெங்கெல்லாம் உதவி கிடைக்குமோ அங்கெல்லாம் போய் நின்னு எங்களுக்காக வாங்கிட்டு வந்து தருவார். செகண்ட் டிவிஷன் வரைக்கும் விளையாண்டேன். வாழ்க்கைச்சூழல்... அதுக்கப்புறம் போகமுடியலே. எங்களுக்கு வாய்க்காத வாய்ப்புகளை அடுத்த தலைமுறைக்காவது உருவாக்கித் தரணும்னு ரவி சாரோட சேர்ந்து செயல்பட ஆரம்பிச்சோம். பசங்களுக்குத் தேவையான கருவிகளை வாங்கித்தந்தோம். பள்ளி, கல்லூரிகள்ல இடம் வாங்கித்தந்து படிக்கவும் உதவிகள் செஞ்சோம். பசங்களுக்கு மட்டுமல்லாம அவங்க பெற்றோருக்கும் எங்க மேல நம்பிக்கை வந்துச்சு. இன்னைக்கு வெளிநாடுகளுக்குப் போய் விளையாடுற அளவுக்கு எங்க பசங்க வளர்ந்திருக்காங்க...’’ என்கிறார் முரளி.

உதைப்போம்... உயரம் தொடுவோம்!

ராஜூ, விவேகானந்தா கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். அவரும் ரவியிடம் பயிற்சி பெற்றவர்தான். செகண்ட் டிவிஷன் வரை விளையாடியவர்.

``இந்தப் பிள்ளைகள்கிட்ட மிகப்பெரும் திறமை ஒளிஞ்சிருக்கு. சரியான போக்குல அதை வெளிக்கொண்டுவந்தா இந்தியாவுக்கு நிறைய பிளேயர்ஸ் கிடைப்பாங்க. சென்னைக்குள்ள 50க்கும் மேற்பட்ட கால்பந்துக் குழுக்கள் இருக்கு. அவங்களுக்குள்ள ப்ரெண்ட்லியா மேட்ச் நடத்துவோம். இன்னும் உதவிகள் கிடைச்சா பசங்க பெரிய உயரங்களுக்குப் போவாங்க...’’ என்கிறார் ராஜூ.

சென்னையில் செயல்படும் சில தொண்டு நிறுவனங்கள், உலகெங்கும் உள்ள கால்பந்து கிளப்களுடன் இணைந்து செயல்படுகின்றன. தரமான வீரர்களை அடையாளம் கண்டு அந்நாடுகளுக்கே அழைத்துச் சென்று பயிற்சி அளித்து பிரதான அணிகளில் இணைத்து விளையாடச் செய்கின்றன. அப்படியொரு நிறுவனத்தின் பார்வையில் மேதினப்பூங்கா மைதான வீரர்கள் பட, ஸ்பெயின் வாய்ப்பு அமைந்தது.

உதைப்போம்... உயரம் தொடுவோம்!

``ஸ்பெயின் போக ராகுலும் கார்த்திக்கும் தேர்வானங்க. ராகுல் ஏற்கெனவே மொராக்கோ போக செலக்ட் ஆனான். அப்போ இருந்த பணப்பிரச்னையில அவனை அனுப்ப முடியலே. இந்தமுறை எப்படியும் அனுப்பிடணும்னு முயற்சி செஞ்சோம். சியர்ஸ் பவுண்டேஷன்ல இருந்து அவனோட விமானச் செலவை ஏத்துக்கிட்டாங்க. ஆனா, கார்த்திக்கை அனுப்ப முடியலே. மிகப்பெரிய வருத்தம் எங்களுக்கு. அடித்தட்டு வாழ்க்கைச்சூழல்ல இருந்து மேல வரத்துடிக்கிற கார்த்திக் மாதிரி பிள்ளைகளுக்கு அரசு உதவி செய்யணும். இந்தப்பிள்ளைகளோட பெற்றோர் அமைப்புசாராத் தொழில்கள்ல இருக்கவங்க. பிள்ளைகளோடு நேரம் செலவிடக்கூட அவங்களுக்கு நேரமிருக்காது. அந்தச்சூழல்ல இருந்து மேலெழுந்து வர்றது பெரிய விஷயம்...’’ என்கிறார் ரவி.

தமிழ்க்கால்கள் பாயக் காத்திருக்கின்றன உலகமெங்கும் உள்ள களங்கள். தேவை, தூக்கிவிட இன்னும் சில கரங்கள்தான்.