கட்டுரைகள்
Published:Updated:

எண்கள் சொல்வதைக் கேட்டால் ஜெயிக்கலாம்!

நேதன் லேமன், பிராட் பிட்
பிரீமியம் ஸ்டோரி
News
நேதன் லேமன், பிராட் பிட்

நெஞ்சம் மறப்பதில்லை-3

பிராட் பிட்டின் நடிப்பில் ‘MoneyBall' எனும் படம் வெளியாகிறது. பேஸ்பாலை மையப்படுத்திய படம். அமெரிக்காவின் மேஜர் லீகில் ஆக்லாந்து பேஸ்பால் அணி தொடர் தோல்விகளைச் சந்திக்கிறது. அணியை மறுகட்டமைப்பு செய்ய பொருளாதாரரீதியில் அதிக முதலீட்டைச் செய்ய அணியின் உரிமையாளர்கள் முன் வர மறுக்கிறார்கள். அணியின் முக்கியமான வீரர்கள் வெளியேறுகிறார்கள். இக்கட்டான சூழலில் தவித்து நிற்கிறது ஆக்லாந்து அணி. அந்த அணியின் ஜெனரல் மேனேஜராக பிராட் பிட். செலவழிக்க பணமும் இல்லை... ஸ்டார் பிளேயர்களும் வெளியேறுகிறார்கள்...எதிர்காலம் என்னவென்றே தெரியாத நிலையில் பிராட் பிட் மட்டும் அணியை எப்படியாவது வெற்றிப்பாதைக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறார்.

எண்கள் சொல்வதைக் கேட்டால்
ஜெயிக்கலாம்!

அணி உரிமையாளர், வீரர்கள் என யார் மீதும் நம்பிக்கை வைத்துக் களமிறங்க முடியாத சூழலில் பிராட் பிட் எண்களின் மீது நம்பிக்கை வைக்கிறார். பீட்டர் ப்ராண்ட் எனும் புள்ளியியலில் பட்டையைக் கிளப்பும் இளைஞரை தனக்கு அசிஸ்டென்ட்டாகக் கொண்டு வருகிறார். இனிதான் ஆட்டமே ஆரம்பிக்கிறது. வெறுமனே எண்களையும், புள்ளிவிவரங்களையும், பழைய ரெக்கார்டுகளையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வீரர்களைத் தேர்வு செய்து அணியைக் கட்டமைக்கிறார். இப்போது ஆக்லாந்து பேஸ்பால் அணி களமிறங்குகிறது. ஸ்டார் வீரர்கள் இல்லை. மற்ற அணிகளைப் போல பொருளாதார ஸ்திரத்தன்மை இல்லை. வெள்ளைக் காகிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்களையும் புள்ளி விவரங்களையும் மட்டுமே நம்பிக் களமிறங்குகிறது. அந்த அணியின் மீது பயங்கர விமர்சனங்கள். பேஸ்பாலைப் பற்றிய அடிப்படையே தெரியாத ஆளை அசிஸ்டென்ட் மேனேஜராகக் கொண்டு வந்து பிராட் அணியை இன்னும் அதலபாதாளத்தில் தள்ளுகிறார் எனக் கடும் விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால், களத்தில் அதற்கெல்லாம் மாறாக ஒரு மேஜிக் நடந்தது. ஆக்லாந்து அணி தொடர்ச்சியாக 20 போட்டிகளை வென்று நூற்றாண்டுச் சாதனையைப் படைக்கிறது. வெறுமனே புள்ளிவிவரங்களை மட்டுமே நம்பிக் களமிறங்கிய ஆக்லாந்து அணி, பொருளாதாரரீதியாக எட்டவே முடியாத தூரத்தில் இருந்த பல அணிகளையும் ஓடவிட்டது.

எண்கள் சொல்வதைக் கேட்டால்
ஜெயிக்கலாம்!

இது திரைப்படத்தின் சுவாரஸ்யத்திற்காக எழுதப்பட்ட கற்பனைக் கதை அல்ல. உண்மைக்கதை. 2002-ல் அமெரிக்காவின் மேஜர் லீகில் ஆக்லாந்து அணி இப்படியான ஒரு சம்பவத்தைச் செய்திருந்தது. அந்த அணியின் ஜெனரல் மேனேஜரான பில்லி பினீன் கதாபாத்திரத்தை பிராட் பிட் ஏற்று நடித்திருந்தார். ஆக்லாந்து அணியின் அந்த வெற்றி பேஸ்பாலைத் தாண்டி ஒட்டுமொத்த விளையாட்டுலகிலுமே ‘Performance Analyst'-களின் தேவையை உணர்த்தியது. பேஸ்பால் மட்டுமல்ல, அத்தனை விளையாட்டுகளிலும் இந்த ஆக்லாந்து அணியின் பாணி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதன் தாக்கத்தை அனைவருக்கும் புரியும் வகையில் கூற வேண்டுமெனில் இங்கிலாந்தை உதாரணமாக வைத்துப் பேசலாம். 2019 கிரிக்கெட் உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வென்றிருந்தது. அதற்கு முன்பாக 2015 உலகக்கோப்பையில் அந்த அணி ரொம்பவே மோசமாகத் தோற்றிருந்தது. இங்கிலாந்து அணிக்கு கிரிக்கெட் ஆடவே தெரியவில்லை என ஏகப்பட்ட விமர்சனங்கள் அந்த அணிமீது. அந்தச் சமயத்தில்தான் இங்கிலாந்து அணிக்கு மோர்கன் கேப்டன் ஆனார். இங்கிலாந்து அணி வேறொரு பரிணாமத்துக்கு மாறத் தொடங்கியது. அதுவரை உலக கிரிக்கெட் பார்த்திடாத ஆக்ரோஷத்தை வெளிக்காட்டினார் அவர். தொடர் வெற்றிகள் கிடைக்கத் தொடங்கின. முதல்முறையாக உலகக்கோப்பையையும் வென்றார்கள்.

எண்கள் சொல்வதைக் கேட்டால்
ஜெயிக்கலாம்!

இங்கிலாந்தின் விஸ்வரூபத்திற்குக் காரணமாக இருந்தவர் யாரென மோர்கனிடம் கேட்டால், அவர் நேதன் லேமன் என்பவரைக் கைகாட்டுவார். லேமன் இங்கிலாந்து அணியின் Performance Analyst. அவரின் தரவுகள் வழி அவர் வகுத்துக்கொடுத்த திட்டங்களின்படி இங்கிலாந்து அணி தங்களின் உலகக்கோப்பைக் கனவையே எட்டியது. மோர்கன் தன்னுடைய வீரர்களை விட இவரை அதிகமாக நம்பினார். ஐ.பி.எல்-லில் கொல்கத்தா அணிக்கு கேப்டனான சமயத்தில் கையோடு நேதன் லேமனையும் கொல்கத்தா அணிக்கு அழைத்து வந்தார் மோர்கன். 2021-ல் முதல் பாதியில் படுமோசமாகத் தோற்ற கொல்கத்தா அணி, இரண்டாம் பாதியில் அப்படியே தலைகீழாக முரட்டுத்தனமாக பெர்பாம் செய்து இறுதிப்போட்டி வரை முன்னேறியது. சில சமயங்களில் கொல்கத்தா அணி ஆடும் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே பெவிலியனில் இருந்து கோடு நம்பர்கள் பகிரப்படுவதைப் பார்த்திருப்பீர்கள். பழைய புள்ளிவிவரங்களைத் தாண்டி நேரடியாக அந்த நொடியில் ஆட்டத்தில் நடக்கும் மாற்றங்களை வைத்துப் புது வியூகங்களை வகுத்து அதைக் களத்தில் நிற்கும் மோர்கனுக்கு விளக்கவே இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதை இங்கிலாந்து அணியிலும் மோர்கன் - லேமன் கூட்டணி செய்தது. கொல்கத்தா அணியிலும் செய்தது. இந்த பாணியை இப்போது பல அணிகளும் கடைப்பிடிப்பதைப் பார்க்க முடியும். இதற்கெல்லாம் காரணம் அந்த ஆக்லாந்து அணியும் அந்த பேஸ்பால் லீகும்தான்.

எண்களின் அடிப்படையில் ரெக்கார்டு களின் அடிப்படையில் வீரர்களைக் கையாளுவதால் இங்கே எந்த எமோஷனுக்கும் வேலையில்லை. நாளிதழ்களில் வெளியாகும் ‘Sudoku’-வைப் போன்றதுதான் இவர்களின் முறை. புதிரான எண்களையோ வார்த்தைகளையோ க்ளியர் செய்யும் வரை நாம் பலவற்றை முயற்சி செய்வோம் இல்லையா? அதே போன்றுதான் நாம் முதலில் முயலும்போது தோல்வியும் ஏமாற்றமும்தான் ஏற்படும். எண்களையும் வார்த்தைகளையும் மாற்றி மாற்றிப் போட்டு விளையாடும் போது ஒரு கட்டத்தில் நமக்கான விடை கிடைக்கும். அதுதான், ஆக்லாந்துக்கு நடந்தது. இங்கிலாந்துக்கு நடந்தது. கொல்கத்தாவுக்கும் நடந்தது. தங்களுக்கான ரிசல்ட் கிடைக்கும் வரை சீட்டுக்கட்டைக் கலைத்துப் போடுவதைப் போல வீரர்களைக் கலைத்துப் போட்டு பல permutation combination-களை முயற்சி செய்து பார்ப்பார்கள். ஒரு வீரர் அணிக்குப் பயன்படுவாராயின் அவரை வைத்திருப்பார்கள். இல்லையேல், எண்களைத் தூக்கி முகத்துக்கு நேராகக் காண்பித்து வெளியேற்றிவிடுவார்கள். அணிக்குத் தேவையான ரிசல்ட்டைக் கொடுக்காத வீரர் அணிக்கு எதற்கு? எண்கள் அவருக்கு சாதகமாக இல்லை. இந்த விஷயமுமே Money Ball படத்தில் அற்புதமாக விவரிக்கப்பட்டிருக்கும். ஒரு வீரர் நமக்குத் தேவையில்லை என்றால் அவரிடம் நேருக்கு நேர் சென்று ஒரே வரியில் சொல்லி முடித்துவிடுங்கள். அவர்கள் professional-ஆக எடுத்துக்கொள்வார்கள். அதை விட்டுவிட்டு தேவையில்லாத வீரரை அணியில் வைத்து மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் திணறினால் நாம் எதிர்பார்க்கும் ரிசல்ட்டை ஒருபோதும் அடைய முடியாது என சில காட்சிகளில் விவரித்திருப்பார்கள்.

இப்படி அனலிஸ்ட்கள்மீது அதிக நம்பிக்கை வைப்பதைப் பலரும் விரும்புவதில்லை. ஒரு அனலிஸ்ட்டின் கைப்பாவையாக கேப்டன் இருக்கக்கூடாது என விமர்சனமும் எழுவதுண்டு. ஆனால், கடைசியில் வெற்றிதானே முக்கியம்!