Published:Updated:

திக் ஊதா, லைட் ஊதா, கடல் ஊதா... 90'S கிட்ஸின் அட்ராசிட்டிகளும் விளையாட்டுகளும்! ஒரு ரீவைண்ட்

Kids Playing
News
Kids Playing

பாண்டி, ரூபிக் க்யூப், கொல கொலயா முந்திரிக்கா, ஒரு குடம் தண்ணீ எடுத்து ஒரு பூ பூத்துச்சு, ஜனவரி, பிப்ரவரி என 90'ஸ் கிட்ஸின் விளையாட்டுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

வீட்டுக்குள்ளயே இருந்து போர் அடிக்குது, ஏதாவது விளையாடலாமா என்று கேள்வியோடு ஆரம்பித்து, பல குழப்பங்களுக்குப் பிறகு ராஜா - ராணி விளையாடலாம் என்று ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது. ராஜா - ராணியா... இது 90'ஸ் கிட்ஸோட ஃபேவரைட் விளையாட்டாச்சே எனக் கபாலத்தில் அலாரம் அடிக்க, அடுத்த சில நிமிடங்களில் சாட் - பூட் - த்ரீ, புக் கிரிக்கெட், பாண்டி, திருடன் போலீஸ் என சிறுவயதில் மல்லுக்கட்டிய அனைத்து விளையாட்டுகளும் கண் முன்னே படமாக விரிந்தன. `நாங்களெல்லாம் அந்தக் காலத்துல...' என உங்களின் மூளையில் கொசுவத்தி சுற்ற ஆரம்பிக்கும்முன், ஒரு ஜாலியான ரீவைண்டு பண்ணிரலாமா...

கிட்டி
கிட்டி

`ஃப்ரெண்ட்ஸ்' படம் பார்த்து முழுசா விஜய் ஃபேனாக மாறியிருந்த நேரம். நடிகர்களின் பெயர் சேர்க்கும் விளையாட்டு விளையாடலாமா? என எங்கள் தெருவில் வசிக்கும் கான்வென்ட்டில் படிக்கும் ஃப்ரெண்டு கேட்க, ``அதுக்கென்ன விளையாடிட்டா போச்சு. ஆனா, நான் விஜய்னுதான் எழுதுவேன்" என்ற ரூல்ஸோட விளையாட சம்மதிச்சேன். அவ அஜித்தின் பெயரை ஆங்கிலத்தில் எழுத, விஜய் பெயரை ஆங்கிலத்தில் எப்படி எழுதணும்னு தெரியாமல் பல்பு வாங்குனதெல்லாம் வேற லெவல் அசிங்கம். ஆனாலும், பேனா சரியா எழுதலைனு சொல்லி அடித்தல் திருத்தங்களுடன் எனக்குக் கொடுத்த மூன்று சீட்டிலும் விஜய்னு எழுதிக்கொடுத்து சமாளிச்சேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விளையாடப் போவது பையன் என்றால் நடிகைகள் பெயரையும், பொண்ணு என்றால் நடிகர்கள் பெயரும் எழுத வேண்டும் என்பது எழுதப்படாத விதி. விஜயகாந்த், ரஜினி, கமல், சிம்ரன் என ஆளுக்கு ஒரு பெயரை மூன்று மூன்று சீட்டுகளில் எழுதினோம். வட்டமாக உட்கார்ந்து சீட்டை குலுக்கிப்போட்டு, ஒவ்வொருவரும் மூன்று சீட்டுகளை எடுத்துக்கொண்டோம். ஆர்வத்துடன் சீட்டை பிரித்துப்பார்த்த எனக்கு, விஜய் பெயர் எழுதிய ஒரு சீட்டுகூட கிடைக்காததால் அழுகை முட்டிக்கொண்டு வந்துச்சு. ஒவ்வொரு முறையும் தன்னிடம் உள்ள ஒரு சீட்டை தன் அருகில் இருப்பவருக்கு மாற்றி விட வேண்டும். மூன்று சீட்டிலும் ஒரே நடிகர் பெயரை முதலில் சேர்த்தவர்கள்தான் இந்த கேமின் வின்னர். அப்படி பல முறை சீட்டை மாற்றியதில் நான் எதிர்பார்த்த அந்த சீட்டு கடைசி வரை என்னிடம் வரவேயில்லை. ஆனாலும் விளையாட்டின் வின்னர் நான்தான் என்பதைக் கொஞ்சம் பெருமையோடு சொலிக்கொள்ளலாம்.

கப்பு முக்கியம் பிகிலு.

கணக்கு வகுப்பு என்றாலே நான் டரியலாகிவிடுவேன். குனியவைத்து குமுறாத நாள்களே இல்லை. எப்போதும் வாய்ப்பாடு சொல்லச்சொல்லி அடிக்கும் செல்வராணி டீச்சர். அன்று வகுப்புக்குள் நுழைந்ததுமே மர ஸ்கேலைச் சுழற்றியதுக்கு ஒரு விளையாட்டும் அதன் பின்னணியும் காரணம். குட்டி ஸ்டோரி கேட்ட உங்களுக்கு, இப்போ ஒரு குட்டி ஃப்ளாஷ் பேக் சொல்லப்போறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வகுப்பறைக்கு டீச்சர் வராதபோது முக்கியமான பொழுதுபோக்கே `ராஜா - ராணி' விளையாட்டு விளையாடுவதுதான். ராஜா, ராணி, மந்திரி, திருடன், போலீஸ்னு எழுதப்பட்ட சீட்டுகளைக் குலுக்கிப்போடுவார்கள். ஒவ்வொரு சீட்டிலும் 1000, 500 என பதவிக்குத் தக்க பாயின்டுகள் இருக்கும். போலீஸ் சீட்டு எடுத்தவர் திருடன் யார் எனக் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி சரியா கண்டுபிடிக்கலைனா, திருடனின் பூஜ்ய மதிப்பெண் போலீஸுக்கும், போலீஸின் 100 மதிப்பெண் திருடனுக்கும் குறித்துக்கொள்வார்கள். பல ஆட்டங்களுக்குப் பின்னர், யார் அதிக மதிப்பெண் எடுத்திருக்கிறார்களோ அவர்கள்தான் வின்னர். இதை ஒருநாள் கணக்கு வகுப்புக்கு டீச்சர் வரவில்லை என்ற ஜாலி மூடில் விளையாடிக்கொண்டிருந்தோம்.

எதிர்பாராத நேரத்தில் என்ட்ரி கொடுத்த டீச்சரைப் பார்த்ததும் எல்லோரும் அவரவரின் சீட்டை நோட்டுக்குள் மறைத்துக்கொண்டார்கள். நானும் அதைத்தான் செய்தேன். வழக்கம்போல வீட்டுப்பாடம் செக் பண்ண கூப்பிட்டார். தோழிகளைப் பார்த்து காப்பி அடித்திருந்ததைப் பவ்வியமாக நீட்டினேன். நோட்டைப் பார்த்ததும் டீச்சருக்கு கண் சிவந்து, கன்னங்கள் துடிச்சுது. அப்போதான், வீட்டுப் பாடம் எழுதியிருந்த பக்கத்தில்தான் `ராஜா - ராணி' விளையாட்டின் பாயின்ட்ஸை குறித்து வைத்திருந்ததை கவனித்தேன். அப்புறம் என்ன, வழக்கம் போல் எண்ணெய்ச் சட்டி கொதிப்பதையும், பரோட்டாவைக் கொத்துவதையும் இமேஜின் பண்ணிக்கோங்க.

பி கேர்ஃபுல்... நான் என்ன சொன்னேன்...

ரெட், ஆரெஞ்சு, யெல்லோனு 2k கிட்ஸ்களுக்கு நிறங்களை ஆன்லைனில் ஒரு கார்ட்டூன் கேரக்டர் சொல்லிக்கொடுத்துட்டு இருக்கு. 90'ஸ் கிட்ஸ் அப்படியில்ல. ஆன்லைன் வசதி இல்லாத போதும் கெத்து காட்டினோம். சனிக்கிழமை ஸ்கூல் இருந்தா கலர் டிரஸ் போட்டுட்டு வரச் சொல்லுவாங்க. அதுக்காகவே தீபாவளி, பிறந்த நாள் எப்போ வரும்னு நாள்களை எண்ணிட்டு இருப்போம். சக்திமான் டிரஸ்ஸிலிருந்து, சின்ட்ரெல்லா டிரஸ் வரை பகலிலேயே கலர் கலர் கனவுகண்டு, எங்க அப்பா அந்த டிரஸ் வாங்கப் போயிருக்காங்க, இந்த டிரஸ் வாங்கப்போயிருக்காங்கன்னு ஏக்கர் கணக்கில் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட ரீல் சுத்தி, கடைசியில அப்பா வாங்கிட்டு வந்த பூப்போட்ட பாவாடையையும், பெல்ட் செலவைக் குறைக்க, பெல்ட் அட்டாச் ஆன சட்டையையும், பேன்டையும் போட்டு அலப்பறையைக் கூட்டினதும் உண்டு. அப்படியான சனிக்கிழமைகளில் இருந்துதான் வள்ளி போட்டிருப்பது சிவப்பு நிற கவுன், லாவண்யா போட்டிருப்பது ஆரஞ்சு பாவாடைனு ஏதோ சில நிறங்களை பிராக்டிக்கலா கத்துக்கிட்டோம். அட, ஸ்கெட்ச் பாக்கெட்டில் இருக்கும் ரேடியம் க்ரீன் கலர், 90'ஸ் கிட்ஸைப் பொறுத்தவரை இப்போதும் தங்க நிறம்தான். ஸ்கை புளூ, இன்க் புளூனு சொன்னது கிடையாது. திக் ஊதா, லைட் ஊதா, கடல் ஊதானுதான் சொல்லுவோம். அதுதான் 90'ஸ் கிட்ஸ்ஸின் வரையறுக்கப்படாத டிசைன். நாங்க எந்த ஆன்லைனும் இல்லாமல் நிறத்தைக் கத்துக்கிட்டதுக்கும் ஒரு விளையாட்டும் கைகொடுத்துச்சு. உடனே மூளையை ரொம்ப கசக்கி என்னவா இருக்கும்னு ஐன்ஸ்டீன் அளவு யோசிக்க வேணாம். ஸ்க்ரீனை ஸ்க்ரோல் பண்ணுங்க போதும்.

அட ஆமாங்க. `டிக், டிக் யாரது திருடன்' விளையாட்டேதான். எத்தனை பேர் வேண்டுமானாலும் இந்த விளையாட்டை விளையாடலாம் ஒருவர் மட்டும் தனி அணி, மற்றவர்கள் எல்லோரும் ஒரு அணி.

டிக், டிக், யாரது?

திருடன்.

என்ன வேணும்?

நகை வேணும்.

என்ன நகை?

கலர் நகை.

என்ன கலர்" என்ற கேள்விக்கு திருடனாக இருப்பவர் சொல்லும் கலருக்கு, எல்லாரும் ஓடிப்போயி அந்த நிறத்தைத் தொட வேண்டும். யார் கடைசியாகத் தொடுகிறாரோ, அடுத்த ஆட்டத்தில் அவர்தான் திருடன். நாங்கள் விளையாடும்போது திருடனாக இருந்த கார்த்தி, சிகப்பு நிறமென்று சொன்னதும், உற்சாக மிகுதியில் தீபிகாவின் பாவாடையைத் தொட, எல்லோரும் ஒரே நேரத்தில் ஓடி அவளை சாக்கடையில் தள்ளிவிட்ட வரலாறும் உண்டு.

எதையும் பிளான் பண்ணாம பண்ணா இப்படித்தான்.

90'ஸ் கிட்ஸ் நிறைய பேர் வேலையில்லாப் பட்டதாரியாக இருந்தாலும், அந்தக் காலத்துலயே பிசினஸ்மேனாக இருந்தவங்க. சின்ன வயசிலேயே ஹோட்டல், ஸ்கூல், ஹாஸ்பிட்டல் எல்லாம் கட்டுனவங்க. `உன் இடத்துக்கு வந்துட்டேன், ஆனா கொடுக்க காசு இல்லைனு சொல்ற எதிராளிக்குக்கூட, சரி பரவாயில்ல. அடுத்த முறை தாயம் போட்டா, நான் உன் ஊருக்கு வருவேன். அப்போ கழிச்சுக்கிறேன்'னு சொன்ன பிசினஸ் மேன்கள் இங்க ஏராளம். இலந்தை வடகம் பாக்கெட்டுக்கு அடித்துக்கொண்டிருந்த சகோதர்களை மாநிலங்களுக்காக சண்டை போட வைத்த பெருமை `பிசினஸ் கேம்'-க்கு உண்டு. 64 ஊர்கள், ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு நிறம், உருட்டிய தாயக்கட்டையில் இருக்கும் எண்ணுக்கு ஏற்ப வழிகாட்டுதல், டம்மி பணம் என 90'ஸ் கிட்ஸ்களில் பெரும்பாலனோருக்கு ஃபேவரைட் கேம் இந்த பிசினஸ் விளையாட்டு.

அஞ்சு ரூபாய் ஜெம்ஸ் மிட்டாய்க்கு, காலையிலேருந்து அம்மா பின்னாடியே திரிந்து, சொல்ற வேலையெல்லாம் செய்யுற என்னை, தாயக்கட்டையை உருட்டி அஞ்சு போட்டா, ஆந்திராவை வாங்கிரலாம்னு சில பேப்பர் நோட்டுகளைக் கொடுத்து, ராஜ தந்திரமான அந்த விளையாட்டை கத்துக்கொடுத்தது அடுத்த வீட்டு ஆனந்தி அக்கா. ஓரே பாட்டில் அல்ல, ஒரே விளையாட்டில் மில்லியனரான 90'ஸ் கிட்ஸ்கள் இங்கு ஏராளம்.

நாங்கல்லாம் சுனாமியிலேயே ஸ்விம்மிங் போட்டவங்க...

எங்கள் ஊரில் திருவிழா நேரம், மூலைக்கு ஒரு பலூன்காரர் நிற்க, என் பள்ளித்தோழி ஒருத்தி, ``வாட்டர் ஃபுல் ரிங் டோஸ்' என்ற அந்த விளையாட்டுப் பொருளை வாங்கி வந்தாள். ப்பீ ப்பீ வாங்கச் சென்ற என் மனதுக்குள் அது என்னவென்று தெரியாதபோதும் அதை வாங்கும் ஆசை வந்துருச்சு. அஞ்சு நாளைக்கு தின்பண்டம் வாங்க காசு கேட்க மாட்டேன்னு சொல்லி அழுது புரண்டு அந்த விளையாட்டுப் பொருளை வாங்கிவந்தேன். ஒரு ஸ்கிரீன். அதுக்குள்ளே தண்ணீரும் சில வளையங்களும் மிதக்கும். வளையங்களை ஒன்றுசேர்க்க இரண்டு குச்சிகள் இருக்கும். ஸ்கிரீனுக்குக் கீழே இருக்கும் பட்டன்களை அழுத்தி, வளையத்தை குச்சியில் சேர்க்க வேண்டும். இதுதான் அந்த கேம். பல முறை முயற்சிக்குப் பின் ஒரு முறை எல்லா வளையங்களையும் ஒன்றாகச் சேர்த்தேன். ஆனால், 25 வருடங்கள் கழித்து, தி.நகரில் 25 ரூபாய் கொடுத்து புதிதாக அதேபோன்று வாங்கினேன் இன்னொரு `வாட்டர் ஃபுல் ரிங் டோஸ்'.

வாட்டர் ஃபுல் ரிங் டோஸ்'
வாட்டர் ஃபுல் ரிங் டோஸ்'

பாண்டி, ரூபிக் க்யூப், கொல கொலயா முந்திரிக்கா, ஒரு குடம் தண்ணீ எடுத்து ஒரு பூ பூத்துச்சு, ஜனவரி, பிப்ரவரி என 90'ஸ் கிட்ஸின் விளையாட்டுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், ஹாலிடேவில் உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும் என்பதால், நாஸ்டாலஜிக்கல் மழையில் இருந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி, நீங்கள் விளையாடிய விளையாட்டின் சில பெயர்களை இங்கே பதிவிடுங்கள். உங்கள் அனுபவத்தை நாங்களும் ரசிக்கிறோம்.