மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் வணிகவியல் துறை மாணவியான சே.பிரியதர்ஷினி, யோகாவில் ஆசிய அளவில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடற்கன்னி வடிவில் அமர்ந்து செய்யப்படும் ஏக பாத ராஜகபோதாசனம் என்னும் யோகாசன நிலையில் தொடர்ந்து 60 நிமிடங்கள் இருந்ததன் மூலம் அவர், ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

ஏக பாத ராஜகபோதாசனம் என்கிற இந்த ஆசன நிலையில், கடந்த ஆகஸ்ட் 15, 2021-ம் ஆண்டு, நந்தினி சார்தா 51 நிமிடங்கள் 58 வினாடிகள் கால அளவில் அமர்ந்து நிகழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதைத் தொடர்ந்து, மாணவி பிரியதர்ஷினி முழுமையாக 60 நிமிடங்கள் அந்த ஆசன நிலையில் அமர்ந்து நீடித்ததன் மூலம் இப்புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மார்ச் 8 மகளிர் தினத்தையொட்டி, மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் இந்தச் சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆய்வு நிலையத்தின் வேந்தரான ஏ.என்.ராதாகிருஷ்ணன், கல்லூரித் தலைவரான ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணைவேந்தர் முனைவர் ஆர்.எஸ்.நீலகண்டன், பதிவாளர் முனைவர் சி. கிருத்திகா, மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வி.சாந்தி ஆகியோருடன், ‘இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ அமைப்பின் தீர்ப்பு நடுவர் முன்னிலையில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது.
‘யோகரத்னா’ சரஸ்வதி அவர்களிடம் மூன்றாண்டுகளாக சிரத்தையுடன் யோகா பயின்றுவந்தவர் பிரியதர்ஷினி. தன் ஆசிரியரைப் போல, அவரும் ‘யோகரத்னா’ பட்டம்பெற்றவர். தற்போது, மீனாட்சி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வணிகவியல் பயின்று வரும் அவர் படிப்பிலும் சிறந்த மாணவியாகத் திகழ்ந்து வருகிறார்.

கல்லூரி முதல்வர் முனைவர் சாந்தி, துறைத் தலைவர் முனைவர் மலர்விழி ஆகியோர் அளித்த ஊக்கமும் மெகர் (MAHER) பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கிய நன்கொடை மற்றும் அனைத்து வகை உதவிகளும் உற்சாகமுமே இந்தச் சாதனையை நிகழ்த்தக் காரணமாக அமைந்தது என்று கூறும் பிரியதர்ஷினி, இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த கல்லூரி நிர்வாகத்திற்குத் தன் நன்றியைத் தெரிவித்தார். யோகா ஆசிரியர் சாஸ்வதி, தன் தந்தை சேகர், தாய் அனிதா ஆகியோர் இச்சாதனையை நிகழ்த்துவதற்குத் தூண்டுகோலாக இருந்தனர் என்றும் சொல்கிறார் பிரியதர்ஷினி.