Published:Updated:

மின்னலின் மகன் ஓய்வு... நன்றி உசேன் போல்ட்! #ThankYouBolt

மின்னலின் மகன் ஓய்வு... நன்றி உசேன் போல்ட்!  #ThankYouBolt
மின்னலின் மகன் ஓய்வு... நன்றி உசேன் போல்ட்! #ThankYouBolt

மின்னலின் மகன் ஓய்வு... நன்றி உசேன் போல்ட்! #ThankYouBolt

ஆகஸ்ட் 5, 2012. 50-ம் ஆண்டு சுதந்திர தின விழாவுக்காக தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறது ஜமைக்கா. உலகை ஆண்ட இங்கிலாந்திடமிருந்து 6-8-1962-ம் ஆண்டில் சுதந்திரம் அடைகிறது அந்தக் குட்டிக் கரீபியத் தீவு. வெறுமனே பள்ளிகளிலும் அரசு அலுவலகங்களிலும் மட்டும் கொடியேற்றினால் சுதந்திரத்துக்கு அர்த்தம் சேர்ந்துவிடுமா? தன் நாட்டு மக்களுக்கு சுதந்திர தினப் பரிசை வேறுவிதமாகக் கொடுக்க விரும்பினான் போல்ட். லண்டன், 30-வது ஒலிம்பிக் போட்டித் தொடர். தான் முன்பு பதக்கம் வென்றிருந்த 100 மீட்டர் ஓட்டத்தில் மீண்டும் ஒலிம்பிக் சாதனையோடு தங்கம் வெல்கிறான் போல்ட். தங்களை ஆண்ட ஆங்கிலேயர்களின் தலைநகரில், ஆங்கிலேய மக்களின் முன்னிலையில் ஜமைக்கா நாட்டின் கொடி ஏற்றப்பட்டு, அந்த நாட்டின் தேசியகீதமும் பாடத் தொடங்குகிறது ஜமைக்காவின் 50-வது சுதந்திர தினம். அதைவிடவும் ஒரு பரிசை ஒரு குடிமகனால் தன் நாட்டுக்குக் கொடுத்துவிட முடியுமா? கொடுத்தான் போல்ட்... உசேன் போல்ட். மனித உருவம் கொண்டு பிறந்த மின்னலின் மகன்!

தடகளத்தைப் பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தவர்களை, அதை ரசிக்கவைத்த பெருமை போல்டுக்கே சேரும்.  எட்டு ஒலிம்பிக் பதக்கங்கள், 11 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்கள் என, சுமார் 10 ஆண்டுகாலம் களத்தைக் கட்டியாண்ட இந்தச் சூறாவளி, இப்போது தென்றலாகக் கரை ஒதுங்கிவிட்டது. பெரும் எதிர்பார்ப்புகளிடையே அதே லண்டன் மண்ணில் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற போல்டுக்கு, இது சற்று கடினமான முடிவாகவே அமைந்துவிட்டது. லண்டனில் அவர் இடறி விழுந்தபோது, புவியின் அனைத்து கரங்களும் அவருக்காக நீண்டன. ஒவ்வொரு விழியிலும் அதிர்ச்சி. ஒவ்வோர் இதயமும் ஒரு நொடி ஓய்வெடுத்து அழுதிருக்கும். ஒவ்வொரு ரசிகனும் தோல்வியின் ரசத்தைப் பருகியிருப்பான். இதோ இரு சகாப்தம் முடிந்துவிட்டது. இந்தச் சறுக்கலுக்குப் பின்னால், தான் படைத்திருந்த சாதனைகளையும் துரத்திவிட்டு, இந்த 10 ஆண்டுகள் தான் சம்பாதித்த கோடானுகோடி ரசிகர்களின் கரகோஷத்தை, அன்பை அணிந்துகொண்டு விடைபெற்றிருக்கிறார் இந்த ஜாம்பவான்.

`டைம் இஸ் கோல்டு' - இந்தப் பழமொழியை விளக்கி, அதற்குத் தகுந்த கதையை உதாரணமாகக்கொண்டு ஒரு பத்திக்கு எழுத வேண்டும். 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட 5 மதிப்பெண்ணுடைய `புராவெர்ப் எக்ஸ்பான்ஷன்’ கேள்வி. யாரைப் பற்றி எழுதுவது? நேரம்… தங்கம்… போல்டின் பெயர்தான் ஆப்ளங்கேட்டாவில் ஸ்டிரைக் ஆனது. வெறும் 10 நொடி. நம் ஆண்டிராய்டு போனை ஆன் செய்யும் நேரம். ஆனால், அதே நேரத்தில் மொத்த உலகையும் உரையவைத்து, கண்ணிமைக்காமல் அமரவைத்து அந்த 10 நொடியில் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இந்த அசுரனைத் தவிர நேரத்தின் அருமையை நன்கு உணர்ந்தவர் இருந்திட முடியுமா? பீஜிங், லண்டன், ரியோ என ஒவ்வொரு நகரமும் வெவ்வேறு டைம் ஜோனில் உள்ளவை. ஆனால், ஒவ்வொரு முறையும் மொத்த உலகையும் அந்த 10 நொடிகள் கண்ணுறங்காமல் விழிக்கவைத்திருந்தான். கால்பந்து, கிரிக்கெட் மட்டும் டென்னிஸுக்காக மட்டுமே விழித்திருந்த உலகம், தடகளத்துக்காக விழித்திருந்தது – இவன் பெயர் சொல்வதற்காக.

தனது 15-வது வயதில் போல்டின் உயரம் என்ன தெரியுமா? 1.96 மீட்டர். அந்த உயரம் அவருக்குப் பக்கபலமாக இருந்தாலும், தன் உழைப்பாலும் முயற்சியாலும்தான் தன் வரலாற்றைச் செதுக்கினான் போல்ட். சமீபத்தில் வெளியான போல்டின் ‘ரன்னிங் அனாலிசிஸ்’ வீடியோ ஒன்று யூடியூபில் ஹிட் அடித்தது. ரியாக்‌ஷன் டைம், ஹெட் ஸ்டார்ட், பாடி பொசிஷனிங் என ஒவ்வொரு டாபிக்கிலும் ஒவ்வொரு தருணத்திலும் போல்ட் மிஸ்டர் பெர்ஃபெக்ட். அந்த பெர்ஃபெக்‌ஷன்தான் போல்டின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம். அடுத்த தலைமுறைக்கு தான் விட்டுச்செல்வதாக போல்ட் கூறியவை வெற்றிகளோ சாதனைகளோ கிடையாது.  ``கடின முயற்சி செய்தால் எதுவும் சாத்தியம் என்னும் நம்பிக்கையையே இளைஞர்களுக்கு நான் விட்டுச்செல்ல விரும்புகிறேன்” என்றார் போல்ட்.

100 மீட்டர், 200 மீட்டர், 4X100 ரிலே என, ஒலிம்பிக்கில் தான் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் க்ளீன் ஸ்வீப் அடித்து உலகை வசப்படுத்திய போல்ட்,  2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் தொடர் ஓட்டத்தில் வென்ற தங்கப் பதக்கத்தை தன் சகவீரரின் தவறால் இழக்க நேரிட்டது. ஆனால், அவர் என்றுமே பதக்கத்தைப் பற்றியும் சாதனைகளைப் பற்றியும் கவலைப்பட்டதில்லை. அப்படி அவற்றையெல்லாம் அவர் பெரிதாக எடுத்திருந்தால் பீஜிங் ஒலிம்பிக்கில் 100 மீட்டரில் யாராலும் அசைக்க முடியாத ஒரு சாதனையை அவர் படைத்திருப்பார். அது பல ஆண்டுகள் முறியடிக்க முடியாத சாதனையாக அமைந்திருக்கும்.

ஆம். அந்த ஓட்டத்தில் போல்ட் காட்டியது அசுர வேகம். 60 மீட்டர் தூரம் கடந்த நிலையிலேயே, மற்ற போட்டியாளர்களைவிட 2-3 அடி முன்னே இருந்தார் போல்ட். 100 மீட்டர் பந்தயத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் பார்ப்பது மிகவும் அரிது. எல்லைக்கோட்டைத் தொடத்தொட தன்னை யாராலும் இனி முந்த முடியாது என்பதை அறிந்துகொண்டு சற்றே தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டார். அவர் தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டு ஜாகிங் செய்வதுபோல் ஃபினிஷிங் செய்ததெல்லாம் தெளிவாகக் கண்களுக்குத் தெரிந்தது. அப்படியிருந்தும் உலக சாதனையோடு வென்றார் போல்ட். வெறும் 9.69 விநாடியில் 100 மீட்டர் தூரத்தைக் கடந்து சாதனை புரிந்தார் அந்த மனிதர்.

சும்மா இருப்பார்களா நம் அறிவியலாளர்கள்! போல்டின் அந்த ஓட்டத்தை ‘Top to bottom’ அலசினார்கள். அந்த ஆய்வை நடத்திய ஓஸ்லோ பல்கலைக்கழகத்தினரின் முடிவு பிரமிப்பாகத்தான் இருந்தது. போல்ட் மட்டும் அந்தப் பந்தயம் முழுவதையும் அதே சீரான வேகத்தில் ஓடியிருந்தால், 9.51 முதல் 9.59 விநாடிக்குள் பந்தயத்தை நிறைவு செய்திருப்பாராம். அப்படி மட்டும் அவர் 9.51-க்கு அருகில் முடித்திருந்தால், அது ஒரு சரித்திர சாதனையாக அமைந்திருக்கும். காரணம், அந்த நேரத்தை போல்டால்கூட மீண்டும் நெருங்கியிருக்க முடியாது; நெருங்கவும் முடியவில்லை. ஆம், இப்போது உலக சாதனையை தன் கைவசம் வைத்திருக்கும் போல்டின் சிறந்த செயல்பாடு, 9.58 விநாடிதான். அதே இடத்தில் நாம் இருந்திருந்தால், `வட போச்சே!' என்று ஃபீல் பண்ணியிருப்போம். ஆனால், போல்ட் ஒரு நொடிகூட கவலைப்படவில்லை.

அவர் என்றுமே தேடிய இரண்டு விஷயங்கள், வெற்றியும் அதனால் கிடைக்கும் அன்பும். அந்த வெற்றிகளை அவர் கொண்டாடிய விதம்கூட ஹிட்தான். இன்று நம்ம ஊர் ஸ்கூல் பிள்ளைகள் போட்டியில் வெற்றிபெற்றால், உடனே இரண்டு கைகளையும் மேலே தூக்கி, முதுகை வளைத்து, அன்னார்ந்து பார்த்து போல்ட் மாதிரிதான் போஸ் கொடுப்பார்கள். அந்த 100 மீட்டர் வெற்றியின்போது தன் கைகளை மார்பில் தட்டிக் கொண்டாடியதற்குப் பலரும் போல்டை விமர்சித்தார்கள். ஆனால், அவர் வெற்றியைத் தன் தலைக்கு ஏற்றிக்கொண்டவர் அல்ல. தன் ஒவ்வொரு வெற்றியிலும், தன் ஒவ்வொரு செயலிலும் அவர் செய்ய நினைப்பது, தன் பெயரை உரைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ரசிகனையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதே. அந்த சீன மண்ணில் அவர் கொண்டாடியவிதம் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்த அதே வேளையில்தான், இரண்டு மாதங்கள் முன்பு சிச்சுவான் பூகம்பத்தில் பலியான சீன மக்களுக்காகத் தான் வென்ற 50,000 அமெரிக்க டாலர்களை வழங்கினார் போல்ட். இவன் வெற்றிகளை மட்டுமல்ல, மனிதர்களையும் கொண்டாடத் தெரிந்தவன்.

அதன் பிறகு லண்டன், ரியோ என ஒலிம்பிக்கில் வரலாறு படைத்தான். உலக சாம்பியன்ஷிப் அரங்குகளையும் தன் வேகத்தால் அலறவைத்தான். ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருதை நான்கு முறை வென்றான். தடகளத்தின் தன்னிகரில்லா வெற்றியாளனாகக் கோலோச்சினான். இவனின் வாழ்க்கை, நமக்குச் சொல்லும் பாடம் ஏராளம். அர்ப்பணிப்பு, மக்களை நேசிப்பது என்பதையெல்லாம் தாண்டி வாழ்க்கையைக்கூட போல்டின் கண்கள் வழியாகப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. 

இந்த எட்டு ஒலிம்பிக் பதக்கங்களை ஜெயிக்காமல் இருந்திருந்தாலும், அந்த உதடுகளில் அதே புன்னகை வீற்றிருக்கும். அவன் வாழ்க்கையை அவன் ரசித்து வாழ்ந்துகொண்டிருப்பான். பார்ட்டி, மது என போல்டின் பொழுதுபோக்குகள் இன்றைய தலைமுறையினர் விரும்பும் அனைத்தும் நிறைந்தவையே. தன் ஓட்டத்துக்காக அவன் கடிவாளம் கட்டிய குதிரையாக மாறிவிடவில்லை. மாறாக, எங்கு எப்போது மட்டும் கடிவாளம் அணிந்தால் போதும் என்று தனக்குத்தானே வகுத்துக்கொண்டான்.

“ஓய்வுக்குப் பிறகு என்ன செய்ய விரும்புகிறீர்கள்?” என்று நிருபர் ஒருவர் கேட்க,

“இப்போது எனக்குத் தேவை ஓய்வு. பார்டிக்குப் போக வேண்டும். டிரிங்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று ‘அயர்ன் மேன்’ போல ரவுசாக பதில் சொன்னார் போல்ட். 

விளையாட்டு வீரர்கள் எல்லோரும் கோடிக்கணக்கில் ஸ்பான்சர்ஷிப் டீல் வைத்திருப்பார்கள். அதன்மூலம் அவர்களுக்குப் பல மில்லியன் டாலர்கள் வருவாய் வரும். போல்ட் அதையும்கூட நல்வழியில் செலவு செய்கிறார். தான் ஒப்பந்தம் வைத்துள்ள `PUMA' நிறுவனத்தின் மூலம், ஜமைக்காவில் விளையாட்டுப் பயிற்சி பெறும் சிறுவர் சிறுமியருக்காக விளையாட்டு உபகரணங்கள் ‘உசேன் போல்ட் அறக்கட்டளை’யின் உதவியோடு சென்றுகொண்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி, தான் தத்தெடுத்த சிறுத்தைக்குட்டியை வளர்த்துவரும் கென்ய உயிரியல் பூங்காவைப் பராமரிப்பதற்கும் உதவுகிறார் போல்ட். அந்தச் சிறுத்தைக்குட்டியின் பெயர் என்ன தெரியுமா... `மின்னல் போல்ட்'.

“உங்கள் குழந்தைகள் உங்கள் பாதையில் ஜொலிப்பார்களா?” இந்தக் கேள்வி, சந்தானமாக இருந்த போல்டுக்குள் இருந்த சமுத்திரக்கனியைத் தட்டி எழுப்பியது.

“குழந்தைகள் விருப்பப்படாத ஒன்றை செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் தகப்பனாக நான் ஒருபோதும் இருக்க மாட்டேன்” என்று சொல்லும்போது, அவருக்கு ஹைஃபை கொடுக்கத் தோன்றுகிறது. இப்படி போல்டின் குணத்துக்கு 16 துருவங்கள் உண்டு. ஓட்டப்பந்தயம் மட்டுமல்லாது, கால்பந்து, கிரிக்கெட் என அனைத்திலும் ரவுண்டுகட்டி அடிப்பார். கெய்லுடன், யுவியுடன் கிரிக்கெட் ஆடுவார். மான்செஸ்டர் யுனைடெட் வீரர்களுடன் கால்பந்தும் ஆடுவார். சுருங்கச் சொன்னால், உசேன் போல்ட் வாழப் பிறந்தவன்… வெற்றிகளை ஆளப் பிறந்தவன்.

“பலரும் ஓய்விலிருந்து மீண்டு வந்து சொதப்பியதைப் பார்த்திருக்கிறேன். அவர்களைப்போல் மீண்டும் வந்து அவமானப்பட நான் விரும்பவில்லை” என்று கம்பேக்குக்கு இப்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

அவர் கோச்சிங் பக்கம் செல்ல வேண்டும் என்பதும் பலரின் விருப்பம். ஆனால், அவர் முன்பு சொல்லியதுபோல் “நெக்ஸ்ட்... ரெஸ்ட்” என ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். இனி மீண்டும் களத்தில் மின்னல் வெட்டுவதை நம்மால் பார்க்க முடியாது. இந்த மின்னல் மனிதன் தடகளத்தின் தன்னிகரில்லா வீரனாக ஓய்வுபெற்றுவிட்டார். இனி மொத்த உலகமும் 10 விநாடி விழித்திருக்குமா என்றால், அது சந்தேகமே!  காரணம், இனி களங்களில் ஓடுவதெல்லாம் பூனைகளாகத்தான் இருக்கும். புலி, இதோ தன் குகையை அடைந்துவிட்டது!” ‛‛ஒளியை விட வேகமானது எதுவுமில்லை” என்று கூறிய இயற்பியல் ஆசிரியர்களை யோசிக்கச்செய்தவன் இனி ஓடப்போவதில்லை. 
 

சச்சின், கிரிக்கெட் ஆடிய காலத்திலேயே ‘அடுத்த சச்சின்’ என அடையாளம் காட்டப்பட்டார் விராட் கோலி. மெஸ்ஸி சுழன்றுகொண்டிருக்கும்போதே அடுத்த மெஸ்ஸியாக எழுந்தார் நெய்மார். ஆனால், போல்ட் ஓய்வுபெற்றுவிட்டார். இன்னொரு போல்டை இந்த உலகம் இன்னும் அடையாளம் காணவில்லை. அப்படி ஒருவனை அடையாளம் காண்பது என்பது இயலாத காரியம். அப்படி ஒருவன் பிறப்பானா என்பதும் கேள்விக்குறியே! இனி அப்படி ஒருவனைப் பார்க்கவேண்டுமெனில், மின்னலே இன்னொரு பிறவிகொள்!

அடுத்த கட்டுரைக்கு