Published:Updated:

“நான் கண் மூடுவதற்குள் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியர் பதக்கம் வெல்ல வேண்டும்!” - மில்கா சிங் உருக்கம்

எம்.குமரேசன்
“நான் கண் மூடுவதற்குள் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியர் பதக்கம் வெல்ல வேண்டும்!” - மில்கா சிங் உருக்கம்
“நான் கண் மூடுவதற்குள் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியர் பதக்கம் வெல்ல வேண்டும்!” - மில்கா சிங் உருக்கம்

நாடு, பிரிவினைக்குத் தயாராகிக்கொண்டிருந்த சமயம். இரு புறங்களிலும் வன்முறை தலைதூக்குகிறது. `இந்தியர்களாகத்தானே வாழ்ந்தோம்' என்கிற எண்ணம் எல்லாம் மறைந்தது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் கோவிந்த்பூரா கிராமத்தில் இந்துக்கள் உயிரை கையில் பிடித்தபடி கிடக்கிறார்கள். கிராமத்துக்குள் புகுந்த கும்பல், அட்டூழியத்தில் ஈடுட்டது; 15 சகோதர - சகோதரிகள்கொண்ட வீட்டுக்குள் புகுந்து, கையில் கிடைத்தவர்களை எல்லாம் வெட்டியது. பெற்றோர், இரு சகோதரிகள், ஒரு சகோதரன் அனைவரும் ரத்தவெள்ளத்தில் பலியாகிக் கிடக்க, குடும்பமே சிதைந்தது. 

வன்முறை வெறியாட்டத்திலிருந்து தப்பித்த அந்தச் சிறுவன், உயிரை கையில் பிடித்துக்கொண்டு இந்தியாவை நோக்கி ஓடினான். அந்தச் சிறுவன்தான் ரோம் ஒலிம்பிக்கில் தடகளப்  பதக்கத்தைக் கோட்டைவிட்ட மில்கா சிங். `பறக்கும் சீக்கியர் ' என்ற செல்லப்பெயர்கொண்ட ஸ்பீட் மேன். தடகளம் என்றால் தடுமாறிப்போகும் இந்தியர்களுக்குள் நம்பிக்கையை விதைத்தவர். பி.டி.உஷாவுக்கு முன் ஆசியப் போட்டியில் தடகளத்தில் மட்டும் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றவர். 

எத்தனை போட்டிகளில் எத்தனை எத்தனை தங்கப் பதக்கங்கள் வென்றாலும் ஒலிம்பிக் பதக்கத்துக்கு ஈடாகாது. ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வெல்வது சாதாரணமானது அல்ல. 1960-ம் ஆண்டு ரோம் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டத்தின் இறுதிச்சுற்றுக்கு மில்கா சிங் முன்னேறியிருந்தார். `பதக்கம் வெல்வார்' என நாடே காத்துக்கிடந்தது. முதல் 200 மீட்டர் வரை மில்கா சிங்தான் முன்னணியில் இருந்தார். அடுத்த 200 மீட்டர் ஓட்டத்தில் நிலைமை தலைகீழானது.  இவரைவிட மூன்று பேர் முன்னிலை பெற்றுவிட, மில்காவின் ஒலிம்பிக் பதக்கக் கனவு தகர்ந்தது. 45.73 விநாடியில் இலக்கைக் கடந்த மில்கா சிங், 0.1 விநாடியில் ஒலிம்பிக் பதக்கத்தை இழந்தார். அப்போது மில்கா சிங் மட்டும் அழவில்லை, இந்தியாவே அழுதது! 

ரோம் ஒலிம்பிக் போட்டி முடிந்து 57 ஆண்டுகள் ஆகிவிட்டன. `ஒரு விநாடியின் மதிப்பை ஒரு தடகள வீரனிடம் கேட்டுப்பார்' என்பார்கள். மில்கா சிங்தான் அந்தத் தடகள வீரன்! ஒலிம்பிக் தடகளப் பதக்கம் தனக்குக் கைகூடவில்லை என்றாலும்,  என்றாவது ஒருநாள் ஓர் இந்தியன் ஒலிம்பிக்கில் தடகளத் தங்கத்தை வெல்வான் என மில்கா சிங் நம்புகிறார். தற்போது 80 வயதை நெருங்கியுள்ள மில்கா சிங், தனக்குத்தானே எழுதிக்கொண்ட கடிதம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் தமிழாக்கம் இங்கே...

‘இரு நாடுகள் பிறந்தன. உன் பெற்றோரும் அண்ணன் தங்கையரும் இறந்தனர். நீ உயிரோடு இருப்பதே அதிர்ஷ்டம்தான். கடந்த ஒரு வருடமாக ரத்தத்தை மட்டுமே நீ பார்த்துப் பார்த்து வளர்ந்திருக்கிறாய். உன் நல்ல நேரம் டெல்லியில் வசித்த சகோதரியை அடையாளம் கண்டுகொண்டாய். அவள் மடியில் தஞ்சம் புகுந்தாய். அகதியாக இந்த நாட்டுக்குள் நுழைந்தாலும் தன்னம்பிக்கையும் விடா முயற்சியும்தான் உன்னை உயிர்ப்புடன் வைத்திருந்தன. ஓர் அகதியாக உன்னால் ஓட்டப்பந்தயத்தைப் புரிந்துகொள்ள இயலவில்லை. அன்றாடம் பிழைப்பைப் பார்ப்பதற்கே படாதபாடு படவேண்டிய நிலையில் எங்கே ஓடுவது?

நீ ஓடுவதைக் காட்டிலும் வேலை தேடி ஓடியதே அதிகம். காலணிகளுக்கு பாலீஷ் போடுவதிலிருந்து ரப்பர் ஃபேக்டரியில் கையில் ரப்பர் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு வேலை பார்த்திருக்கிறாய். இரு நாடுகள் பிரியும்போது மனிதர்கள் மிருகங்களாவதைப் பார்த்தவன் நீ. அதனால் இந்தக் கஷ்டம் எல்லாம் உனக்குக் கடினமாகத் தெரியவில்லை. யாரோ ஒருவர் போகிறப்போக்கில் சொன்ன விஷயம் உன் காதில் விழுந்தது. `ராணுவத்தில் சேர்ந்தால் மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்கும்' என்பதுதான் அது.  ராணுவத்தில் சேர்வதே அன்று முதல் உனது லட்சியம் ஆனது. சாப்பாட்டுக்காக ராணுவத்தில் சேர முயற்சித்த உன்னை, இரு முறை நிராகரித்தார்கள். ஒல்லிப்பிச்சானாய் வயிறு ஒட்டிப்போன உன்னை எப்படி ராணுவத்துக்கு எடுப்பார்கள்?

நிராகரிப்புதானே வெற்றிக்கு அடிகோல். அதுவே உன்னை வலுவானவனாக மாற்றியது. மீண்டும் ஒருமுறை முயற்சித்து 1952-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தாய். உன் வயிறு நிரம்பத் தொடங்கியதும் ஓட்டப்பந்தயத்தில் கவனம் திரும்பியது.  400 மீட்டர்தான் உனக்குப் பிடித்தது. தோல்விகள் துரத்தினாலும் `ஒருநாள் ஒலிம்பிக்கில் நாட்டுக்காக ஓடுவாய்' என்ற எண்ணம் மட்டும் உனக்குள் கனன்றுகொண்டே இருந்தது. 1956-ம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக்கில் மிக மிக மோசமாக ஓடினாய். உன்னை ஒரு கத்துக்குட்டியாகவே அந்த மைதானம் பார்த்தது. அங்குதான் 400 மீட்டர் ஓட்டத்தில் கைதேர்ந்த ஓர் ஓட்டக்காரரை நீ பார்த்தாய். ஆங்கிலம் தெரியாத உனக்கு, அவர் கைகளாலேயே சில விஷயங்களைக் சொல்லித் தந்தார். அப்போதுதான் அறிவியல்ரீதியான பயிற்சி எவ்வளவு முக்கியம் என்பதை நீ உணர்ந்தாய். 

லக்னோவில் வசித்த அமெரிக்கப் பயிற்சியாளர் ஒருவர், உனக்கு மீதி விஷயங்களைப் படிப்பித்தார். அதனால்தான் 1958-ம் ஆண்டு கார்டீஃப் காமன்வெல்த் போட்டியில் உன்னால் தங்கம் வெல்ல முடிந்தது. அதே கனவுடன்தான் ரோமிலும் ஓடினாய். அந்தப் போட்டி முடிந்து 57 ஆண்டுகள் ஆகிவிட்டன.  இப்போதும் உன் மனதில் அந்த வடு ஆறவில்லை. ஒலிம்பிக் பதக்கம் இப்போதும் உனக்குக் கனவுதான். நீ கண் மூடுவதற்குள் ஓர் இந்தியன் ஒலிம்பிக் தடகளத்தில் பதக்கம் வெல்வதைக் காண வேண்டும். லட்சியத்தில் விட்டுக்கொடுக்காதீர்கள்... இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டே இருங்கள்.  இந்த மில்காவால் சாதிக்க முடியாததை இளம் மில்கா சாதிப்பான். அதுவரை கண் மூடாதிருக்க, கடவுள் உனக்கு அருள்புரிய வேண்டும்!'