Published:Updated:

‘இந்தத் தங்கம் கிடைக்காவிடில் பைத்தியம் ஆகியிருப்பேன்’ - பாரா அத்லெடிக் சாம்பியன் சுந்தர் உருக்கம்!

‘இந்தத் தங்கம் கிடைக்காவிடில் பைத்தியம் ஆகியிருப்பேன்’ - பாரா அத்லெடிக் சாம்பியன் சுந்தர் உருக்கம்!
‘இந்தத் தங்கம் கிடைக்காவிடில் பைத்தியம் ஆகியிருப்பேன்’ - பாரா அத்லெடிக் சாம்பியன் சுந்தர் உருக்கம்!

லண்டனில் நடந்துவரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா - அத்லெடிக் சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதித்திருக்கிறார் 21 வயது இந்திய வீரர் சுந்தர் கர்ஜார். 60.36 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்த சுந்தர், ஐ.பி.சி கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் 3 தங்கங்களை வென்று அசத்தியிருந்தார்.  இதன்மூலம் பாரா - அத்லெடிக் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார். ஆனால் இதற்குப் பின்னால் அவர் அனுபவித்த காயங்களும் வேதனைகளும் வலி நிறைந்தவை.

அபிநவ் பிந்த்ரா. சுஷில் குமார் ஆகியோரைப் போல் சம்மர் ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டுமென்ற ஆசையோடுதான் போராடிக்கொண்டிருந்தார் சுந்தர். ஆனால், 2015-ம் ஆண்டு நடந்த கார் விபத்து அவரது வாழ்க்கையை மாற்றிவிட்டது. விபத்தில் ஒரு கையை இழந்தார். சோகத்தினால் இடிந்து போயிருந்தாலும், தேசத்திற்கான பதக்கக் கனவு அவரைத் தட்டியெழுப்பியது. அவர் பிறந்த ராஜஸ்தானில் மாற்றுதிறன் கொண்ட வீரர்களுக்குப் பயிற்சியளித்து வந்த R.D.சிங், சுந்தருக்குப் பயிற்சியளிக்கத் தொடங்கினார். துரோணாச்சாரியார் விருது பெற்ற அவரின் கீழ் ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் என அனைத்திலும் பயிற்சி பெறத் தொடங்கினார் சுந்தர்.

பாராலிம்பிக்கில் பங்கேற்பதற்காக, 2016 ஒலிம்பிக் நடைபெற்ற ரியோ டீ ஜெனீரோ மண்ணில் கால்பதிக்கிறார் சுந்தர். பதக்கம் வெல்வோம் என அதீத நம்பிக்கை அவருக்கு. “ஒலிம்பிக்கிற்கான பயிற்சி சமயத்தில் அடிக்கடி 70 மீட்டருக்கு மேல் வீசினான். ஒரு கட்டத்தில் 72 மீட்டர் கூட வீசினான். நிச்சயம் பதக்கம் வெல்வான்” என  சுந்தர் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தார் அவரது பயிற்சியாளர் R.D.சிங். ஆனால் மீண்டும் அதிர்ச்சி. போட்டி நடக்கும் போது வீரர்களை அழைக்கும்போது சுந்தர் அங்கில்லை. இரண்டு நிமிடம் தாமதாமாக வந்ததால் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பறிபோனது. அதனால் ஒரு தங்கமும் பறிபோனது. மறுபுறம் தமிழகத்தின் மாரியப்பனும் ஜஜாரியாவும் பதக்கம் வென்றனர். அந்தக் களிப்பில் இருந்த நமக்குச் சுந்தரின் கண்ணீரை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தோல்விகள் தோள் மீது அமர்ந்து பயணித்த போதும் சோடை போகவில்லை இந்தப் போராளி. மீண்டும் போராடினார். இந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற ஒன்பதாவது FAZZA IPC Grand Prix தொடரில் மஹாவீர் பிரசாத் சைனியின் பயிற்சியின் கீழ் பங்கேற்றார் சுந்தர். பங்கேற்ற மூன்று விளையாட்டுகளிலும் தங்கம் வென்றார். குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் என அனைத்திலுமே சுந்தர்தான் சாம்பியன். இந்த வெற்றியின் மூலம் தன் முந்தைய தோல்விகளை முலாம் பூசி மறைத்துக்கொண்டார்.

அதோடு நிற்கவில்லை. அந்தக் களிப்பு வெற்றி மீதான பசியை அதிகமாக்கியது. இன்னும் கடும் பயிற்சி மேற்கொண்டு லண்டன் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார். ஒரு கையில் குறைபாடு உடையவர்கள் பங்கேற்கும் F46 பிரிவில் பங்கேற்று தங்கமும் வென்று அசத்திவிட்டார். முதல் வாய்ப்பில் 53.92 மீட்டரே வீசிய சுந்தர், பின்பு எழுச்சிபெற்று நான்காவது வாய்ப்பில் 60.36 மீட்டர் தூரம் வீசி சாம்பியனானார். 

வெற்றி குறித்து சுந்தர் கூறுகையில், “ரியோவில் நடந்த ஏமாற்றத்திற்குப் பிறகு இந்தத் தருணத்திற்காகத்தான் காத்திருந்தேன். அதிலிருந்து மீண்டு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. போட்டி தொடங்கியதில் இருந்தே பதக்கம் உறுதியென நம்பினேன். ஆனால், முதல் த்ரோவின் போது சுளுக்கு ஏற்பட்டுவிட்டது. நல்லவேளை அது மோசமானதாக இல்லை. இரண்டாவது த்ரோவில் 59.42 மீட்டர் வீசியதுமே தங்கம் நமது என்ற நம்பிக்கை வந்துவிட்டது” என்றார். 
    

ஆம், இந்த வெற்றியும் கூட தன் உபாதையை வென்று பெற்ற வெற்றிதான். சுளுக்கு ஏற்பட்டதும் நம்பிக்கையை இழந்திருந்தால் ஏமாற்றமே மிஞ்சியிருக்கும். ஆனால் அடுத்த வாய்ப்பிலேயே தங்கத்தை உறுதி செய்தார். நான்காவது வாய்ப்பில் தன்னைத் தானே விஞ்சி தன் திறமையை நிரூபித்தார் சுந்தர். இந்த முறை அவர் தோற்றிருந்தால் வாழ்க்கை கேள்விக்குறியாகியிருக்கும். “ரியோவில் நடந்த சம்பவத்தால் என் வாழ்க்கை முடிந்துவிட்டது என நினைத்தேன். நல்லவேளையாக, மீண்டுவிட்டேன். என் குடும்பத்தினருக்கும் பயிற்சியாளர் மஹாவீர் சன்னி அவர்களுக்கும் நன்றி. இந்த வெற்றி கிடைக்காதிருந்தால் நிச்சயம் பைத்தியம் ஆகியிருப்பேன்” என்று கூறிய அவரது வார்த்தைகளில் பழைய தோல்விகளின் வடு.

இதே போட்டியில் மற்றொரு இந்திய வீரர் ரின்கு 55.12 மீட்டர் தூரம் வீசி நான்காம் இடம் பிடித்தார். ஒரேயொரு மீட்டர் வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தை தவறவிட்ட ரின்குவின் சிறப்பான செயல்பாடு இதுதான்.

எப்படியோ சுந்தர் எனும் போராளி தோற்கவில்லை. இன்று தேசத்தின் கொடியை உலக அரங்கில் ஏந்தி நிற்கிறார். காயத்தால் துவண்டு வாடுபவர்களுக்கெல்லாம் தலைமகனாய் உயர்ந்து நிற்கிறார். இன்னும் அவருக்கு குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகள் வரும் நாள்களில் நடக்கவுள்ளன. இப்போதே சுந்தரைக் கொண்டாட வேண்டாம் மக்களே…இன்னும் இரண்டு தங்கங்கள் காத்திருக்கின்றன …காத்திரு தேசமே!

அடுத்த கட்டுரைக்கு