Published:Updated:

வெறுங்காலில் ஓடிய லட்சுமணன், இன்று ஆசிய சாம்பியன்! - தடகள தமிழன்

வெறுங்காலில் ஓடிய லட்சுமணன், இன்று ஆசிய சாம்பியன்! - தடகள தமிழன்
வெறுங்காலில் ஓடிய லட்சுமணன், இன்று ஆசிய சாம்பியன்! - தடகள தமிழன்

வெறுங்காலில் ஓடிய லட்சுமணன், இன்று ஆசிய சாம்பியன்! - தடகள தமிழன்

மிழகத்துக்கு தடகள வீரர் - வீராங்கனைகளை உருவாக்குவதில், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு முக்கிய பங்கு உண்டு. தோஹா ஆசியப் போட்டியில் வெள்ளி வென்ற சாந்தியில் இருந்து ஆசியத் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் தமிழர் லட்சுமணன் வரை புதுக்கோட்டை மண்ணைச் சேர்ந்தவர்களே. புதுக்கோட்டையில் இயங்கி வரும் கவிநாடு ஸ்போர்ட்ஸ் க்ளப் இவர்களைப் போன்ற தடகள வீரர் -வீராங்கனைகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. புவனேஸ்வரில் தற்போது நடைபெற்று வரும் ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் தொடரில், 5,000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற பிறகே லட்சுமணன் பற்றிப் பேசுகிறோம். இந்த வெற்றியை அடைய அவர் சந்தித்த இன்னல்கள் அதிகம். 

கவிநாடு  மையத்தில் பயிற்சி பெறுபவர்கள் பெரும்பாலும் ஏழை பாழை வீட்டுப் பிள்ளைகள்தான். இதன் பயிற்சியாளர் லோகநாதன் முன்னாள் தேசிய தடகளச் சாம்பியன். தடகளத்தில் உள்ள காதலால் பலரிடமும் நிதி திரட்டி, இந்த மையத்தை நடத்தி வருகிறார். 10 ஆயிரம், 5 ஆயிரம் மீட்டர் போன்ற நீண்ட தொலைவு ஓட்ட வீரர்- வீராங்கனைகளைத் தயார் செய்வது லோகநாதனின் முக்கியப் பணி. 

லட்சுமணனின் தந்தை கோவிந்தன் இறந்து விட்டார். தாயார் ஜெயலட்சுமிதான் கூலி வேலைப் பார்த்து தன் ஐந்து குழந்தைகளையும் வளர்த்துளளார். தடகளத்தில் லட்சியம் கொண்டிருந்த லட்சுமணனை வறுமை தத்தெடுத்துக் கொள்ளத் திண்டாடிப் போனார். 16 வயதில் கவிநாடு விளையாட்டுக் கழகத்தில் சேர்ந்தார். காலில் காலணி அணியாமல் வெறுங்காலுடனே லட்சுமணன் பல கிலோ மீட்டர் ஓடுவார். இதுதான் அவரின் பயிற்சி முறை. வெறுங்காலிலேயே நீண்ட தொலைவு ஓடுவதால், அவரின் பெயருடன் 'வெறுங்கால்' ஒட்டிக் கொள்ள புதுக்கோட்டை பகுதியில் 'வெறுங்கால்' லட்சுமணன் ரொம்பவே பிரபலம். 

கவிநாடு விளையாட்டுக் கழகத்தில்  பயிற்சி எடுக்கும் ஒவ்வொருவரின் நிலையும் இதுததான். தடகளப் போட்டிகளில் ரயில்களில் சாதாரணப் பொதுப் பொட்டியில் பயணித்துதான் பங்கேற்பார். சாதித்த பிறகு அள்ளிக் கொடுக்கும் அரசு, இவர்களைப் போன்றவர்களை முன்னரே, அடையாளம் கண்டு ஊக்கப்படுத்த முன்வருவதில்லை என்பதே நிதர்சனம்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த வரை, விளையாட்டுப் போட்டிகளில் சாதிப்பவர்களுக்கு பரிசுத் தொகையை அள்ளிக் கொடுத்தார். தற்போதுள்ள முதல்வருக்கு விளையாட்டு மீது எந்தளவுக்கு ஆர்வம் என்றுத் தெரியவில்லை. ஆசியத் தடகளத்தில் தங்கம் வென்ற லட்சுமணனுக்கு இதுவரை தமிழக அரசு சார்பில் பாராட்டுக் கூடத் தெரிவிக்கப்படவில்லை. பரிசுத் தொகையும் அறிவிக்கப்படவில்லை. 

தற்போது, ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வரும் லட்சுமணன், இன்னொரு சாதனையும் படைத்துள்ளார். கடந்த 1983 ஆண்டுக்குப் பிறகு, உலகத் தடகளப் பேட்டியில் எந்த இந்திய வீரரும் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றதில்லை. லண்டனில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உலகத் தடகளப் போட்டியில் பங்கேற்கவும் லட்சுமணன் தகுதி பெற்றுள்ளர். வெற்றி குறித்து லட்சுமணன் கூறுகையில், ''இந்த நாளை என்னால் மறக்க முடியாது. கடந்த நவம்பர் மாதம் முதல் ஊட்டியில் தங்கி பயிற்சிபெற்றேன். மலைப் பகுதியில் பெற்ற பயிற்சி கடைசிக் கட்டத்தில் மற்ற வீரர்களை விட முன்னிலை பெற உதவியது .உலகத் தடகளப் போட்டியிலும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே லட்சியம்'' என்கிறார் உற்சாகமாக.

லட்சுமணனை இளவயது முதலே தயார்படுத்திய பயிற்சியாளர் லோகநாதன் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய் இருக்கிறார். தனது சிஷ்யன் தங்கம் வென்றது குறித்து லோகநாதன் கூறியது:

'‛லட்சுமண் பத்தாவது வரை படிச்சிருக்கான். அவன்  கூட பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர். அதில் இரண்டு சகோதரிகள். அப்பா இல்லாத பையன். வீட்டில் வறுமை. எங்கள் ஸ்போர்ட்ஸ் க்ளப்ல பிராக்டீஸ் பண்றவங்களுக்கு தினமும் பிரட், பால், ஆப்பிள் தருவோம். அதைப் பார்த்து எல்லோரும் ஓடுறாங்க, நம்மளும் ஓடுவோம்னு நினைச்சி இங்க வந்தான். லட்சுமண் நிச்சயம் சாதிப்பான்னு எனக்குத் தெரியும். மத்த பசங்க மாதிரி பிராக்டீஸுக்கு மட்டம் தட்ட மாட்டான். இன்னிக்கி என்னால வொர்க் அவுட் பண்ண முடியலை, நாளைக்கு சேத்துப் பண்றேன்னு சொல்வான். அந்த மாதிரி ஒரு அத்லெட் சொல்றான்னா, அவன் பெரிய ஆளா வருவான்னு கணிச்சேன். 17 வயசுல இங்க வந்தான். இப்ப 27 வயசு. எதிர்பார்த்த மாதிரியே அவன் இந்தியாவின் நம்பர் -1 அத்லெட்டா வந்துட்டான். 19 வயசுல அண்டர் - 20 கேட்டகிரில நேஷனல் லெவல்ல வின் பண்ணான். 20 வயசாகும்போது சீனியர் லெவல் காம்பிடேஷன்ல ஜெயிக்க ஆரம்பிச்சுட்டான். இதைப் பார்த்து உடனே ஆர்மில வேலை கொடுத்தாங்க.

இங்கதான் அத்லெட்டை மதிக்கிறதில்லை. கேரளாவுல லட்சுமணனுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கு. அங்க ஒரு கல்யாணத்துல இவன் படத்தை ஃபிளக்ஸ் போர்டுல பெருசா போட்டுருக்காங்க. அந்தளவு அங்க அவன் பிரபலம். இதை என் நண்பர் சொல்லும்போது பெருமையா இருந்துச்சு. 

ஆர்மி ஓரளவுக்கு உதவி செஞ்சதால, 2016-ல் நடந்த ஏசியன் டிராக் அண்ட் ஃபீல்டுல லட்சுமணன் 5,000-ல வெள்ளி, 10,000 மீ ஓட்டத்துல வெண்கலம்  ஜெயிச்சான். திருவனந்தபுரத்துல நடந்த நேஷனல் போட்டியில் இரண்டுலயும் கோல்டு, இரண்டுலயும் மீட் ரிக்கார்டு, நேஷனல் ரிக்கார்டு வச்சான். 5,000 மீ, 10 ஆயிரம் மீட்டர்ல எல்லா சாதனையும் அவன் பேர்லதான் இருக்கு. இதோ இப்ப புதுசா ஒரு சாதனை பண்ணி இருக்கான். ஏசியன் சாம்பியன்ஷிப்ல ஜெயிச்சதை விட, வேர்ல் சாம்பியன்ஷிப்புக்கு தகுதிபெற்றதுதான் என்னைப் பொறுத்தவரை பெரிய விஷயம்.

அதுல மட்டும் அவன் மெடல் வின் பண்ணிட்டா, எங்களுக்கு அதைவிடப் பெருமை வேற இல்லை. ஏன்னா... வேர்ல்ட் அத்லெடிக் சாம்பியன்ஷிப்ல இதுவரை அஞ்சு ஜார்ஜ் மட்டும்தான் மெடல் வின் பண்ணி இருக்காங்க. அடுத்ததா இவன் கண்டிப்பா ஜெயிப்பான். அதுக்கு அரசாங்கம்தான் ஹெல்ப் பண்ணனும். ஏன்னா, இத்தனை நாள் ஊட்டியில ட்ரெய்னிங் எடுத்ததாலதான் அவனால, இந்தளவு சாதிக்க முடிஞ்சது. வேர்ல்ட் சாம்பியன்ஷிப் சாதாரண போட்டி இல்லை. அங்க ஜெயிக்கணும்னா, வெளிநாட்டுல போயி பயிற்சி எடுக்கணும். இப்பவே அவனையும் அவன் கோச்சையும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கணும். மெடல் வாங்குன பிறகு பாராட்டுறதை விட, லட்சுமணன் மாதிரி பசங்களை இப்பவே அடையாளம் கண்டுபிடிச்சி, கரெக்டா ட்ரெய்ன் பண்ணா, இந்தியாவுக்கு நிச்சயம் பதக்கம் கிடைக்கும். எங்ககிட்ட இருக்கிற ஓட்டை உடைசல் வசதியை வச்சு இவ்வளவு தூரம் வளர்த்து விட்டதே பெருசு. இனிமே அரசாங்கம்தான் மனசு வைக்கணும்’’ என்றார். 

இதை இந்த அரசிடம் யார் சொல்வது?

அடுத்த கட்டுரைக்கு