Published:Updated:

கண்முன் தங்கை மரணம்... முடக்கிய முதுகுத்தண்டு... மீண்டு சாதித்த `தடகளம்’ வெங்கடாசலம்

கண்முன் தங்கை மரணம்... முடக்கிய முதுகுத்தண்டு... மீண்டு சாதித்த `தடகளம்’ வெங்கடாசலம்
News
கண்முன் தங்கை மரணம்... முடக்கிய முதுகுத்தண்டு... மீண்டு சாதித்த `தடகளம்’ வெங்கடாசலம்

எங்க அம்மாவும் அப்பாவும் அழுது அன்னிக்கிதான் நான் பார்த்தேன். `நாலு சுவத்துக்குள்ளயே என் வாழ்க்கை முடிஞ்சி போயிரும்னு நெனைச்சேன், இப்ப நாடு தாண்டி சாதிச்சிட்டு இருக்கேன்.’

``திரே வந்த பஸ் மோதி, என் முன்னாடியே, என் தங்கச்சி உசிரு போய்டுச்சு. கண் முழிச்சுப் பார்த்தா ஆஸ்பத்திரி 'பெட்'ல நான் இருந்தேன். இனி, இடுப்புக்குக் கீழ எந்தப் பாகமும் வேலை செய்யாதுனு சொல்லிட்டாங்க. நாலு வருஷம் படுத்த படுக்கைதான். அப்ப அனுபவிச்ச வலியும் வேதனையும் நான் 'கோல்டு மெடல்' வாங்கி மாலையும் மரியாதையுமா ஊருக்குள்ள வந்தப்பதான் தீந்துச்சு’’ - நா தழுதழுக்க தன் சாதனைப் பயணத்தின் கரடுமுரடான பாதைகளைப் பகிர்ந்துகொள்கிறார்  'வேர்ல்டு பாரா கேம்ஸ்' கோல்டு மெடலிஸ்ட் வெங்கடாசலம். 

வெங்கடாசலம்... வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர். 10-ம் வகுப்புவரை படித்துவிட்டு, தன் சொந்த ஊரிலேயே, எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். அதுவரை  எந்தவொரு பெரும் துயரத்தையும் அனுபவிக்காதவரின் வாழ்வு, கண்ணசைக்கும் நேரத்தில் தலைகீழானது அந்த நாளில். தன் தங்கையை, அவர் படிக்கும் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். அப்போது ஆடு ஒன்று குறுக்கே வர, நிலைதடுமாறி எதிரே வந்த பஸ்ஸில் மோதி அண்ணனும் தங்கையும் கீழே விழுந்தனர். இதில் வெங்கடாசலத்தின் கண்ணெதிரே அவரின் தங்கை இறந்துவிட, மயக்கமடைந்த வெங்கடாசலத்தை அங்கிருக்கும் ஒரு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். அவரது வாழ்க்கை நான்கு சுவருக்குள் முடங்கிப் போனது. 

அதிலிருந்தெல்லாம் எப்படி மீண்டார்..? 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``விபத்து நடந்தது 2009-ம் வருஷம். முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு இடுப்புக் கீழே எந்த உணர்வும் இல்லாம மரத்துப் போயிடுச்சு. சென்னையில `ஆபரேஷன்’ பண்ணிட்டு வீட்டுக்கு வந்தவன், நாலுவருஷம் வீட்டுக்குள்ளயே இருந்தேன். `வீல் சேர்’ல இருந்ததால, வெளிய எங்கயும் போகப் புடிக்கல. ஆஸ்பத்திரிக்குப் போறதுக்கு மட்டுந்தான், வீட்டைவிட்டு வெளியில போவேன். அப்படி ஒருதடவை வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரிக்குப் போகும்போது, `பிசியோதெரபிஸ்ட்’ ரமேஷ் சாரைப் பார்த்தேன். அவர் `உனக்கு விளையாட்டுல இன்ட்ரஸ்ட் இருக்கான்னு’ கேட்டார், உடனே நான், `நார்மலா இருக்கும்போது கிரிக்கெட், கபடில்லாம் நல்லா விளையாடுவேன்’னு சொன்னேன். `இப்ப, அதெல்லாம் விளையாட முடியாதேப்பா, நான் உனக்கு `வீல் சேர்’ல விளையாடுற விளையாட்டுகளுக்குப் பயிற்சி கொடுக்கிறேன், விருப்பமா'னு கேட்டார்', நானும் `சரி'ன்னு சொன்னேன். அப்படி ஆரம்பிச்சதுதான் இந்தப் பயணம்.

குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளுக்குப் பயிற்சி கொடுத்தார். கொஞ்ச நாள்லயே, மாவட்ட அளவுல, மாநில அளவுல நடக்குற போட்டிகள்ல கலந்துக்க ஆரம்பிச்சேன். முதல்முறையா, 2013-ம் வருஷம், சென்னையில நடந்த தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில, குண்டு எறிதல்ல வெண்கலப் பதக்கம் வாங்குனேன். ரமேஷ் சார் மூலமா சாந்தமுத்துவேல்னு ஒரு கோச் அறிமுகமானார், அவர்கிட்ட சிறப்புப் பயிற்சிகள் எடுத்துக்கிட்டேன். 

பயிற்சியெல்லாம் முடிச்சுட்டு ஊருக்கு வந்த கொஞ்ச நாள்லயே, அதுவரை எங்க குடும்பத்தைக் கவனிச்சிட்டு வந்த எங்க அண்ணனும் இறந்து போய்ட்டாரு. மொத்த குடும்பச் சுமையும் என் தலையில விழுந்திடுச்சு. நான் சம்பாதிச்சுதான் எங்க அப்பா, அம்மாவுக்கு சோறு போட வேண்டிய கட்டாயம். ஆனா, `எனக்குப் போட்டிகள்ல கலந்துக்கணும், இன்னும் நிறைய சாதிக்கணும்'னு வெறி. அதனால, செல்போன் ரீசார்ஜ் கடை ஆரம்பிச்சேன். அதை நடத்திக்கிட்டே, பயிற்சி எடுத்தேன். 

2017-ம் வருஷம், பிப்ரவரி வரைக்கும் தேசிய அளவுல, கலந்துக்கிட்டு நிறைய பதக்கங்கள் வாங்கினேன். அதே வருஷம் மார்ச் மாசம், ஹரியானாவுல, 'வேர்ல்டு பாரா  அத்லெட்டிக் சாம்பியன்ஷிப்'க்கான செலக்‌ஷன் வெச்சாங்க. நான் அதுல கலந்துக்கிட்டு, ஈட்டி எறிதல் போட்டியில தமிழ்நாட்டுல இருந்து  தேர்வானேன். சைனாவுல நடந்த போட்டியில கலந்துக்கிட்டேன். மெடல் எதுவும் கிடைக்கல. `ராங்கிங்’ மட்டும்தான் கிடைச்சது. அடுத்த ஒரு வருஷம் கடுமையான பயிற்சிகள் எடுத்தேன். அதே நேரத்துல, தமிழ்நாட்டோட 'வீல் சேர் பேஸ்கட் பால்' டீமுக்கு செலக்ட் ஆகி, விளையாடினேன். எங்க டீம் `சில்வர் மெடல்’ வாங்கிச்சு. 

2018, மே மாசம், தாய்லாந்துல நடந்த, `இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப்’புக்கு செலக்ட் ஆனேன். தாய்லாந்து போறதுக்கு எங்க மாவட்ட கலெக்டர்கிட்ட உதவி கேட்டேன். அவர் மூலமா ஒரு தனியார் நிறுவனம் ஸ்பான்ஸர் பண்ணுனாங்க. அங்க போய், குண்டு எறிதல்ல தங்கப்பதக்கமும், ஈட்டி எறிதல்ல வெள்ளிப்பதக்கமும் வாங்குனேன். அதேவருஷம் ஆகஸ்டு மாசம் நேபாளத்துல நடந்த, 'சவுத் வெஸ்ட் ஏசியன் பாரா கேம்'ல செலக்ட் ஆனேன். வட்டு எறிதல்ல தங்கம், ஈட்டி எறிதல்ல வெள்ளியும் ஜெயிச்சுட்டு வந்தேன்.

அப்ப, எங்க ஊர் மக்கள் எல்லோரும் ஒண்ணு சேர்ந்து,  மாலை மரியாதையோட, மேளதாளத்தோட என்னை ஊர் எல்லையில இருந்து, எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தாங்க. அந்த நாளை என் வாழ்க்கையில மறக்க முடியாது. எங்க அம்மாவும் அப்பாவும் அழுது அன்னிக்கிதான் நான் பார்த்தேன். `நாலு சுவத்துக்குள்ளயே என் வாழ்க்கை முடிஞ்சி போயிரும்னு நெனைச்சேன், இப்ப நாடு தாண்டி சாதிச்சிட்டு இருக்கேன். பல நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராவும் என்னைக் கூப்பிடுறாங்க. சந்தோஷமாவும் நம்பிக்கையாவும் இருக்கு.

2018-ல தாய்லாந்துல, நான் மெடல் வாங்கிட்டு வந்ததுக்கு அப்புறம், எங்க ஊரைச் சுத்தி எட்டு மாற்றுத்திறனாளிகளைத் தேர்வு செஞ்சு அவங்களுக்குப் புடிச்ச விளையாட்டுல டிரெய்னிங் எடுக்க உதவி செஞ்சேன். போட்டிகள்லயும் கலந்துக்க வெச்சேன். இப்ப அவங்களும் நிறைய போட்டிகள்ல கலந்துக்கிட்டு பதக்கங்கள் வாங்குறாங்க. அந்த 8 பேருக்கு மட்டுமல்ல, விபத்துல சிக்கி முதுகுத்தண்டு பாதிச்சு வீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்குறவங்களை தேடிப் பிடிச்சு, கவுன்சலிங் கொடுத்துட்டு இருக்கேன். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கத்துல என்னென்ன சலுகைகள் இருக்குங்கிறதை, அவங்களுக்கு எடுத்துச்சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துறேன். அரசாங்கம் கொடுக்குற 1,000 ரூபாய் உதவித் தொகை பத்தியே பலருக்குத் தெரியல, அதையெல்லாம் எடுத்துச் சொல்லி, வாங்கிக் கொடுத்துட்டு இருக்கேன்.

வீட்டுல இருந்து அவங்கள வெளியில கொண்டு வந்துட்டாலே போதும், வாழ்க்கைமேல  நம்பிக்கை வர வச்சுடலாம்’’ என நம்பிக்கை ஒளியாகப் பிரகாசிக்கிறார், பதக்க நாயகன் வெங்கடாசலம்.