குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார்


புதுடெல்லி: ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பி இருப்பது குத்துச் சண்டை ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிடில் வெயிட் குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டி மற்றும் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் பெற்று தந்தவர்.
இவர் சமீபத்தில் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி இருந்தார். பஞ்சாப் போலீசாரின் சோதனையில் சிக்கிய போதை பொருள் விற்பனையாளரான அனுப் சிங், விஜேந்தர் சிங்கிற்கு போதை பொருள் விற்பனை செய்ததாக வாக்கு மூலம் கொடுத்ததை அடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முதலில் போலீசாரிடம் சோதனைக்கு மறுத்த விஜேந்தர் சிங், விளையாட்டு அமைச்சகத்தின் உத்தரவை ஏற்று தேசிய ஊக்க மருந்து தடுப்பு கழகத்தின் பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்தார். இந்த சோதனையில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என தெரிய வந்தது. அதன்பிறகு அவர் மீண்டும் குத்துச் சண்டை பயிற்சிக்கு திரும்பி இருக்கிறார்.
##~~## |