Published:Updated:

`பார்வையிழந்த மகனுக்காக வர்ணனையாளரான தாய்’ - கால்பந்துப் போட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்! #viralvideo

`பார்வையிழந்த மகனுக்காக வர்ணனையாளரான தாய்’ - கால்பந்துப் போட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்! #viralvideo
`பார்வையிழந்த மகனுக்காக வர்ணனையாளரான தாய்’ - கால்பந்துப் போட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்! #viralvideo

பார்வை தெரியாத தன் மகனுக்காக வர்ணனையாளராக மாறிய பிரேசில் தாய்க்குப் பாராட்டுகள் குவிந்துள்ளது. 

இந்தியர்களுக்கு கிரிக்கெட் எப்படியோ அதுபோன்றுதான் ஐரோப்பியர்களுக்குக் கால்பந்து... வெற்றி பெற்றால் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவார்கள். தோல்வி என்றால் தூக்கி வீசிவிடுவார்கள். சண்டைகள், சர்ச்சைகள், ஆர்ப்பாட்டம், ஆராவாரம் எனக் கால்பந்து மைதானமே களைகட்டும். நாடுகளையும் கடந்து வீரர்களுக்குதான் இங்கு மதிப்பு அதிகம். அதனால்தான் பீலே, மாரடோனா, மெஸ்ஸி, ரோனால்டோ போன்ற வீரர்கள் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ளனர். ஒரு கால்பந்துப் போட்டியைக் காண வந்த ரசிகை ஒரே நாளில் உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் ஈர்த்தார். பார்வையிழந்த தன் மகனுடன் கால்பந்து மைதானத்துக்கு வந்த அந்தப் பெண் தான் விழிகளில் கண்டதை மகனின் செவிகளில் உரைத்தார். அந்தச் சிறுவன் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தான். இந்தக் காட்சிகளை அங்கிருந்த ஒரு கேமரா அழகாகப் பதிவு செய்தது. ட்விட்டரில் வைரலானார் அந்தப் பெண்.

அவர் பிரேசிலைச் சேர்ந்த சில்வியா கிரேக்கோ. பார்வை தெரியாத தன் 12 வயது மகன் நிகோலஸுக்காக வர்ணனையாளராக மாறி இருக்கிறார். தாய், மகன் இருவருமே தீவிர கால்பந்து ரசிகர்கள். கடந்த செப்டம்பர் மாதம் பிரேசிலில் நடந்த கிளப் போட்டிகளைப் பார்க்க மகன் நிகோலஸை அழைத்துச் சென்றபோதுதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பார்வை இழந்த மகனால் போட்டிகளைப் பார்க்க முடியாது என்பதால் வருத்தமடையாமல் நம்பிக்கையாகத் தான் காண்பதை ருசிகரமாக எடுத்துச் சொல்லி ஆன் தி ஸ்பாட்டிலேயே அவருக்கு வர்ணனையாளராக மாறினார். போட்டி எப்படி நடக்கிறது, வீரர்களின் உடை, பந்தின் கலர், வீரர்களின் தலை முடி என்ன கலர் போன்ற விஷயங்களையும் எடுத்துச் சொல்லி, நிகோலஸின் பார்வையாக மாறினார். அம்மாவின் வர்ணனையைக் கேட்டு நிகோலஸ் மேலும், கீழும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார். 

இந்த உணர்ச்சிமிகு காட்சிகள் டிவியில் தெரிய, சில்வியாவும் நிகோலஸும் பிரேசில் முழுவதும் பிரபலமாகினர். அதன்காரணமாக பிரேசில் டிவி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். கிளப் போட்டிகளின் பயிற்சிகளையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், ஒரு நிகழ்ச்சியின்போது நட்சத்திர வீரர் நெய்மரை சந்தித்து உரையாடியுள்ளார் நிகோலஸ். ``நான் ஒரு தொழில்முறை வர்ணனையாளர் அல்ல. உணர்ச்சியின் மிகுதியில் வர்ணனை செய்தேன். நான் பார்த்ததை, உணர்ந்ததை என் மகனுக்குச் சொன்னேன்" என்று உணர்ச்சி பொங்க கூறுகிறார் இந்தத் தன்னலமில்லாத பாசத் தாய்.