Published:Updated:

பாரா அத்லெட்டிக்ஸில் இரண்டு தங்கம் வென்ற தமிழர் அபுதாஹிர்... அரசு கவனிக்குமா?!

பாரா அத்லெட்டிக்ஸில் இரண்டு தங்கம் வென்ற தமிழர் அபுதாஹிர்... அரசு கவனிக்குமா?!
பாரா அத்லெட்டிக்ஸில் இரண்டு தங்கம் வென்ற தமிழர் அபுதாஹிர்... அரசு கவனிக்குமா?!

பாரா அத்லெட்டிக்ஸில் இரண்டு தங்கம் வென்ற தமிழர் அபுதாஹிர்... அரசு கவனிக்குமா?!

தடகளம்  - இந்தியாவில் கண்டுகொள்ளப்படாத ஒரு விளையாட்டு. தேசிய அளவில் சாதனைகள் செய்தால் மட்டுமே அந்த வீரர், வீராங்கனைகளின் பெயர் அங்கீகரிக்கப்படும். பாரா அத்லெடிக்ஸ் இன்னும் மோசம். ஒலிம்பிக் அரங்கில் பதக்கம் வாங்கினால் மட்டுமே அவர்களின் பெயர் இங்கு அறியப்படும். வேறு எந்த சர்வதேசப் போட்டிகளில் சாதித்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை. மாரியப்பன், தீபா மாலிக் மட்டுமல்ல... அவர்களைப்போல் பலரும் இந்தியாவில் சாதிக்கின்றனர். ஆனால், அவர்களின் பெயர்கள் வெளியே தெரிவதில்லை. அவர்களில் ஒருவர்தான் சையது அபுதாஹிர்.

மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவரான அபுதாஹிர், இலங்கையில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் வட்டு எறிதல், குண்டு எறிதல் பிரிவுகளில் இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார். கை, கால் மற்றும் முதுகெலும்பு பாதிப்புகளுக்குள்ளானவர்கள் பங்கேற்கும் `F56' பிரிவில் பங்கேற்ற அபுதாஹிரிடம் பேசினோம்.

``10-ம் வகுப்பு படிக்கும்போது கிரிக்கெட் விளையாடணும்தான் ஆசைப்பட்டேன். ஆனால், `உன்னோட நிலைமையில இதெல்லாம் முடியாது' என்று சுற்றி இருந்தவர்கள் சொன்னார்கள். அந்தச் சமயத்தில் உடற்கல்வி ஆசிரியர் பரசுராம்தான் இந்த வாழ்க்கைக்குப் பிள்ளையார்சுழி போட்டு ஆரம்பித்துவைத்தவர். அதன் பிறகு தட்டு எறிதல், குண்டு எறிதலுக்கான பயிற்சியை ஆரம்பித்தேன். மதுரைக்கு உயர்நிலைப் படிப்பு படிக்க வந்தபோது, தற்போது எனக்குப் பயிற்சியாளராக இருக்கும் ஜெ.ரஞ்சித்குமாரைச் சந்தித்தேன். இவர்தான் என் வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயத்துக்கு உதவியவர். இவரின் முயற்சியால்தான் 2005-ம் ஆண்டிலிருந்து 2018-ம் ஆண்டு வரை பெங்களூர், சென்னை, ஹரியானா, மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடைபெற்ற வட்டு எறிதல், குண்டு எறிதல் போட்டிகளில் 70-க்கும் மேற்பட்ட தங்கம், வெள்ளிப் பதக்கங்களையும், இலங்கை, மலேசியா, துனிசியா போன்ற நாடுகளுக்கும் சென்று  சர்வதேசப் போட்டிகளில் 15-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்றுள்ளேன்" என்று கூறும் அபுதாஹிர், ஒலிம்பிக் சாம்பியன் மாரியப்பனுக்கு நெருக்கமானவர்.

``2010-ம் ஆண்டு காலகட்டத்தில், பயிற்சிக்காக மதுரையில் தங்கியிருந்தார் மாரியப்பன். அவருடன் சில மணி நேரம்தான் பேச வாய்ப்புக் கிடைத்தது. பயிற்சியின்போது பேசிய உரையாடல்கள் தற்போது மனதில் வந்து போகின்றன. சீனாவில் நடைபெற்ற பாரா தடகளப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு இருந்தும், சிறிய விபத்தில் கை நொறுங்கியதால் என்னால் அதற்குப் போகமுடியாமல் போனது. இலங்கை செல்வதற்கு முன்னர்தான் என் மனைவி திடீரென உடல்நிலை சரியில்லாது இறந்துபோனார். என் இரண்டு குழந்தைகளும் `அம்மா எங்கே?' என்று கேட்டபோது, என்னால் பதில் சொல்ல முடியவில்லை'' என்று கண்கலங்கினார். 

``கடந்தமுறை, சீனாவில் நடந்த போட்டிக்குப் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால், இந்த முறை இலங்கை சர்வதேசப் போட்டியை விடக்கூடாது என்ற முடிவில் சென்று, இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றேன். ஹரியானா போன்ற மாநிலங்களில் வெளிநாடு சென்று தங்கம் ஜெயித்து வந்தால், அரசாங்கம் அதற்கேற்ப காசோலை அல்லது ஊக்கத்தொகை தரும். இது, அவர்களின் விமானப் பயண டிக்கெட்டுக்கு ஓரளவு போதுமானதாக இருக்கும். தமிழ்நாட்டில் அப்படி முயற்சிகள் இன்னும் முன்னேற்றம் அடையாததால் நான் விமான டிக்கெட்டுக்குப் பணம் சேர்க்க, பல கஷ்டங்களை அனுபவித்துள்ளேன். தற்போது இந்தக் கவலைகளை ஓரளவு குறைத்துவருகிறேன். நான் வேலைபார்க்கும் கம்பெனியில் `போட்டிக்காக வெளிநாடுகள் செல்வதற்கான பணத்தைக் கேட்கலாமா... வேணாமா?' என நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், அவர்களே வந்து பணத்தைக் கையில் கொடுத்து, `சையது அண்ணா... வரும்போது தங்கத்தோடுதான் வரணும்'னு சொல்வாங்க. அது எனக்கு  உற்சாகத்தை ஏற்படுத்தும்.

இலங்கையிலிருந்து இரண்டு தங்கங்களுடன் கம்பெனிக்குள் நுழையும்போது, வேலை பார்த்துக்கொண்டிருந்த எல்லோரும் திடீரென எழுந்து நின்று சுமார் இரண்டு நிமிடம் கைதட்டி வரவேற்றனர். அப்போது என்னால் ஒன்றும் பேச முடியாமல் கண் கலங்கி நின்றேன். இப்படி சாதனைகளும் சோதனைகளும் ஒரே நேரத்தில் தாக்கி, என்னை இன்னும் பல மடங்கு வலுவாக்கி வருகின்றன. இதே உற்சாகத்தில் சீனாவில் நடைபெறவிருக்கும் போட்டியிலும், அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள ஆசிய பாரா தடகளப் போட்டிக்கும் (Asian para Athlete games-2018) பயிற்சியுடன் சேர்த்து பயணத்துக்கான பணத்தையும் தயார் செய்துவருகிறேன்" என்று கூறி பயிற்சிக்குக் கிளம்பினார்.

இவரைப் போன்ற விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் மட்டும்தான், நம் அரசின் கண்களுக்குத் தெரிவார்கள்போல. முன்பே இவர்களை அங்கீகரித்து உதவி செய்தால்தானே ஒலிம்பிக் போன்ற பெரிய போட்டிகளில் இவர்கள் சாதிக்க முடியும்?

அடுத்த கட்டுரைக்கு