Published:Updated:

தி ராக் அடிச்சா அடி விழாது, இடி விழும் - #WWE கிங்ஸ் ஆஃப் தி ரிங்ஸ் பகுதி 4

தி ராக் அடிச்சா அடி விழாது, இடி விழும் - #WWE கிங்ஸ் ஆஃப்  தி ரிங்ஸ் பகுதி 4
தி ராக் அடிச்சா அடி விழாது, இடி விழும் - #WWE கிங்ஸ் ஆஃப் தி ரிங்ஸ் பகுதி 4

தன் முதல் சண்டையிலேயே ஒருவன் ஐந்து பேரை அல்லையில் மிதித்து அரங்கத்தையே அதிர வைக்க முடியுமா? அடுத்த மூன்றே மாதத்தில் சாம்பியன் பெல்ட்டை தன் தோளில் தாங்கி ராஜநடை போடமுடியுமா? அப்பாவியாக இருந்தே மக்களின் வெறுப்பை சம்பாதிக்கமுடியுமா இல்லை வில்லனாக இருந்துமே காதை கிழிக்கும் விசில்களை வாங்க முடியுமா? மூன்று தலைமுறையின் தலைவர்களையும் எதிர்த்து நின்று, வென்று `நான்தான், நான் மட்டும்தான்' என்று மார்தட்டி மிரளவைக்க முடியுமா? முடியும். அவன் டுவைன் `தி ராக்' ஜான்சனாக இருந்தால் முடியும்.

ரத்தம், வியர்வை மற்றும் மரியாதை. முதல் இரண்டையும் நீங்க கொடுங்க.

கடைசியில் உள்ளதை தானா சம்பாதிச்சுடுவீங்க.

- தி ராக்

தி ராக், பெரும்பாலான இந்திய ரசிகர்களின் மோஸ்ட் ஃபேவரைட் வீரர். அவரின் மாநிற உடலும் பிரம்மா காளை டாட்டூவும் இன்னும் கொஞ்சம் இந்திய ரசிகர்களுக்கு அவரை நெருமாக்கியது. பேனாவாலும் மருதாணியாலும் அந்தக் காளையின் உருவத்தை வலது கையில் வரைந்துப் பார்க்காத ரெஸ்ட்லிங் ரசிகர்கள் கிடையாது. அம்மாக்கள் தலைக்கு மாட்டும் கருப்பு நிற பேண்டை தன் கைகளில் மாட்டிக்கொண்டு, தலையணைக்கு `பீப்பிள்ஸ் எல்போ' போட்டவர்கள்தான் எத்தனைபேர். ரிங்கிற்குள் வீரர்கள் மைக்கைத் தூக்கிக்கொண்டு வந்தாலே ரிமோட்டைத் தூக்கி சேனலை மாற்றிவிடுபவர்கள், ராக் பேசும்போது மட்டும் ரிமோட்டைத் தூக்கி வால்யூம் ஏற்றுவார்கள். அடித்து சிதறவிடுவதாக இருந்தாலும் சரி, கலாய்த்து கதறவிடுவதாக இருந்தாலும் சரி, ஆல் ஏரியாவிலும் சொல்லியடிக்கும் கில்லி. 

1972ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் மல்யுத்த வீரர் ராக்கி ஜான்சனுக்கும் அடா ஜான்சனுக்கும் டுவைன் டக்ளஸ் ஜான்சன் எனும் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையே தி ராக்தான். குட்டியாய் இருக்கும்போதே படு சுட்டி, படிப்பிலும் கெட்டி. விளையாடுவதிலும் அவ்வளவு ஆர்வம். க்ரிட் அயர்ன் விளையாடுகையில், டுவைனை யாரும் நெருங்கவே முடியாது. அவர் உடம்பில் ஓடிய ரத்தம் அப்படி, டுவைனின் பெற்றோர்களும் மல்யுத்த வீரர்கள்தான். அப்பா ராக்கி ஜான்சன் WWE-ல் மல்லுக்கட்டியவர், அம்மா வழி தாத்தா பீட்டர் மைவியாவும் புஜபலபராக்கிரமசாலி. இதனால், சிறுவயதிலேயே மூணு வேளை உணவாக வெறும் பீமபுஷ்டி அல்வாவை சாப்பிட்டதைப் போல நல்ல புஷ்டியாக இருப்பார் தி ராக். பின்னர், எந்த பயபுள்ளையோ த்ரிஷ்டி வைத்துவிட, காயம் ஏற்பட்டு க்ரிட் அயர்ன் போட்டிகளில் அவரால் விளையாடமுடியாமல் போய்விட்டது. 

வாய்ப்பை தேடிப்போகும்போது அதன் கதவை தட்டாதீங்க, எட்டி உதைச்சு திறந்து,

அதனிடம் சிரிச்சுகிட்டே உங்களை அறிமுகம் பண்ணிக்கோங்க"

- தி ராக்

இந்த நேரத்தில்தான் அவரது உறவினர்களும் மல்யுத்த வீரர்களுமான ரிக்கிஷி, ஒகேசுனா, ரோஸி, ஆஃபா ஆகியோரைப் பார்த்து மனதுக்குள் WWE ஆசையை சுள்ளிக் கொளுத்தி வளர்த்திருக்கிறார். தனது தந்தையிடம் சென்று `அப்பா, நான் ரெஸ்ட்லர் ஆகப்போறேன்' என சொன்னதும், `போங்கடா, போய் படிச்சு முன்னேறி புள்ளக்குட்டிகளை படிங்க வையிங்கடா' என கடுப்பாகிவிட்டார். அதன்பின், எப்படியோ ஒப்புக்கொண்டு டுவைனுக்கு டிரெய்னிங்கை ஆரம்பித்தார். அடுத்த ஒரே வருடத்தில் டிரெய்னிங்கை முடித்துவிட்டு, ராக்கி மைவியா என்ற பெயரில் WWE--ல் அறிமுகமானார். அப்பா ராக்கி ஜான்சன், தாத்தா பீட்டர் மைவியா... இரண்டும் சேர்ந்த கலவை ராக்கி மைவியா. 1996 ஆம் ஆண்டு நடந்த `சர்வைவர் சீரிஸ்' போட்டியில் அறிமுகமானவர், 4-4 எலிமினேஷன் சண்டையில் இரண்டு பேரை எலிமினேட் செய்து `சோல் சர்வைவராக' வாகை சூடினார். அரங்கில் அமர்ந்திருந்த 20,000 பேரும் `ராக்கி...ராக்கி...' என கோஷமிட்டார்கள். ராக்கி மைவியாவாக வடைச்சட்டி ஹேர்ஸ்டைலும் நீலக்கலர் ஜட்டியும் நீளமான நீலக்கலர் ரிப்பன்களை கழுத்தைச் சுற்றியும் தொங்கவிட்டுக்கொண்டு என்ட்ரியாவார் டுவைன். ஆரம்பத்தில் அனைவரும் அதை ரசித்தாலும், நாட்கள் ஆக செம கடுப்பாகினர். அடுத்த மூன்று மாதத்தில் சாம்பியன் ஆனார். ட்ரிபிள் ஹெச், ப்ரெட் ஹார்ட் போன்றோரையும் தோற்கடித்தார். ஆனாலும், மக்களுக்கு டுவனைப் பிடிக்கவில்லை, ராக்கி மைவியாவாக பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் `இவன் ஓவர் நல்லவனா இருக்கானேடா' என காண்டாகி, சண்டையின்போது `டை, ராக்கி டை'' (செத்துரு,ராக்கி செத்துரு) என கோஷமிட்டார்கள் ரசிகர்கள்... பாவத்த... அடுத்த வாரமே, காலில் அடிப்பட்டு ஐந்து மாதம் ரெஸ்ட்டுக்கு சென்றுவிட்டார்.

ஐந்து மாத ரெஸ்ட்டுக்குபின், சாது ராக்கி வில்லன் ராக்கியாக உருமாறியிருந்தார். தன்னை வெறுத்த மக்களை, பதிலுக்கு வெறுத்தார். பச்சை வண்ண வார்த்தைகளால் வசைபாடினார். ஃபரூக்கின் `தி நேஷன் ஆஃப் டாமினேஷன்' அணியில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர், அணியில் இருந்த ஒவ்வொருவராய் பிடித்து, அடித்து, துவைத்து `தி நேஷன் ஆஃப் டாமினேஷனை' டெமாலிஷன் செய்தார். WWE-ன் அதிகார மையத்தின் அணியான `தி கார்பரேஷனி'ல் இணைந்தார். இந்தக் காலக்கட்டத்தில்தான் தனது பெயரை `தி ராக்' என மக்களிடையே நிறுவி நிலைப்பெறவும் செய்தார். ஒருமுறை WWE-ன் தலைவர் மெக்மேஹானின் பேச்சைக் கேட்டு ஸ்டோன் கோல்டு, மெக் ஃபோலி (மேன் கைண்ட்) யிடம் ஒரண்டை இழுத்து, சண்டை பிடித்தார். ஒருமுறை தி ராக்கிற்கும் மேன் கைண்டிற்குமிடையே `ஐ குயிட்' மேட்ச் நடைப்பெற்றது. அதாவது, சண்டையின்போது அடிதாங்கமுடியாமல் `ஐ குயிட்' என்பவர்கள் தோற்றதாக அறிவிக்கப்படுவார்கள். அந்த மேட்சில் ஏற்கனவே ஒருமுறை மேன் கைண்ட் சொல்லியிருந்த `ஐ குயிட்'டை ரெக்கார்டு செய்து எடுத்துவந்து, அவர் சொன்னதைப்போல் மேட்ச் நடந்துக்கொண்டிருக்கும்போதே மேட்ச் செய்து அழுகுனி ஆட்டமும் ஆடினார். 

`வெற்றிங்குறது `பெருமை' பற்றியது இல்ல. அது சீரான உழைப்பை பற்றியது.

சீரான கடின உழைப்பே வெற்றியைப் பெற்றுத்தரும். பெருமையும் அது கூடவே வரும்"

- தி ராக்.

எதிரில் இருப்பவர்களை சகட்டுமேனிக்கு கலாய்ப்பதிலும் புதிது புதிதாய் பன்ச் லைன்கள் பிடிப்பதிலும் ஜித்து ஜில்லாடி. சந்தானம் லெவல். `It doesn't matter what you think', `If you smell what The Rock is cooking', `Bring it' என அடுக்கிக்கொண்டே போகலாம். ஒவ்வொன்றும் `ஷட் அப் பண்ணுங்க', `அமைதியோ அமைதியை'விட ஆயிரம் மடங்கு ரீச். மெர்சன்டைஸ்களிலும் லாபம் அள்ளியது WWE. வில்லனாக இருந்தும் மக்களின் விருப்பத்திற்குரிய வீரனாக இருந்த தி ராக்கை, ஹீரோவாக மாற்றியது WWE. அவரும் 'ராக்கை வில்லனாகத்தானே பார்த்திருப்ப, ஹீரோவா பார்த்ததில்லையே. இனி பார்ப்ப...' என களத்திலும் கிளப்பினார். ஸ்டோன் கோல்டுக்கும் தி ராக்கிற்கும் நடந்த ஒவ்வொரு சண்டையும் செமத்தியாக இருக்கும். ஸ்டோன் கோல்டிடம் ஸ்டன்னரை வாங்கிக் கொண்டு ராக் துள்ளுவதைப் பார்க்கவே ஜாலியாக இருக்கும். ஹிஹி...

பின்னர், தன்னுடைய பரம எதிரியான மெக் ஃபோலியுடன் இணைந்து டேக் டீம் சாம்பியன்ஷிப் வென்றார் தி ராக்! `தி ராக் & ஷாக் கனெக்‌ஷன்' என டீமுக்கு பெயரெல்லாம் வைத்தார்கள். WWE வரலாற்றின் சிறந்த டேக் டீம்களில் ஒன்றாக கருதப்பட்ட அது, மக்களின் பேராதரவைப் பெற்றது. `மன்டேநைட் வார்'களில் WCW-யை தோற்கடிக்க இது பெரும் உதவி புரிந்தது. அதைத் தொடர்ந்து பிரபலமான 30 பேர் ராயல் ரம்பிள் மேட்சிலும் வெற்றியடைந்து, தனது செகண்டு இன்னிங்ஸை சீரும் சிறப்புமாக தொடர்ந்தார் தி ராக். ட்ரிபிள் ஹெச், கர்ட் ஆங்கிள், க்றிஸ் ஜெரிக்கோ என நன்றாகவே சென்றுக் கொண்டிருந்தது. ராக் புகழின் உச்சியைத் தொட்டதும், சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றது ஹாலிவுட். `எங்கிருந்தாலும் வாழ்க...' என ரெஸ்ட்லிங் ரசிகர்களும் அவரை வழியனுப்பிவைத்தார்கள். ஹாலிவுட்டுக்குப் போனப் பிறகு, `சென்னையில் வேலைக் கிடைத்த வெளியூர் பையன், அவ்வப்போது தன் ஊர் பக்கம் எட்டிப்பார்ப்பதைப் போன்று' அவ்வப்போது WWE பக்கம் எட்டிபார்ப்பார் தி ராக். கடைசியாக, 32வது ரெஸ்ட்லிங் மேனியாவில் எரிக் ரோவனை ஆறே செகண்டில் தோற்கடித்து `எனக்கு இன்னும் வயசாகல' என கண்ணடித்தார். ஹான்ன்... மூன்று தலைமுறையின் தலைவர்களை எதிர்த்து நின்று வென்ற மாவீரன்னு தி ராக்கை சொல்லியிருந்தேனே அது இதனால்தான். ஹல்க் ஹோகன், ஸ்டோன் கோல்டு, ஜான் செனா மூவரையும் தோற்கடித்து, வலது புருவத்தை உயர்த்தி ஸ்டைல் காட்டியிருகிறது இந்த ஆறரை அடி மின்னல்.

தி ராக்கை பற்றிப் பார்த்தாச்சு, அப்படினா ஸ்டோன் கோல்டை பற்றிதானே அடுத்துப் பார்க்கணும். அடுத்த வாரம் பார்ப்போம்... ஆர் யூ ரெடி?

அடுத்த கட்டுரைக்கு