புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் பீலே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பீலேவின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வரும் நிலையில் கால்பந்து நட்சத்திரங்களான மெஸ்ஸி, ரொனால்டோ,நெய்மர் ஆகியோரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
மெஸ்ஸி தனது இரங்கல் பதிவில், “உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் பீலே" என குறிப்பிட்டுள்ளார். போர்ச்சுக்கல் வீரரான ரொனால்டோ தனது பதிவில்," பிரேசிலைச் சேர்ந்த அனைவருக்கும், குறிப்பாக அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். முழு கால்பந்து உலகமும் தற்போது தழுவிக்கொண்டிருக்கும் வலியை வெளிப்படுத்த மன்னன் பீலேவுக்கு வெறும் ‘Good Bye’ போதுமானதாக இருக்காது.
நேற்று, இன்று, என்றென்றும் பல மில்லியன் மக்களுக்கு அவர் ஒரு உத்வேகமாக இருப்பார். கால்பந்து பிரியர்கள் ஒவ்வொருவர் மனதிலும் அவரது நினைவுகள் வாழும்" என்று பதிவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பிரேசில் வீரர் நெய்மர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், ‘ பீலேவுக்கு முன் கால்பந்து ஒரு விளையாட்டாக மட்டும்தான் இருந்தது. ஆனால் அதை ஒரு கலையாகவும், பொழுதுபோக்காவும் அவர் மாற்றினார். இதுமட்டுமின்றி ஏழைகளுக்காகவும், கருப்பின மக்களுக்காகவும் குரல் கொடுத்து; பிரேசிலுக்கு வெளிச்சத்தைச் கொண்டு வந்தார். தற்போது அவர் மறைந்தாலும் அவர் செய்த சாதனைகளால் என்றென்றும் நிலைத்திருப்பார். Pelé is ETERNAL!!” என்று உருக்கமாக தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.