
பீலேவின் கண்களில் சுழன்ற புயலும் உள்ளத்தில் தகதகத்த நெருப்பும், புறக்கணிப்புகள் கொடுத்த வலியின் வெளிப்பாடு. கறுப்பினத்தவராக சமூகரீதியாகப் புறக்கணிக்கப்பட்டார்.
பிரேசில் கால்பந்து அணியினரின் ஆரம்பக் கால ஜெர்சி எப்படி இருந்தது தெரியுமா? வெள்ளை நிறத்தில் ஊதா நிற பார்டருடன் ஒரு வித தூய்மைவாதத்தைத் தாங்கிப் பிடிப்பதைப் போன்று இருக்கும். பிரேசிலின் கால்பந்து விரும்பிகளை இது பெரிதாகக் கவரவில்லை. காரணம், அதை அணிந்து பிரேசில் ஒரு உலகக்கோப்பையைக்கூட வெல்லவில்லை. இச்சமயத்தில்தான் முழுக்க மஞ்சள் நிறத்தில் பச்சை நிற பார்டருடன் புதிய ஜெர்சியை பிரேசில் அணி சூடிக்கொண்டது. பிரேசில் தேசியக்கொடியின் நிறங்கள் அமையப்பெற்ற ஜெர்சி என்பதாலும், அந்நாட்டின் வனவளத்தை பிரதானப்படுத்தும் ஜெர்சி என்பதாலும், மக்களுக்கு இயல்பாகவே அத்துடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட ஆரம்பித்தது. இந்த ஜெர்சியை அணிந்த பிறகே பிரேசில் முதல்முறையாக உலகக்கோப்பையை வென்றது. இன்றுவரை பிரேசில் அணியின் ஜெர்சி இதுதான்.

இதே பிரேசில் ஜெர்சியின் கதையை இன்னொரு கோணத்திலிருந்தும் பார்க்கலாம். இங்கேதான் ரத்தமும் சதையுமாக ‘பீலே' எனும் ஜாம்பவான், பிரேசில் கால்பந்தோடு இரண்டறக் கலந்த போராட்ட வாழ்வு பிரதானமாகிறது. ஏதோ போகிறபோக்கில் மக்கள் அந்த மஞ்சள் ஜெர்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த ஜெர்சிக்கு பீலே உயிரூட்டினார். பெரும் மதிப்புமிக்க தருணங்களையெல்லாம் தனதாக்கிக்கொள்ளும் பாக்கியத்தை அந்த ஜெர்சிக்குக் கொடுத்தார். ‘மஞ்சளும் பச்சையும் நாங்கள்தான்... இன்றைய போர் வீரர்களும் நாங்கள்தான்... எங்கள் கண்களில் சுழலும் புயலும், இதயத்தில் தகதகக்கும் நெருப்பும், நாங்கள் பிரேசிலியர்களாக ஒன்றிணைவதற்கான காரணம்... ஜிங்கா... ஜிங்கா...' பீலேவின் வாழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘Pele - The Birth of Legend' படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றின் வரிகள் இவை.
பீலேவின் கண்களில் சுழன்ற புயலும் உள்ளத்தில் தகதகத்த நெருப்பும், புறக்கணிப்புகள் கொடுத்த வலியின் வெளிப்பாடு. கறுப்பினத்தவராக சமூகரீதியாகப் புறக்கணிக்கப்பட்டார். ஏழ்மையின் பிடியில் பொருளாதாரரீதியாகப் புறக்கணிக்கப்பட்டார். புறக்கணிப்புகளும் ஒதுக்குதலும் அவரின் அன்றாட நிகழ்வுகளுள் ஒன்றாக மாறியிருந்தன. ‘எட்சன் அராண்ட்ஸ் டோ நாசிமியாண்டோ' என்பவர் ‘பீலே' வாக மாறியதன் பின்னணியே உதாசீனப்படுத்துதலை மையமாகக் கொண்டதுதானே. சக சீனியர் சிறுவர்களின் கிண்டலும் கேலியும்தான், பீலே ஒரு கறுப்பு முத்தாக ஜொலிப்பதற்கான ஆரம்பப்புள்ளி. பீலேவின் வாழ்வியலோடு கலந்திருந்த ‘ஜிங்கா' ஸ்டைலுக்கு விதிக்கப்பட்ட தடை, கால்பந்தில் அவரின் இயங்குதலையே முடக்கிப்போடும் வகையிலான புறக்கணிப்பு.
அத்தனை புறக்கணிப்புகளிலிருந்தும், பீலே திமிறி எழுந்தார். பீலேவின் ஆட்டம் பிரேசிலின் கால்பந்துக்கே புதிய ரத்தம் பாய்ச்சியது. நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியின் எதிர்பார்ப்புகளுள் ஒன்றாக ‘பிரான்ஸ் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வெல்லுமா?' என்பதும் மிக முக்கியப் பேசுபொருளாக இருந்தது. ஏனெனில், நடப்பு சாம்பியனாக இருக்கும் அணிகள் மீண்டும் உலகக்கோப்பையைத் தக்கவைத்ததே இல்லை, ஒரே ஒரு அணியைத் தவிர! அது பிரேசில் மட்டுமே. 1958, 1962 ஆண்டுகளில் அடுத்தடுத்து வென்றது. 1958 உலகக்கோப்பையின்போது பீலேவிற்கு வெறும் 17 வயதுதான். ஆனால், அந்த உலகக்கோப்பையின் நாக் அவுட் போட்டிகளில் மட்டுமே பீலே 6 கோல்களை அடித்திருந்தார். ஒரே தொடரில் ஒட்டுமொத்த தேசத்தின் சொத்தாக மாறிப்போனார். சிலி உலகக்கோப்பையில் காயம் காரணமாக பெரிதாக ஆடவே இல்லை. ஆனாலும் அந்த உலகக்கோப்பையின் மைய விவாதமாக அவரே இருந்தார். 62-ல் விட்டதற்கெல்லாம் சேர்த்து வைத்து ஓய்வு அறிவிப்பிற்குப் பிறகு மீண்டு வந்து 1970-ல் மெக்சிகோ உலகக்கோப்பையில் முரட்டுத்தனமாக ஆடி மூன்றாவது முறையாக பிரேசிலை சாம்பியனாக்கினார்.
இமாலய சாதனைகளைச் செய்தபோதும், தனக்கான பாதையை உருவாக்கிக் கொடுத்த சாண்டோஸ் அணியுடனேயே இறுதிவரை பயணித்தார். வேறு பல கிளப் அணிகள் பீலேவிற்காக வரிசையில் நின்றபோதும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பீலேவை வேறொரு நாட்டு கிளப்பிற்குத் தாரை வார்க்க பிரேசிலும் விரும்பவில்லை. ஓய்விற்குப் பிறகுமேகூட கால்பந்து பெரும் விஸ்தரிப்பு பெறாத அமெரிக்காவிற்குச் சென்றே கால்பந்து ஆடினார். பீலேவினால் அமெரிக்கக் கால்பந்துச் சமூகமே பெரும் பலனையடைந்தது.

பீலேவின் பெரும் பணி மற்றும் சாதனைகளின் சிறுதுளிதான் இவை. கால்பந்தின் இன்றைய தலைமுறை உச்சநாயகர்கள்கூட செய்ய இயலாத சாதனைகளை பீலே அன்றே செய்திருக்கிறார். ஆனால், பீலே அதற்காக மட்டுமே ஆராதிக்கப்படவில்லை. பிரேசில் அணியின் இன்றைய உச்சபட்ச வீரர் நெய்மார் தன் இரங்கல் குறிப்பில், ‘பீலே கால்பந்தை ஒரு விளையாட்டு என்பதைக் கடந்து கலையாக மாற்றினார். ஏழைகளுக்காகவும் கறுப்பினத்தவருக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தார். பிரேசிலுக்கு ஒரு தனி வெளிச்சத்தைக் கொடுத்தார்' என்றிருக்கிறார். பீலேவின் கால்கள் பந்தை உதைக்கத் தொடங்குவதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்புதான் பிரேசிலில் அடிமைமுறையே சட்டரீதியாக ஒழிக்கப்பட்டது. ஆயினும், சமூகரீதியாகக் கறுப்பினத்தவர்கள் மூன்றாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டனர். அப்படியொரு சூழலில் கால்பந்து உலகில் பீலேவின் வருகையும் அதனூடான அவரின் வளர்ச்சியும் ஜிங்கா கலையோடு கூடிய அவரின் ஆட்டமுறையும் பிரேசிலுக்காக உலகக் கோப்பையோடு கையை உயர்த்திய அந்தத் தருணமும் என அத்தனையும் எளியோரின் அரசியல் வெற்றியாகவே பாவிக்கப்பட்டன.
பீலே இறந்த தறுவாயில் ஒரு புகைப்படம் பலராலும் பகிரப்பட்டது. அதில் பீலே ஒரு கால்பந்தைக் கையில் ஏந்தியிருப்பார். ஒரு மெலிதான புன்னகையோடு வசீகரமாக அந்தக் கால்பந்தின் அருகே காதை வைத்து எதையோ கேட்பதைப் போல பீலே பாவனை செய்திருப்பார். ஒருவேளை பீலேவுக்கும் அந்தக் கால்பந்துக்கும் ஒரு கற்பனையான உரையாடல் நிகழ்ந்திருக்குமாயின் அந்தக் கால்பந்து பீலேவிடம் ‘I Miss You!' என்பதைத் தவிர வேறு என்ன சொல்லியிருக்க முடியும்? இன்று உலகமுமே அதைச் சொல்லிக்கொண்டிருக்கிறது ‘We Miss You Pele.'