பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலு அட்டகாசமாக பெர்ஃபார்ம் செய்து வெள்ளிப்பதக்கத்தை வென்றிருக்கிறார். ரியோவில் தங்கம் வென்றதை தொடர்ந்து தொடர்ச்சியாக அவர் வெல்லும் இரண்டாவது பதக்கம் இது.
முதலில் 1.73 மீட்டரிலிருந்து தொடங்கிய மாரியப்பன் அதை முதல் வாய்ப்பிலேயே தாண்டி சிறப்பாக ஆட்டத்தை தொடங்கியிருந்தார். அடுத்தடுத்து 1.77 மீ, 1.80மீ, 1.83 மீ ஆகிய உயரங்களையும் முதல் வாய்ப்பிலேயே தாண்டி ஆச்சர்யப்படுத்தினார். மாரியப்பனுக்கு போட்டியாக 1.83 மீட்டர் வரை இன்னொரு இந்திய வீரரான சரத்குமாரும் முதல் வாய்ப்பிலேயே உயரங்களை தாண்டி சவால் அளித்திருந்தார். ஆனால், சரத் குமாரால் 1.86 மீட்டர் உயரத்தை மூன்று வாய்ப்புகளை எடுத்துக் கொண்ட போதும் தாண்ட முடியவில்லை.

மாரியப்பன் மூன்றாவது முறை 1.86 மீட்டர் உயரத்தை தாண்டினார். முதல் இடத்துக்கு மாரியப்பனுக்கும் அமெரிக்க வீரர் சாமுக்கும் இடையே போட்டி உண்டானது. சாம் 1.88 மீ உயரத்தை தனது மூன்றாவது வாய்ப்பில் தாண்டினார். ஆனால், மாரியப்பனால் மூன்று வாய்ப்புகளை எடுத்துக் கொண்ட போதும் 1.88 மீட்டரை க்ளியர் செய்ய முடியவில்லை. இதனால் வெள்ளிப்பதக்கமே கிடைத்தது. இன்னொரு இந்திய வீரர் சரத் குமார் வெண்கலம் வென்றார்.
தொடர்ச்சியாக இரண்டு பாராலிம்பிக்ஸ்களில் பதக்கம் வெல்வது அரிதான விஷயம். ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா மட்டுமே இதற்கு முன் அந்த சாதனையை செய்துள்ளார். இப்போது மாரியப்பனும் தங்கம் மற்றும் வெள்ளியை தொடர்ச்சியாக வென்று அந்த அரிய பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.