உலக பாராலிம்பிக் சாம்பியன்ஷிப் தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இதையடுத்து, 2020 ஜப்பான் டோக்கியோவில் நடக்கும் பாராலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதிபெற்றுள்ளார்.

துபாயில் நடைபெற்றுவரும் உலக பாரா சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதல் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ஷரத் குமார் வெள்ளிப்பதக்கமும் மாரியப்பன் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
ஆசிய பாரா சாம்பியன்ஷிப்பில் இரண்டு முறை தங்கம் வென்றுள்ள ஷரத் குமார், நேற்று நடந்த போட்டியில் 1.83 மீட்டர் தாண்டி இரண்டாவது இடம் பிடித்தார். 1.80 மீட்டர் தாண்டிய மாரியப்பன் மூன்றாவது இடம் பிடித்தார்.
சேலம் மாவட்டம் பெரியவேடம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன், 2016 ரியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இப்போது, இரண்டாவது முறையாக பாராலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார்.
இதுகுறித்து பேசிய மாரியப்பன், "இந்தப் போட்டியில் என்னுடைய பெஸ்ட்டைத் தரவில்லை. இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம். போட்டி நடைபெற்ற மாலை நேரம் அதிக குளிராக இருந்ததால், சிரமமாக இருந்தது. எனினும், 2020 பாராலிம்பிக்கில் சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.