Published:Updated:

பாராலிம்பிக்கில் இந்திய கொடியேந்தும் `தங்க' மாரி... டோக்கியோவில் வேற மாறி சம்பவம் லோடிங்!

மாரியப்பன்
News
மாரியப்பன்

சக இந்திய வீரர்களே மாரியப்பனுக்கு கடும் போட்டி அளிக்கக்கூடும். ஆனால், மாரியப்பனின் கன்சிஸ்டன்சி அவரை காப்பாற்றும். தங்கம் இல்லாவிட்டாலும் எதாவது ஒரு பதக்கத்தை நிச்சயம் அடிப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

Published:Updated:

பாராலிம்பிக்கில் இந்திய கொடியேந்தும் `தங்க' மாரி... டோக்கியோவில் வேற மாறி சம்பவம் லோடிங்!

சக இந்திய வீரர்களே மாரியப்பனுக்கு கடும் போட்டி அளிக்கக்கூடும். ஆனால், மாரியப்பனின் கன்சிஸ்டன்சி அவரை காப்பாற்றும். தங்கம் இல்லாவிட்டாலும் எதாவது ஒரு பதக்கத்தை நிச்சயம் அடிப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

மாரியப்பன்
News
மாரியப்பன்

பொருளாதார ஸ்திரத்தன்மை, கட்டுக்கோப்பான உடல்வாகு, செதுக்கி செதுக்கி மெருகேற்றும் உயர்தர பயிற்சியாளர்கள் இவை அத்தனையுமே கிடைக்கப்பெற்ற பல இந்திய வீரர்/வீராங்கனைகளே உலக அரங்கில் சரியாக பர்ஃபார்ம் செய்ய முடியாமல் தடுமாறி கொண்டிருக்கின்றனர். ஆனால், இவற்றில் எதுவுமே முறையாக வாய்க்கப்பெறாத மாரியப்பன் தங்கவேலு இன்றைக்கு நம் தேசத்தின் பெருமையாக உயர்ந்து நிற்கிறார். பாராலிம்பிக்கில் இந்தியாவின் தேசியக்கொடியை ஏந்தி வீரர் வீராங்கனைகளை வழிநடத்தி செல்லவிருக்கிறார் மாரியப்பன்.

2016 ரியோ ஒலிம்பிக்ஸ் இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. லண்டன் ஒலிம்பிக்ஸில் 6 பதக்கங்களை வென்றிந்த இந்தியா ரியோ ஒலிம்பிக்ஸில் எப்படியும் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்லும் என பயங்கர எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. ஆனால், வென்றது என்னவோ இரண்டே இரண்டு பதக்கங்கள். ஒட்டுமொத்த இந்தியாவுமே பயங்கர அப்செட். வழக்கம்போல 130 கோடி இந்தியர்களுக்கு வெறும் இரண்டே இரண்டு பதக்கம்தானா என விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருந்தது. இந்தக் களேபரங்களுக்கு நடுவே பாராலிம்பிக்ஸ் என்ற ஒன்று நடைபெறுகிறது என்பதையே பலரும் மறந்திருந்தனர். ஒலிம்பிக்ஸ் அவ்வளவுதான்... இந்தியா தோற்றுவிட்டது... இந்திய வீரர்கள் ஏமாற்றிவிட்டனர் என எங்கு காணினும் புலம்பல் சத்தங்கள்.

மாரியப்பன்
மாரியப்பன்
'கொஞ்சம் பொறுங்கள். இன்னும் எதுவும் முடிந்துவிடவில்லை. நாங்களும் இந்தியர்கள்தான். நாங்களும் ஒலிம்பிக்ஸில்தான் ஆடுகிறோம்' என அத்தனை பேரையும் மீண்டும் தொலைக்காட்சி முன்பு அமர வைத்தார் அந்த சேலத்து சிங்கம் மாரியப்பன் தங்கவேலு.

ஒலிம்பிக்ஸ் கொடுத்த வலி... ஏமாற்றம்... ஏக்கம் அத்தனைக்கும் தீர்வாக அமைந்தது அந்த பாராலிம்பிக்ஸ். 19 வீரர்/வீராங்கனைகளை மட்டுமே அனுப்பியிருந்த இந்தியா நான்கு பதக்கங்களை வென்றது. மாரியப்பன் தங்கவேலு வென்ற தங்கப்பதக்கமும் அதில் அடக்கம். அதிகாலையில் நடைபெற்ற மாரியப்பனின் உயரம் தாண்டும் போட்டியை காண ஒட்டுமொத்த கிராமமும் குழுமியிருந்தது. 1.89 மீட்டருக்கு மாரியப்பன் தாவி குதித்தபோது ஒட்டுமொத்த கிராமமுமே மாரியப்பனுடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆர்ப்பரிப்பில் துள்ளிக்குதித்தது.

இத்தனை நாLகளாக அரவணைக்க தயங்கிய அத்தனை கைகளும் இப்போது போட்டி போட்டுக் கொண்டு மாரியப்பனுக்கு சொந்தம் கொண்டாட வரிசை கட்டியது. மாரியப்பனின் உழைப்பின் பலனாகக் கிடைத்த வெற்றிக்கான அங்கீகாரத்தை பங்குப்போட்டுக்கொள்ள ஒரு தனி கூட்டம் கூடியது. மாரியப்பன் அதையெல்லாம் கறாராக உதறிவிட்டார். வெற்றிக்குத் தன்னுடைய தாயும் பயிற்சியாளரான சத்யநாராயணாவுமே காரணம் என முழு அங்கீகாரத்தையும் அவர்களுக்கே கொடுத்தார். காரணம், ஒன்றுமே இல்லாமல் இருந்தபோதும் மாரியப்பனை தாங்கியது இவர்களுடைய தோள்கள்தான்.

சேலத்தின் பெரியவடுகன்பட்டியில் பிறந்த மாரியப்பன் ஒரு மாற்றுத்திறனாளி மட்டுமல்ல. குடும்ப வன்முறையாலும் பாதிக்கப்பட்டவர்.

அம்மாவுக்கு அப்பா கொடுத்த கஷ்டங்களை என்னால் மறக்கவே முடியாது. சிறுவயதில் என்னையே ஒரு சமயம் தீயிட்டு கொளுத்த முயன்றார்.
மாரியப்பன் தங்கவேலு
 மாரியப்பன் தங்கவேலு
மாரியப்பன் தங்கவேலு

இப்படி பின்நாள்களில் மாரியப்பனே வேதனையுடன் பேசியிருக்கிறார். என்னை மாரியப்பன் தங்கவேலு என குறிப்பிடுவதை நான் விரும்பவில்லை. மாரியப்பன் என குறிப்பிட்டாலே போதும். பாராலிம்பிக்கில் தங்கம் வென்றுவிட்டு மாரியப்பன் கொடுத்த ஸ்டேட்மென்ட் இது. அவரின் சிறுவயது இன்னல்களை உணர வைக்க இதைவிட வலுவான வார்த்தைகளை நம்மால் எழுதிவிட முடியாது.

வறுமை, வன்முறை, உடல் பாதிப்பு இது அத்தனையையும் தாண்டி வர காரணமாக இருந்தவர் அவருடைய அம்மா. காய்கறி வியாபாரம் பார்த்து நான்கு பிள்ளைகளையும் ஆளாக்கினார். வாலிபால் மீது ஆர்வம் கொண்டிருந்த மாரியப்பனுக்கு உடல்வாகு காரணமாக அதில் பங்கேற்க முடியாத சூழல் உண்டானது. மாரியப்பன் துவண்டுவிடவில்லை. பள்ளிகளில் விளையாட்டு நேரங்களின் போது ஓரமாக போய் பாவமாக அமர்ந்து கொள்ளவில்லை. ஆர்வமும் நம்பிக்கையும்தானே எல்லாவற்றுக்கும் அடிப்படை! அது மாரியப்பனிடம் அதிகமாகவே இருந்தது. உயரம் தாண்டுதலில் முழுமையாக கவனம் செலுத்த ஆரம்பித்தார். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் சரியாக வழிகாட்ட தொடர்ச்சியாக போட்டிகளில் வெல்ல தொடங்குகிறார். இந்நிலையில்தான் மாரியப்பன் சத்தியநாராயணா எனும் பயிற்சியாளரின் கண்ணில்படுகிறார். அவர் முன்னாள் தடகள வீரர். இந்நாள் பயிற்சியாளர்.

மாரியப்பனுக்கு முறையாக பயிற்சியளித்தால் தேசத்தின் பெருமையாக உயருவார் என்பதை அப்போதே கணித்துவிட்டார் போல!

கட்டணமே வேண்டாம்... உன் குடும்பம் சிரமத்தில் இருக்கிறதல்லவா அதற்கு கூட நான் பண உதவி செய்கிறேன். நீ என்னிடம் பயிற்சிக்கு மட்டும் வந்தால் போதும் என பயிற்சியாளர்களுக்கே உரிய உள்ளார்ந்த அன்போடு மாரியப்பனை அரவணைத்தார்.

மாரியப்பனுக்கு உயர்தர பயிற்சிகள் வழங்கப்பட்டன. வெளிநாடுகளுக்கு சென்று சவால்மிக்க சூழல்களில் பயிற்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. தாண்டினார்... தடைகள் அனைத்தையும் தாண்டினார். 2016 ரியோ ஒலிம்பிக்கிற்கு முன்பாக T42 உயரம் தாண்டுதல் பிரிவில் உலகளவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருந்தார். மாரியப்பனின் பெயர் வரலாற்றில் இடம்பெற போகிறதென்பது அப்போதே முடிவாகிவிட்டது. பாராலிம்பிக் தொடங்கியது.

சாதாரண மாரி `தங்க' மாரியாக இந்தியாவுக்குத் திரும்பினார். குடும்பத்தினரால் நண்பர்களினால் ஒதுக்கப்பட்டவரை ஒரு தேசமே தோளில் தூக்கிவைத்து கொண்டாடித் தீர்த்தது.
மாரியப்பன்
மாரியப்பன்

மாரியப்பனின் குடும்பச்சூழல் மாறியது. மாரியப்பனின் தாய் பெருமிதம் பொங்க தலைநிமிர்ந்து கௌரவ நடைபோட்டார்.

2016 ரியோ பாராலிம்பிக்கில் இருந்த அதே ஃபார்மோடு அதே செயல்படும் திறனோடு மாரியப்பன் இப்போது இருக்கிறாரா என்பது கொஞ்சம் சந்தேகமே. ஆனால், அவரிடம் ஒரு கன்ஸிஸ்டன்சி இருக்கிறது. ஆசிய பாரா தடகள் சாம்பியன்ஷிப், உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போன்ற பெரிய தொடர்களில் தொடர்ச்சியாக வெண்கல பதக்கத்தை வென்றிருக்கிறார். கடந்த மாதம் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் தடகள வீரர்களுக்கான தேர்விலும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் தடகளத்துக்கு 24 இடங்கள் கிடைத்திருந்தன. அந்த 24 இடங்களுக்கு 72 வீரர்கள் போட்டிபோட்டனர். 1.86 மீட்டர் உயரத்தைத் தாண்டி மாரியப்பன் தனக்கான இடத்தை உறுதி செய்துகொண்டார். வருண் சிங் பாட்டி, சரத்குமார் போன்ற சக இந்திய வீரர்களே மாரியப்பனுக்கு கடும் போட்டி அளிக்கக்கூடும். ஆனால், மாரியப்பனின் கன்சிஸ்டன்சி அவரை காப்பாற்றும். தங்கம் இல்லாவிட்டாலும் எதாவது ஒரு பதக்கத்தை நிச்சயம் அடிப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

மாரியப்பன் இந்த பர்ஃபாமென்ஸ் கணிப்புகளை பற்றியெல்லாம் துளி கூட கவலைப்படவில்லை. '2 மீட்டருக்கு மேல் தாண்டி உலக ரெக்கார்ட் படைத்து தங்கம் வெல்வேன்' என உறுதியாக கூறியிருக்கிறார். T 42 பிரிவில் இப்போதைய உலக ரெக்கார்டாக இருப்பது 1.96 மீ. மாரியப்பன் கடந்த முறை தங்கம் வென்ற போதே 1.89 மீட்டர்தான் தாண்டியிருந்தார்.

இமாலய இலக்கு போல தோன்றினாலும் மாரியப்பன் தாண்டாத தடைகளா? அவர் இலக்கை நிர்ணயித்துவிட்டார் இனி எந்த தடைகளாலும் அவரை தடுக்க முடியாது!