Published:Updated:

ரோஹித், மயாங்க், அஷ்வின், ஷமி, ஜடேஜா... டீம் கோலி முழுக்க மேட்ச் வின்னர்ஸ்! #INDVsSA

Team India
Team India

இரண்டாவது டெஸ்ட் புனேயில் நாளை தொடங்குகிறது. புனே பிட்ச் டெஸ்ட் போட்டிகளுக்கு சவாலானது. தென்னாப்பிரிக்கா மீண்டு வருமா அல்லது இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா என்கிற எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்க இருக்கிறது.

தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப்பைத் தொடங்கியிருக்கிறது இந்தியா. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இன்னும் 18 போட்டிகளில் இந்தியா ஆட வேண்டியுள்ளது. அதில் 10 போட்டிகள் இந்தியாவிலும், 8 போட்டிகள் வெளிநாடுகளிலும் நடக்க இருக்கின்றன.

கேப்டன் கோலி, `ரிவர்ஸ் ஸ்விங்' ஷமி, `டைமிங்' ரோஹித்! - பிளஸ், மைனஸை ஷேர் செய்த ஷோயப் அக்தர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர் பெரிய பரபரப்புகள் இன்றி முடிவடைந்துவிட்ட நிலையில், தென்னாப்பிரிக்காவுடனான ஹோம் சீரிஸ் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியது. ரோஹித் ஷர்மா ஓப்பனராக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெயிப்பாரா, அஷ்வின் மீண்டும் தனது இடத்தைத் தக்கவைப்பாரா இல்லை, இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரை வென்று சாதனைபடைக்குமா எனப் பல கேள்விகளுடன்தான் விசாகப்பட்டினத்தில் முதல் டெஸ்ட் தொடங்கியது. இந்திய அணியில் புதிய அறிமுகங்கள் ஏதும் இல்லை. ஆனால், தமிழரான சீனுரான் முத்துசாமி, தென்னாப்பிரிக்க அணியில் அறிமுகமானார்.

முதல் டெஸ்ட்டின் முக்கிய ஹைலைட்ஸ் மட்டும் இங்கே...

ரோஹித் ஷர்மா

பெரிதாக சோபிக்கமாட்டார் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில், இரண்டு இன்னிங்ஸிலும் சதங்கள் அடித்து டெஸ்ட்டிலும் தான் 'ஹிட்மேன்' என்பதை நிரூபித்தார் ரோஹித் ஷர்மா. 176 ரன்கள் & 127 ரன்கள் என அவர் அடித்த இந்த இரண்டு சதங்களும், இன்னும் ஓர் ஆண்டுக்கு நிச்சயம் அவரை டெஸ்ட் அணியில் நிறுத்தும். இரண்டு இன்னிங்ஸிலுமே 10 ஓவர்கள் வரை பொறுமைகாத்தார் ரோஹித். ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வந்த பந்துகளைப் பேட்டால் தொட முயற்சி செய்யவில்லை. ஆனால், பந்து கொஞ்சம் பழசானதும் தனது ஒன் டே கிரிக்கெட் ஃபார்முலாவைக் கையில் எடுத்தார். பந்துகள் நாலாபக்கமும் தெறித்து ஓட ஆரம்பித்தன.

Rohit Sharma
Rohit Sharma

ரோஹித்தின் இன்னிங்ஸைப் பார்த்த இந்திய ரசிகர்கள், அனைவர் கண்முன்பும் ஷேவாக் வந்து போனதை மறுப்பதற்கில்லை. 13 சிக்ஸர்கள் அடித்து ஒரே டெஸ்ட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற 23 வருட சாதனையை உடைத்திருக்கிறார் ரோஹித். இதற்கு முன் வாசிம் அக்ரம் அடித்த 12 சிக்ஸர்களே சாதனையாக இருந்தது. அதேபோல் அனைத்து வகையான ஃபார்மேட்டிலும் 10-க்கு மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார், ரோஹித்.

மயாங்க் அகர்வால்

Mayank Agarwal
Mayank Agarwal

ரோஹித்துக்கு துணையாக ஆடிக்கொண்டிருக்கிறார் என்று நினைத்தவர்களுக்கு இரட்டை சதத்தைப் பரிசாக அளித்தார், மயாங்க் அகர்வால். முதல் நாள் வீசிய ரோஹித் அலையை இரண்டாவது நாள் தன் பக்கமாகத் திருப்பினார், மயாங்க் அகர்வால். அதுவும் 215 ரன் என்ற இமாலய ஸ்கோர். 23 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் எனத் தென்னாப்பிரிக்காவின் பெளலர்களைத் தூக்கம் இழக்கவைத்தார். பெளலர்களின் லைன் அண்டு லென்த்தை சரியாகப் படித்து, ஃபீல்டிங் செட்-அப்பை சரியாகப் புரிந்து, மோசமான பந்துகளை மட்டுமே அடித்து என... மயாங்க் ஆடிய இன்னிங்ஸ், மிகப்பெரிய மெச்சூர்டு வீரர்கள் ஆடியது போன்றதொரு இன்னிங்ஸ். மயாங்கிற்கு ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது.

அஷ்வின்

ashwin
ashwin

கிட்டத்தட்ட ஓர் ஆண்டாக சர்வதேசப் போட்டிகளில் விளையாட வாய்ப்பளிக்காமல் தத்தளிக்க விடப்பட்டவர், வாய்ப்பு கிடைத்த முதல் டெஸ்ட்டிலேயே அசரடித்தார். முதல் இன்னிங்ஸில் மட்டும் 7 விக்கெட்டுகள். எல்லாமே முக்கியமான விக்கெட்டுகள். 66 டெஸ்ட்டில் 350 விக்கெட்டுகள் எடுத்து முரளிதரன் செய்த உலக சாதனையை சமன் செய்திருக்கிறார், அஷ்வின்.

ஜடேஜா

இந்தியாவுக்குக் கிடைத்த வரம், ஜடேஜா. நாள் முழுக்க ஒரு எண்டில் இருந்து பெளலிங் போடச் சொன்னால்கூட சலிக்காமல் தொடர்ந்து பெளலிங் போட்டுக்கொண்டே இருப்பார். ஜடேஜா மாதிரி ஒரு ஓவரை வேகமாகப் போட்டு முடிக்கும் பெளலர் யாரும் இல்லை. 44 டெஸ்ட்டுகளில் 200 விக்கெட்டுகள் என்கிற சாதனையைப் படைத்திருக்கிறார் இந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர். கடைசி நாளில், ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் எடுத்ததெல்லாம் வேற லெவல் மாஸ்!

முகமது ஷமி

பேட்டிங்கில் இந்திய அணியின் செகண்ட் இன்னிங்ஸ் ஆபத்பாந்தவன் வி.வி.எஸ். லக்‌ஷ்மண் என்றால், பெளலிங்கிற்கு முகமது ஷமி. பந்தை இருபுறமும் ஸ்விங் செய்வதிலும் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதிலும் ஷமியின் எக்ஸ்பர்ட்டீஸ் கூடிக்கொண்டே போகிறது. கடைசி நாளில் யாரிடம் பெளலிங்கைக்கொடுக்கலாம் என கோலி யோசிக்கவேண்டிய அவசியமே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு ஷமியிடம் கொடுக்கலாம். 5-வது நாள் முதல் செஷனில் பவுமா, டுப்ளெஸிஸ், டிகாக் என 3 முக்கிய பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து போல்ட் ஆக்கி, தென்னாப்பிரிக்காவுக்கு ஷாக் கொடுத்தார் ஷமி.

Mohammed Shami
Mohammed Shami

தென்னாப்பிரிக்காவைப் பொறுத்தவரை முதல் இன்னிங்ஸில் டீன் எல்கர் 160 ரன்களும், டிகாக் 111 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 9-வது விக்கெட்டுக்கு டேன் பீய்ட்டும், சினுரான் முத்துசாமியும் அடித்த 91 ரன்கள், பார்ட்னர்ஷிப் மட்டுமே ஆறுதல்.

கிரிக்கெட் என்றுமே ஒரு குழு விளையாட்டு. மேலே சொன்ன 5 வீரர்கள் இல்லாமல் புஜாரா அடித்த 81 ரன்கள் பங்களிப்பையும் சேர்த்து, இந்திய அணி ஒரு குழுவாக வெற்றிபெற்றுள்ளது.

மீண்டு வந்துவிட்டார் அஷ்வின்... ஆனால், ஓரங்கட்டப்பட்டது ஏன்?! #AshwinRavi

ஒரு காலத்தில், ஒரு வீரரை மட்டுமே நம்பி ஆடிக்கொண்டிருந்த இந்திய அணியில், இப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பது பெரிய சாதனை. கேப்டன் கோலி வெற்றிபெற்றுக்கொண்டேயிருக்கிறார். ஆனால், வெற்றிக்கான உழைப்பில் அனைவரது பங்களிப்பும் மிளிர்வதுதான் இந்தியாவுக்கான வெற்றி!

பின் செல்ல